

அதீத நம்பிக்கையால் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து விட்டேன். இனி அதுபோன்று நடக்காது என இந்திய குத்துச் சண்டை வீரர் விகாஸ் கிரிஷன் தெரிவித்தார்.
தாய்லாந்து தலைநகர் பாங் காக்கில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டி யில் ஆடவர் 75 கிலோ எடைப் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன் னேறிய விகாஸ் கிரிஷன், அதில் உஸ்பெகிஸ்தான் வீரர் பெக்டெமிர் மெலிகுஸியேவிடம் தோல்வி கண்டார். இதனால் விகாஸுக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.
இந்த நிலையில் நாடு திரும்பிய அவர், டெல்லியில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: வெள்ளிப் பதக்கம் வெல்வதற்காக பங்காக் செல்லவில்லை. தங்கப் பதக்கம் வெல்லவே விரும்பினேன். ஆசிய சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி எனது வாழ்க்கையில் மிகக் கடினமான போட்டி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதில் நான் வென்றிருக்க வேண்டும். மெலிகுஸியேவைப் பற்றி நான் கேள்விப்பட்டபோது அவருக்கு 19 வயது என்பது தெரியவந்தது. அதனால் அவரை எளிதாக வீழ்த்தி விடலாம் என்ற அதீத நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டுவிட்டது.
வெற்றி நமக்குத்தான் என்ற அதீத நம்பிக்கையோடு இருந்து விட்டேன். ஆனால் நானும் 19 வயதில்தான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றேன் என்பதை மறந்துவிட்டேன். எனவே மெலிகுஸியேவும் அபாயகரமான வீரர் என்பதை நான் உணர்ந்திருக்க வேண்டும். அந்தத் தோல்வியை எப்படி சமாளிப்பது என்பதுகூட எனக்குத் தெரியவில்லை என்றார்.