டெல்லி அணி மீதிருந்த பிடியை நழுவ விட்டோம், 15-20 ரன்கள் கூடுதலாக வழங்கி விட்டோம்: ஸ்டீவ் ஸ்மித் 

டெல்லி அணி மீதிருந்த பிடியை நழுவ விட்டோம், 15-20 ரன்கள் கூடுதலாக வழங்கி விட்டோம்: ஸ்டீவ் ஸ்மித் 
Updated on
1 min read

டெல்லி அணி மீதிருந்த பிடியை நழுவ விட்டு விட்டோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி கிடுக்கிப் பிடி பந்து வீச்சிலும் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. ஷார்ஜா மைதானம் சிறிது என்றாலும் பிட்ச் முதலில் இருந்தது போல் இல்லை, கொஞ்சம் பந்துகள் மெதுவாக வந்தன. இதனால் சேசிங் கடினமானது.

ஷிம்ரன் ஹெட்மையர் 24 பந்துகளில் 45 ரன்களையும், ஸ்டாய்னிஸ் 30 பந்துகளில் 39 ரன்களையும் விளாசியதால் டெல்லி ரன்கள் வெற்றி இலக்காக மாறியது.

கேகிசோ ரபாடா (3/35), ஸ்டாய்னிஸ் (2/17), ஆட்ட நாயகன் அஸ்வின் (2/22) ஆகியோர் ராஜஸ்தானுக்கு ஆணியடிக்க அந்த அணி 19.4 ஓவர்களில் 138 ரன்களுக்கு மடிந்தது.

இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறும்போது, “பிட்ச் ஸ்லோ ஆகி விட்டது. முதல் 2 போட்டிகளில் இருந்தது போல் இல்லை. முதலில் அவர்களை நாங்கள் ரன்கள் அடிக்கவிட்டோம். பிடியை நழுவ விட்டதால் அவர்கள் 10-15 ரன்களைக் கூடுதலாக எடுத்தனர்.

விரட்டலின் போது மீண்டும் விக்கெட்டுகளை இழந்தோம். நான் ஆட்டமிழந்தேன், பிறகுவிக்கெட்டுகள் சீராக விழுந்தன. மெதுவான பிட்சில் 180+ ஸ்கோரை விரட்டுவது சுலபமல்ல.

180 ரன்கள் விரட்டக் கடினம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். பார்ட்னர்ஷிப் அமையவில்லை.

இந்தத் தொடரில் எங்கள் பீல்டிங் இதுவரை திருப்திகரமாக இல்லை. ஆகவே இந்தப் போட்டியில் இரண்டு கேட்ச்கள் 2 ரன் அவுட்களைச் செய்தது அருமையான விஷயம். பீல்டிங்கில் கொஞ்சம் கூடுதல் முயற்சியைப் போட்டது நல்ல விஷயமாக உள்ளது.

ராகுல் திவேஷியா நன்றாக வீசினார். அவர் பேட்ஸ்மெனை நன்றாக கணிக்கிறார். பந்து வீச்சில் அவர் அபாரம்தான். பேட்டிங்கிலும் சில நல்ல அடிகளை அடித்தார். அவர் எங்களுக்கு மதிப்பு மிக்க ஒரு வீரர்.

இன்னும் நிறைய ஒர்க் செய்ய வேண்டியுள்ளது. பேட்டிங் சரியாக இல்லை. கடந்த 3 போட்டிகளில் டாப் ஆர்டர் பேட்டிங் சொதப்பலாக உள்ளது ஏமாற்றமளிக்கிறது.

பந்து வீச்சிலும் சரியான திட்டமிடலை செயல்படுத்த முடியாமல் உள்ளது. எளிதானதல்ல, ஏதோ ஒன்றைத் தவறாகச் செய்கிறோம் அது எங்களுக்கு தோல்வியை ஏற்படுத்துகிறது, ஸ்டோக்ஸ் தனிமையிலிருந்து மீண்டு நாளை வருகிறார். அவருக்கு போதிய பயிற்சி இல்லை. நாளை மறுநாள் அவரை விளையாட வைக்க முடியுமா என்று யோசிப்போம்” என்றார் ஸ்மித்.

டெல்லி கேப்பிடல்ஸ் இந்த வெற்றி மூலம் முதல் இடம் பிடித்தது, ராஜஸ்தான் ராயல்ஸ் 7ம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in