யுஎஸ் ஓபன் அரையிறுதியில் பயஸ், போபண்ணா ஜோடிகள் மோதல்

யுஎஸ் ஓபன் அரையிறுதியில் பயஸ், போபண்ணா ஜோடிகள் மோதல்
Updated on
1 min read

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடியும், இந்தியாவின் ரோஹன் போபண்ணா - சீன தைபேவின் யங் ஜன் சான் ஜோடியும் மோதுகின்றன.

பயஸ் - ஹிங்கிஸ் ஜோடியை எதிர்த்து விளையாடவிருந்த ருமேனியாவின் சைமோனா ஹேலப் - ஹாரியா டீக்காவ் ஜோடி போட்டியிலிருந்து விலகியதால் பயஸ் ஜோடி காலிறுதியில் விளையாடாமலேயே அரையிறுதிக்கு முன்னேறியது.

போபண்ணா - யங் ஜன் சான் ஜோடி தங்களின் காலிறுதியில் 7-6 (7), 5-7, 13-11 என்ற செட் கணக்கில் சீனா தைபேவின் சூ வெய் - பின்லாந்தின் ஹென்றி கான்டினென் ஜோடியைத் தோற்கடித்தது.

இதனிடையே, ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ருமேனியாவின் புளோரின் மெர்ஜியா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்த ஜோடி தங்களின் முந்தைய சுற்றில் 6-7 (4), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் கனடாவின் டேனியல் நெஸ்டர்-பிரான்ஸின் எட்வர்ட் ரோஜர் வேஸலின் ஜோடியைத் தோற்கடித்தது. போபண்ணா ஜோடி தங்களின் காலிறுதியில் பிரிட்டனின் டொமினிக் இங்லாட்-ஸ்வீடனின் ராபர்ட் லின்ட்ஸ்டெட் ஜோடியை எதிர்கொள்கிறது.

இதனிடையே, ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி கண்டார். கடந்த 5 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆரம்ப கட்ட சுற்றில் முர்ரே தோற்றது இதுவே முதல்முறையாகும்.

அதேநேரத்தில் ஸ்விட்சர்லாந்து வீரர்களான ரோஜர் ஃபெடரர், ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, ருமேனிய வீராங்கனை சைமோனா ஹேலப், பெலாரஸின் விக்டோரியா அசரென்கா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in