

சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்விகளைக் கண்டித்து கேப்டன் தோனியின் 5 வயது மகள் ஸிவா தோனிக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் இந்தியாவில் மிகமிகப் பிரபலம்தான், ஆனால் விளையாட்டு விபரீதமாகிக் கொண்டிருக்கிறதோ என்று அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் விஷத்தனமான கருத்துக்களும் ஆவேசங்களும், அசிங்கமான மிரட்டல்களும் வசைகளும் கிரிக்கெட்டை முன் வைத்து சமூக ஊடகங்களில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
இந்த விஷத்தனமான தாக்குதல் தற்போது சிஎஸ்கே அணி கேப்டன் குடும்பத்திலும் நுழைந்துள்ளது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அன்று தோல்வியடைந்தது. இதனையடுத்து கேதார் ஜாதவ்வை இன்னதுதான் என்று இல்லாமல் கடுமையான துவேஷக் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவின.
பொதுவாக வீரர்களுக்கு எதிராக கிளம்பும் கிண்டல் கேலிகள் பல வேளைகளில் வீரர்களின் குடும்பத்தின் மீதும் பரவும் அபாயம் நடந்து கொண்டுதான் உள்ளது, இதை நாம் விராட் கோலி விஷயத்தில் நிறையவே பார்த்துள்ளோம்.
தங்களை ரசிகர்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் சில சமயங்களில் அத்துமீறி வீரர்களின் குடும்பத்தினரை இழுப்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இது மிகவும் மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது, பொதுவாகவே ஆணியக் கலாச்சாரத்தில் இருக்கும் பெண் விரோத கருத்துக்கள் இங்கும் பலவிதங்கள் தலைதூக்கி வருகின்றன. ஆனால் குழந்தையைக் குறிவைத்து பாலியல் அச்சுறுத்தல் விடுப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில ட்வீட்கள், இன்ஸ்டாகிராம் பக்கங்கள், முகநூல் பக்கங்களில் தோனியின் 5வயது மகள் ஸிவா தோனிக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பலரது கண்டனங்களையும், விமர்சனங்களையும் ஈர்த்துள்ளது
தோனி, சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒழுங்காக விளையாடவில்லையென்றால் தோனியின் ஐந்து வயது மகளான ஜிவா தோனியை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவோம் என்று அருவருக்கத்தக்க வகையில் பதிவிட்டுவருவது கடும் சர்ச்சையாகியுள்ளது.