Last Updated : 09 Oct, 2020 07:23 AM

 

Published : 09 Oct 2020 07:23 AM
Last Updated : 09 Oct 2020 07:23 AM

சன்ரைசர்ஸ் பிரம்மாண்ட வெற்றி: 6 ஓவர்களில் பஞ்சாப் ஆட்டம் முடிந்தது: ரஷித் கான் மாயஜாலம்: பேர்ஸ்டோ, வார்னர் மிரட்டல்: பூரன் போராட்டம் வீண்


பேர்ஸ்டோ, வார்னரின் அதிரடி பாட்னர்ஷிப், ரஷித் கானின் துல்லியமான பந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 22-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் சேர்த்தது. 202 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.5 ஓவர்களில் 132 ரன்களுக்குக் ஆட்டமிழந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பிரமாண்ட வெற்றி

இந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி முதல் முறையாக 200 ரன்களை நேற்று கடந்தது. ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது மிகப்பெரிய வெற்றியாக சன்ரைசர்ஸ் வெற்றி பார்க்கப்படுகிறது.

வார்னர், பேர்ஸ்டோ கூட்டணி 160 ரன்கள் சேர்த்துப் பிரி்ந்தனர். இந்த ஐபிஎல் தொடரில் தொடக்கக் கூட்டணி 150 ரன்களைக் கடப்பது இது 2-வது முறையாகும்.

இதற்கு முன் சிஎஸ்கேவின் டூப்பிளசிஸ், வாட்ஸன் ஜோடி பஞ்சாப்பை பதம் பார்த்து 10 விக்கெட்டில் வெற்றி பெற வைத்தனர், இப்போது வார்னரும், பேர்ஸ்டோவும் அதே பஞ்சாப் அணிக்கு எதிராக முத்திரை பதித்துவிட்டார்கள்.

அதிரடியாக ஆடிய வார்னர் 52 ரன்களும்(40பந்து ஒரு சிக்ஸ், 5பவுண்டரி),பேர்ஸ்டோ 97 ரன்கள்(55பந்துகள் 7பவுண்டரி,6சிக்ஸர்கள்) சேர்த்து வெற்றிக்கு முத்தாய்ப்பாக இருந்தனர். 97 ரன்கள் சேர்த்த பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

பூரன் ஆறுதல்

பஞ்சாப் அணியில் போராடிய நிகோலஸ் பூரன், 17 பந்துகளில்அரைசதம் அடித்து நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார். இதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சஞ்சுசாம்ஸன் 19 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 போட்டிகளில் 3 வெற்றிகள், 3 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 6 போட்டிகளில் தொடர்ந்து 4-வது தோல்வியைச் சந்திக்கிறது. ஒரு வெற்றி, 5 தோல்விகள், என 2 புள்ளிகளுடன் 8-வதுஇடத்தில் பஞ்சாப் அணி இருக்கிறது.

கடந்த 3 போட்டிகளில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வெற்றிக்கு அருகே வந்து சில ரன்களில் தோல்வி அடைந்தது. அதேபோலத்தான் இந்தப் போட்டியிலும் நடந்தது. 10 ஓவர்கள் வரை பஞ்சாப் அணியின் ரன்ரேட் அருமையாக இருந்தது. ஆனால், அடுத்த 6 ஓவர்களில் ஆட்டமே முடிந்துவிட்டது.

105 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த பஞ்சாப் அணி அடுத்த 27 ரன்களில் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமான தோல்வியைச் சந்தித்து.

ரஷித் கான் துணை

சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு பேர்ஸ்டோ, வார்னரின் பேட்டிங் எந்த அளவு முக்கியக் காரணமோ, அதைபோல, பந்துவீச்சாளர்களும் போட்டியை விரைவாக முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார்கள். குறிப்பாக ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் பேட்ஸ்மேன்களை மிரளவிட்டார். முக்கியப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் இல்லாத நிலையில் பஞ்சாப் அணியை சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் சுருட்டியிருப்பது பாராட்டுக்குரியது

கலீல் அகமது, நடராஜன் இருவரும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 6 ரன்ரேட் வீதம் கொடுத்து தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வழக்கமாக 5 முதல் 6 பந்துவீச்சாளர்களைக் கையாளும் கேப்டன் வார்னர் நேற்று 4 பந்துவீச்சாளர்களை வைத்தே பஞ்சாப் அணியின் கதையை முடித்துவிட்டார்.

அதிரடிக் கூட்டணி

பேட்டிங்கில் வார்னர், பேர்ஸ்டோ கூட்டணி மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளனர். கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிராக இருவரும் அடித்த அடியை யாரும் மறந்திருக்க முடியாது. அதே மீண்டும் நினைவுபடுத்தினர். வார்னர் ஐபிஎல் தொடரில் தனது 50-வது அரைசதத்தை நிறைவு செய்தார். இருவரும் ஆட்டமிழந்தபின் சன்ரைசர்ஸ் அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் மளமளவென சரிந்தனர்.

இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணியில் வார்னர், பேர்ஸ்டோ, வில்லியம்ஸன் தவிர்த்து நடுவரிசையில் நிலையாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் இல்லை என்பது நேற்று வெளிப்பட்டுவிட்டது.

பஞ்சாப் பலவீனம்

இதேபோன்ற பலவீனம்தான் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கும் இருக்கிறது. ராகுல், அகர்வால் ஆட்டமிழந்தபின் ஆட்டத்தில் பெரிய சறுக்கல் விழுந்தது. பூரன் எடுத்து நிலைநிறுத்தியும், அவருக்கு கைகோர்த்து பேட் செய்ய ஸ்திரமான பேட்ஸ்மேன் இல்லை.

இது பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய பலவீனமாகும். ராகுல், அகர்வாலை விரைவாக ஆட்டமிழக்கச் செய்துவிட்டால், அடுத்த சிறிது நேரத்தில் பஞ்சாப் அணியின் கதை முடிந்தவிடும் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது.

இந்தப் போட்டியில் ஒரே ஆறுதல் பூரன் 77 ரன்கள்(37பந்துகள், 7சிக்ஸர்,5 பவுண்டரி) சேர்்த்ததுதான். இந்த ஐபிஎல் சீசனில் விரைவான அரைசதத்தை 17 பந்துகளில் எட்டினார். பூரனின் பேட்டிங் மட்டும்தான் ஆறுதல். பூரனின் 77 ரன்கள் தவிர்த்து அணியில் அதிகபட்ச ரன்கள் 11 என்பது வேதனைக்குரியது.

ஆடுகளம் நேற்று வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்து நன்றாக எழும்பி வந்தது. ஆனால் லைன்-லென்த்தில் பந்துவீசாமல் ஷார்ட் பிட்சாக பெரும்பாலும் வீசி பஞ்சாப் வேகப்பந்துவீச்சாளர்கள் பேர்ஸ்டோ,வார்னரிடம் வாங்கிக்கட்டிக்கொண்டனர்.

மோசமான பந்துவீச்சு

பஞ்சாப் அணியில் 6 பந்துவீச்சாளர்களில் பிஸ்னோய் தவிர மற்ற 5 பேரும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசவில்லை, ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். இது தோல்விக்கு மிகப்பெரிய காரணம்.
15 ஓவர்கள் வரை பேர்ஸ்டோ, வார்னர் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறிய பஞ்சாப் பந்துவீச்சாளர்கள், கடைசி 5 ஓவர்களில் 41 ரன்களுக்கு 6 விக்கெட்டை வீழ்த்தியும் பயனில்லை. ஒட்டுமொத்தத்தில் பஞ்சாப் அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நம்பிக்கையிழந்துவிட்டது.

விக்கெட் சரிவு

202 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன்தான் பஞ்சாப் அணி களமிறங்கியது. 200 ரன்களை தொட்டுவிட்டாலே அது கடினம் என்று சேஸிங் அணிக்கு தெரிந்து அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது.
அதிரடியான தொடக்கத்தை அளித்துவரும் அகர்வால், ராகுல் கூட்டணி தங்கள் திட்டத்தை சரியாகத்தான் செயல்படுத்தி அதிரடியாகத் தொடங்கினர். ஆனால் ரன் சேர்க்க வேண்டிய அழுத்தம் விரைவாக விக்கெட்டுகளை இழக்க வைத்தது.

2-வது ஓவரில் அகர்வாலை 9 ரன்னில் வார்னர் ரன்அவுட் செய்தார். அடுத்த வந்த சிம்ரன் சிங் 11 ரன்னில் கலீல் அகமது பந்துவீச்சில் வெளியேறினார். ராகுல் 11 ரன்னில் அபிஷேக் பந்துவீச்சில் வெளியேறினார். 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பஞ்சாப் அணி.

விளாசல் பூரன்

4-வது விக்கெட்டுக்கு பூரன், மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தனர். மேக்ஸ்வெல் நிதானமாக பேட் செய்ய, பூரன் வெளுத்து வாங்கினார். அதிலும் சமத் பந்துவீ்ச்சில் 4 சிக்ஸர்,ஒருபவுண்டரி என 28 ரன்கள் சேர்த்தார். 17 பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்கோரை உயர்த்தி நம்பிக்கை அளித்தார்.

10.3 ஓவர்களில் பஞ்சாப் அணி 100 ரன்களைக் கடந்து நம்பிக்கையளித்தது. ஆனால், 11வது ஓவரில் மேக்ஸ்வெல் 7 ரன்னில் கார்க்கால் ரன் அவுட் செய்யப்பட்டார். இந்த விக்கெட்தான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. பல கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்ட மேக்ஸ்வெல் 6 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட 15 ரன்களைத் தாண்டவில்லை என்பது வேதனை.

தோல்வி உறுதி

நம்பிக்கை அளித்தவந்த பூரன் 77 ரன்னில் ரஷித் கான் பந்துவீச்சில் வெளியேறியவுடன் பஞ்சாப் தோல்வி உறுதியானது. அதன்பின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை சரியத்தொடங்கின.

மன்தீப்சிங்(6), முஜிபுர் ரஹ்மான்(1), ஷமி, காட்ரெல், அர்ஸ்தீப் சிங் டக்அவுட் என வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். 105 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த பஞ்சாப் அணி அடுத்த 27 ரன்களில் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது.

16.5 ஓவர்களில் 132 ரன்களுக்கு பஞ்சாப் அணி ஆட்டமிழந்து 69ரன்னில் தோல்வி அடைந்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, நடராஜன் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

வலுவான தொடக்கம்

முன்னதாக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்தது. வார்னர், பேர்ஸ்டோ அருமையான தொடக்கத்தை அளி்த்தனர். அணியின் ஸ்கோர் 200 ரன்களை எட்ட வேண்டும் என்ற தீர்மானத்தோடு விளையாடியதால், ஓவருக்கு 10 ரன்கள் வீதம் சென்றுகொண்டே இருந்தது.

இருவரையும் பிரிக்க ராகுல் பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் பலனில்லை.பவர்ப்ளேயில் 58ரன்கள் சேர்த்தது சன்ரைசர்ஸ்

ஆடுகளம் ஓரளவுக்கு வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தும் அதை ஷமி, காட்ரெல் பயன்படுத்தவில்லை. இருவரும் சேர்ந்து பஞ்சாப் வீரர்களின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர் என வெளுத்துவாங்கினர். 28 பந்துகளில் பேர்ஸ்டோ அரைசதம் அடித்தார். வார்னர், 37பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரின் பாட்னர்ஷிப் 150 ரன்களைக் கடந்து சென்றது.

நிதானமாக ஆடிய வார்னர் 52 ரன்னில் பிஸ்னோய் வீசிய 16-வது ஓவரில் மேக்ஸ்வெலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். முதல்விக்கெட்டுக்கு இருவரும் 160 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

விக்கெட் வீழ்ச்சி

சதத்தை நெருங்கிய பேர்ஸ்டோ 97ரன்னில்(55பந்து, 6சிக்ஸர்,7பவுண்டரி)பிஸ்னோய் பந்துவீச்சில் அதே ஓவரில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அதன்பின் பந்த வீரர்கள் வருவதும்போவதுமாக இருந்தனர். மணிஷ் பாண்டே ஒரு ரன்னில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கார்க் டக்அவுட்டிலும், அபிஷேக் சர்மா 12ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்

200 ரன்களை சன்ரைசர்ஸ் தொடுமா என எதிர்பார்க்கப்பட்டபோது, வில்லியம்ஸன் கடைசி ஓவரில் அதிரடியான ஷாட்களை ஆடினார். இறுதியில் வில்லியம்ஸன் 20ரன்னிலும், ரஷித் கான் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர் 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்து.
பஞ்சாப் தரப்பில் பிஸ்னோய் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x