Published : 08 Oct 2020 12:56 PM
Last Updated : 08 Oct 2020 12:56 PM

ஏன் ‘மன்கடிங்’ என்று கூறி இந்திய வீரர் பெயரை மட்டம்தட்ட வேண்டும்? -  ‘பிரவுன் அவுட்’ என்று கூறுவோம்- சுனில் கவாஸ்கர் மாற்றுப்பார்வை

டெல்லி கேப்பிடல்ஸ் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் அன்று ஆர்சிபிக்கு எதிராக ஏரோன் பிஞ்ச் கிரீசை விட்டு வெளியே வந்த போது அவரை மன்கட் அவுட் செய்யாமல் எச்சரிக்கை விடுத்து அனுப்பினார்.

ஆனால் பிறகு ட்விட்டர் பக்கத்தில், ‘இதுதான் முதலும் கடைசியுமான எச்சரிக்கை, இனி கிரீசைத் தாண்டினால் ரன் அவுட் தான்’ என்று பதிவிட்டு எச்சரித்தார்.

இந்நிலையில் ரன்னர் முனையில் பந்து வீசமலேயே ரன் அவுட் செய்வதை ஏன் மன்கடிங் என்று அழைக்க வேண்டும் தவறு செய்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மென் பிரவுன் பெயரில் அழைக்கலாமே நாம் ஏன் இந்திய வீரர், ஆல்ரவுண்டர் வினுமன்காடை இழிவு படுத்தும் விதமாக இந்திய வீரர் தவறு செய்தார் என்பது போல் ‘மன்கடிங்’ என்று அழைக்க வேண்டும் என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு சுனில் கவாஸ்கர் அளித்த பேட்டியில் இது தொடர்பாகக் கூறியதாவது:

ஸ்பிரிடி ஆஃப் கிரிக்கெட் என்பது ஒரு கற்பிதம். ஆஸ்திரேலிய வீரர்கள் மோசமகா ஸ்லெட்ஜ் செய்வார்கள் ஆனால் ‘வரம்பை மீறவில்லை’ என்பார்கள் அந்த வரம்பு எங்கு உள்ளது என்பது அவர்களுக்கும் தெரியாது யாருக்கும் தெரியாது, அந்த ‘வரம்பு’எப்படி கற்பிதமோ அதுதான் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் என்பதும் ஒரு கற்பிதமே.

ஏன் ரன்னர் முனையில் பேட்ஸ்மேன் கிரீசை தாண்டி சில அடிகள் முன்னே வந்து அநியாய சாதகம் அடைய வேண்டும். அது ஏன் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்டுக்குள் வரவில்லை.

நான் கேட்கிறேன் ஏன் ஆஸ்திரேலியர்கள் இத்தனையாண்டுகள் ஆகியும் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதே. 1947-ல் வினுமன்காட் ஆஸி. வீரர் பில் பிரவுனை இப்படி அவுட் செய்ததிலிருந்து மன்கடிங் என்று கூறுகிறார்கள். இது ஏன் பிரவுனிங் என்று அழைக்கப்படுவதில்லை.

நான் மன்கடிங் என்று அழைக்க மாட்டேன், வர்ணனையில் இனி ‘பிரவுன் அவுட்’ செய்தனர் என்றே கூறுவேன். அன்று பிரவுன், இன்று ஜோஸ் பட்லர், ஏரோன் பிஞ்ச். விதி தெளிவாக இருக்கிறது, பவுலிங் கிரீசை விட்டு ரன்னர் பந்து பவுலர் கையிலிருந்து வெளியேறுவதற்கு முன் வரக்கூடாது என்பதுதான் விதி, வந்தால் ரன் அவுட் செய்யலாம்.

1947 டெஸ்ட் போட்டியில் பில் பிரவுன் வெளியே வந்து கொண்டேயிருந்தார் வினு மன்காட் ரன் அவுட் செய்தார், தவறு பிரவுன் மீதா, மன்காட் மீதா? வினு மன்காட் நம் அணியின் லெஜன்ட். பெரிய ஆல்ரவுண்டர், இந்தியாவுக்குப் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். அவர் பெயரை பேட்ஸ்மெனின் ஒரு மோசமான செய்கைக்குப் பயன்படுத்துதல் கூடாது.

இந்திய லெஜண்ட் வீரர் பெயரை இழிவுபடுத்தும் விதமாக, ஏதோ இந்திய வீரர் தரம்கெட்டு நடந்து கொண்டார் என்பது போல் ‘மன்கடிங்’ என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். அதனால்தான் அன்று வர்ணனையில் அஸ்வின், பிஞ்ச்சை ‘பிரவுன் அவுட்’ செய்யப்பார்த்தார் என்று கூறினேன். ஏனெனில் தவறு செய்தது பில் பிரவுன், வினு மன்காட் அல்ல.

ஆஸ்திரேலியாவில் உள்ள பத்திரிகையாளர்கள் சிலர் ’மன்காட்’ பெயரைப் பயன்படுத்துகின்றனர், நாம் இந்தியர் ஏன் அதைப் பயன்படுத்த வேண்டும்? இது நிச்சயமாக நம் லெஜண்டை மட்டம் தட்டுவதாகவே முடியும்.

எனவே இந்திய ஊடகங்களிடம் முறையிடுகிறேன் இனி மன்கடிங் என்று அந்த அவுட்டை அழைக்காதீர்கள், பிரவுன் என்று அழையுங்கள், இவ்வாறு பொரிந்து தள்ளினார் சுனில் கவாஸ்கர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x