அகர்வால் விரைவாக ரன் அவுட் ஆனது துரதிர்ஷ்டம்; கேப்டனாக தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்: கே.எல்.ராகுல் ஒப்புதல்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல்: படம் உதவி | ட்விட்டர்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல்: படம் உதவி | ட்விட்டர்
Updated on
2 min read

மயங்க் அகர்வால் விரைவாக ரன் அவுட் ஆனதுதான் துரதிர்ஷ்டம். அதன்பின்புதான் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கியது. கேப்டனாக தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியிடம் 69 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் சேர்த்தது. 202 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.5 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

முதல் 5 ஓவருக்குள் 2 முக்கிய விக்கெட்டுகளை பஞ்சாப் அணி இழந்தது. முக்கிய பேட்ஸ்மேன் அகர்வால் (9), ராகுல் (11) ரன்களில் ஆட்டமிழந்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. கடைசி 7 விக்கெட்டுகளை வெறும் 27 ரன்களுக்குள் பஞ்சாப் அணி இழந்தது தோல்விக்கு முக்கியக் காரணமாகும்.

இந்தத் தோல்வி குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் போட்டி முடிந்தபின் கூறியதாவது:

''பவர்ப்ளே ஓவருக்குள் நாங்கள் விக்கெட்டுகளை இழந்தபோதே ஆட்டம் கடினமாகப் போகிறது என்பதை உணர்ந்துவிட்டேன். குறிப்பாக இந்த ஆட்டத்தில் 6 பேட்ஸ்மேன்களுடன் மட்டுமே களமிறங்கினோம்.

அதிலும் மயங்க் அகர்வால் விரைவாக ரன் அவுட் ஆனதே எங்களுக்குச் சிறப்பான தொடக்கமாக அமையவில்லை, துரதிர்ஷ்டமாக அமைந்தது. அந்த விக்கெட்தான் எங்களுக்குப் பேரழிவுக்குக் காரணமானது.

எங்கள் பேட்ஸ்மேன் எப்படி அடித்தாலும் அது மேலே பறந்து எதிரணி ஃபீல்டர்கள் கையில் கேட்ச்சாக மாறியது. கடந்த 5 போட்டிகளாக எங்கள் அணி டெத் பவுலிங்கில் திணறிவந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் ஓரளவுக்கு நன்றாகப் பந்துவீசினோம்.

எங்கள் வீரர்கள் நல்ல துணிச்சலை வெளிப்படுத்தி, ஆட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடக்கத்தில் சன்ரைசர்ஸ் அணியின் ரன் ரேட்டைப் பார்த்தபோது 230 ரன்களைக் கடந்துவிடும் என்று எண்ணினோம்.

பூரனின் பேட்டிங்கைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. சிறப்பாக பேட்டிங் செய்தார். இதேபோன்று அனைத்துப் போட்டிகளிலும் கடந்த ஆண்டு பேட்டிங் செய்திருந்தால், வாய்ப்பு கிடைத்திருக்கும்.

இளம் வீரர் பிஸ்னோய் பயமில்லாமல் பவர்ப்ளே ஓவரில் பந்துவீசினார். கடைசிக் கட்டத்திலும் நன்றாக கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். மிகவும் ரசித்து பிஸ்னோய் பந்துவீசினார். எங்கள் வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள், பிரச்சினைகளைப் புரிந்து கொண்டார்கள். கேப்டனாக தோல்விக்குப் பொறுப்பேற்று, அவர்களின் தோள்களில் எனது கரங்களை ஆதரவாக வைக்க வேண்டும்.

எங்கள் அணியில் ஒவ்வொரு வீரரும் திறமைசாலிகள். சிலநேரம் திறமை வெளிப்படாது. அதுவரை அவர்களுடன் பொறுமையாகச் செல்ல வேண்டும்''.

இவ்வாறு கே.எல்.ராகுல் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in