

3 ஆண்டுகளுக்கு முன் சேப்பாக்கத்தில் ரசிகனாக அமர்ந்து தோனியின் பேட்டிங்கை ரசித்தேன். இன்று அவரின் விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறேன். எனக்கு தோனியுடன் விளையாடியது கனவுத் தருணம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் வருண் சக்ரவர்த்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது.
கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 168 சேர்த்தால் வெற்றி எனும் அடைந்துவிடும் இலக்குடன் பயணித்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்து 10 ரன்களில் தோல்வி அடைந்தது.
இதில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் விக்கெட்டை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிவரும் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி வீழ்த்தினார். ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் தோனியின் விக்கெட்டை சக்ரவர்த்தி சாய்த்ததுதான் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.
சுழற்பந்துவீச்சாளரான வருண் சக்ரவர்த்தி, தோனியின் விக்கெட்டை வீழ்த்திய உற்சாகத்தில் போட்டி முடிந்தபின் தோனியுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தோனியுடன் விளையாடிய மகிழ்ச்சியான தருணம் குறித்து வருண் சக்ரவர்த்தி வீடியோவில் கூறியதாவது:
“தோனியுடன் நான் இணைந்து விளையாடியது கனவு மாதிரி இருந்தது. அவருக்கு எதிராக விளையாடிது என்பது எனக்குப் போதுமானதாக இல்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சேப்பாக்கத்தில் தோனியின் ஆட்டத்தை ரசிகரோடு ரசிகராக அமர்ந்து பார்த்தேன்.
இன்று அவருடன் இணைந்து விளையாடிய தருணம் கனவு போல் இருக்கிறது.
நான் தோனியின் பேட்டிங்கைப் பார்க்க வந்தேன். ஆனால், அவருக்கு எதிராக ஆடி அவரின் விக்கெட்டைச் சாய்த்துவிட்டேன். இது எனக்கு கனவுத் தருணம்.
ஆடுகளம் மிகவும் தட்டையாக இருந்தது. 180 ரன்கள் அடிப்பதே கடினமாக இருந்தது. தோனி நன்றாக பேட் செய்தார். நான் சரியான லென்த்தில் பந்தை வீசாமல் இருந்திருந்தால், தோனியின் ஷாட் வேறு மாதிரி இருந்திருக்கும்.
ஆனால், விக்கெட்டாக மாறிவிட்டது. என்னுடைய திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்தினேன். போட்டி முடிந்தபின் தோனியுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இப்போது தமிழில் ஒரு வார்த்தை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். தல தலதான்''.
இவ்வாறு வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.