

7 அடி 6 அங்குல உயரம், 23-ம் நம்பர் ஷூ, செருப்பு, 53 செ.மீ. பேண்ட் உயரம் என்று பிரம்மாண்டத்தைக் கொண்டுள்ள இளம் கிரிக்கெட் வீரர் சர்வதேச அரங்கில் கால்பதிக்க பாகிஸ்தானில் தீவிரமாகப் பயிற்சி எடுத்து வருகிறார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் குவாலண்டர்ஸ் அணியில் முடாசிர் குஜ்ஜார் எனும் இளம் வீரர் பயிற்சி எடுத்து வருகிறார். ஆனால், நல்ல வேளை வேகப்பந்துவீச்சாளராக இல்லை. சுழற்பந்துவீச்சாளராகப் பயிற்சி எடுத்துவருவது சர்வதேச அணிகளுக்கு ஆறுதலாகும்.
லாகூர் நகரைச் சேர்ந்த 21 வயதாகும் முடாசிர் குஜ்ஜார் வீரர்தான் அடுத்த சர்வதேச கிரிக்கெட்டை அச்சுறுத்தப் போகிறார். தற்போது கிரிக்கெட் உலகில் உயரமான வீரரும் பாகிஸ்தானில்தான் இருக்கிறார்.
பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளர் முகமது இர்பான் தற்போது கிரிக்கெட்டில் மிக உயரமான வீரர். இவரின் உயரம் 7.1 அடியாகும். ஆனால், முடாசிர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்தால், உயரமான வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.
முடாசிருடன் பிறந்த சகோதரி, 3 சகோதரர்கள் அனைவரும் இயல்பான உயரத்தில்தான் இருக்கிறார்கள். ஆனால், முடாசிர் மட்டும்தான் இயல்புக்கும் மேலான உயரத்தைப் பெற்றுள்ளார்.
முடாசிரின் அதிவேகமான வளர்ச்சியைப் பார்த்த பெற்றோர் கராச்சி, லாகூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்குக் கடந்த 2017-ம் ஆண்டு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் முடாசிரைப் பரிசோதனை செய்து, இது ஹார்மோன் வளர்ச்சியால் உருவாகும் உயரம் எனக் கைவிரித்துவிட்டனர்.
முடாசிரின் அதிகமான உயரம் அனைவரையும் வியக்கவைக்கும் வகையில் இருந்தாலும், தனிப்பட்ட ரீதியில் பல்வேறு பிரச்சினைகளை அவருக்கு உருவாக்கியுள்ளது.
அதுகுறித்து முடாசிர் ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், “நான் உயரமாக இருப்பதால், பள்ளி, கல்லூரிகளில் பெரும் கிண்டலுக்கு ஆளானேன். என்னால் சராசரி மனிதர்களைப் போல் பேருந்து, சைக்கிள் ரிக்ஷாவில் செல்ல முடியாது. காரில் கூட செல்ல முடியாது. கால்களை வைக்க முடியாததால், பெரும் சிரமப்படுகிறேன்.
என் கால்களுக்கு எங்கும் செருப்பு, ஷூ கிடைக்காது என்பதால், தனியாக ஆர்டர் கொடுத்துச் செய்கிறேன். எனது ஷூ வின் நீளம் 23 இன்ச், பேண்ட் உயரம் 54 செ.மீ. என்னால் கார் ஓட்ட முடியாது. இருந்தாலும் ஓரளவு சமாளித்து பைக் ஓட்டுவேன்.
எப்படி இருந்தாலும் இந்த உயரம் எனக்கு இறைவன் அளித்தது. இந்த உயரத்தால் நான் ஓடுவதில் எந்தவிதமான சிரமமும் இல்லை. தற்போது லாகூர் குலாண்டர் அணியில் இணைந்து கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறேன்.
கரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக பயிற்சி எடுக்க முடியவில்லை. விரைவில் சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு வருவேன். உலகிலேயே உயரமான கிரிக்கெட் வீரர் எனும் பெருமையைப் பெறுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.