சுனில் நரைன் எங்களது முக்கியமான வீரர் என்பதை நிரூபித்தார்: தினேஷ் கார்த்திக் பேட்டி

சுனில் நரைன் எங்களது முக்கியமான வீரர் என்பதை நிரூபித்தார்: தினேஷ் கார்த்திக் பேட்டி
Updated on
1 min read

10 ஓவர்கள்ல் 93 என்ற நிலையிலிருந்து சிஎஸ்கேவின் அபார பவுலிங்கினாலும் தோனியின் திறம்பட்ட கேப்டன்சியினாலும் 168 ரன்களுக்கு மட்டுப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ், தினேஷ் கார்த்திக், மோர்கன் கூட்டணி கேப்டன்சியில் மேலும் சாதுரியமாக கேப்டன்சி செய்து சிஎஸ்கேவை 157 ரன்களுக்கு மட்டுப்படுத்தி அபார வெற்றி பெற்றது.

ராகுல் திரிபாதியை தொடக்கத்தில் பேட் செய்ய இறக்கியது, சுனில் நரைனை பந்து வீச்சில் 12-வது ஓவரிலிருந்து பயன்படுத்தியது,மேலும் ரஸலை 18 மற்றும் 20வது ஓவரை வீசச் செய்தது ஆகிய அபார முடிவுகளினாலும் ஜடேஜாவை ஜாதவ்வுக்குப் பின்னால் இறக்கியும் டிவைன் பிராவோவுக்கு பேட்டிங் வாய்ப்பு அளிக்காமலும் தோனி சொதப்ப கேகேஆர் வெற்றியை உறுதி செய்தது.

இந்நிலையில் ஆட்டம் முடிந்தவுடன் பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

அணியில் சில முக்கியமான வீரர்கள் உள்ளனர், அதில் சுனில் நரைன் ஒருவர். அவரைப் பாதுகாக்க வேண்டும். ஒரு வீரராக அவரை நினைத்துப் பெருமையடைகிறோம்.

நரைனின் அழுத்தத்தை குறைத்து ராகுல் திரிபாதியை தொடக்கத்தில் அனுப்ப முடிவெடுத்தோம். எங்கள் பேட்டிங் நெகிழ்வுத்தன்மையுடன் உள்ளது, நான் 3ம் நிலையில் இறங்கிக் கொண்டிருந்தேன் இப்போது 7ம் நிலையில் இறங்குகிறேன். இது நல்லதுதான்.

தொடக்கத்தில் செய்த மாற்றம் கைகொடுத்தது. பின்னால் சுனில் நரைன் மீதும் வருண் மீதும் பந்து வீச்சில் எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது, இந்த மாற்றங்கள் கைகொடுத்தது.

ரஸல் ஒரு பலதிறம் கொண்ட வீரர். முன்னால் இறங்குவார், பின்னால் இறங்குவார் பேட்டிங் வரிசை நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பது நல்லதுதான்., என்றார்.

ஆட்ட நாயகன் ராகுல் திரிபாதி கூறும்போது, “கனவு நனவானது போல் இருந்தது. பின்னால் இறங்கினாலும் தொடக்கத்தில் இறங்கினாலும் ஆடுவதற்கு தயாரிப்பில்தான் இருந்தேன். பந்து அருமையாக மட்டைக்கு வந்தது.

அதனால் ஷாட்களை ஆட முடிந்தது, இதில் சிறப்பானது என்று எதுவும் இல்லை. கேகேஆருக்கு வந்ததுதான் சிறப்பு வாய்ந்தது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in