

அபுதாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020-யின் 21வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நுட்பம், நுணுக்கத்துக்கு முன்னால் சிஎஸ்கேவின் அனுபவம் கைகொடுக்கவில்லை.
தோனி பொதுவாக 180-190 ரன்கள் இலக்கு என்றால் தோல்வி அடையும் போது அனாலிசிஸ் எல்லாம் செய்து இது அதிகமான ரன்கள் என்பார். ஆனால் நேற்று அவர் ‘சம ஸ்கோர்’ என்று கூறக்கூடிய 168 ரன்கள் வெற்றி இலக்கையே வெற்றி பெறச் செய்ய முடியவில்லை.
தினேஷ் கார்த்திக் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் முடிவு எடுத்தார், ராகுல் திரிபாதியை தொடக்க வீரராகக் களமிறக்கினார், அவர் 51 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார், சுனில் நரைனை மிடில் ஆர்டரில் இறக்கி அவர் 9 பந்துகளில் 17 என்ற பயனுள்ள பங்களிப்பு செய்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக சுனில் நரைனையும் ஆந்த்ரே ரஸலையும் இறுதி ஓவர்களில் வீசச் செய்தது. நரைன் 12, 14, 16, 19-வது ஓவர்களை வீசினார், ரஸல் 18, 20 வது ஓவர்களை வீசினார், இதில் நரைன், வாட்சனைக் காலி செய்தார். சிவி வருண் தோனியை வெளியேற்றினார். 5 விக்கெட்டுகளையே இழந்தாலும் சிஎஸ்கே 157 ரன்களில் முடிந்தது.
கேதார் ஜாதவ்வை முன்னால் இறக்கி பிராவோவை இறக்காமலே விட்டதும், ஷர்துல் தாக்கூர் நல்ல ஹிட்டர் அவரை முன்னால் பிஞ்ச் ஹிட்டராக இறக்கி பயன்படுத்தியிருக்கலாம், தோனியின் கன்சர்வேட்டிவ் அணுகுமுறை தோல்விக்கு இட்டுச் செல்ல தினேஷ் கார்த்திக், இயன் மோர்கனின் புதியன புகுத்தும் யோசனைகள் வெற்றியடையச் செய்தன.
இந்நிலையில் ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஸ்டார் ஸ்போர்ட்சுக்கு தோனி கூறியது:
பொதுவாக நன்றாக ஆடினோம், ஆனால் பவுலர்கள் சிறப்பாக வீசினர், பேட்ஸ்மென்கள் தான் அணியின் தோல்விக்குக் காரணமாயினர்.
ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய வேண்டும். கடைசி சில ஓவர்களில் பவுண்டரிகளே இல்லை. பேக் ஆஃப் லெந்தில் வீசும் போது பவுண்டரிகளை அடிக்கும் வழிவகைகளைக் கண்டறிய வேண்டும். இங்குதான் பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் புதிதாக எதையாவது செய்ய வேண்டும்.
மிடில் ஓவர்களில் அவர்கள் 2-3 நல்ல ஓவர்களை வீசிவிட்டனர். பேட்டிங்கில் அப்போது கொஞ்சம் நன்றாக ஆடி 2-3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழக்காமல் இருந்திருந்தால் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். முதல் 5-6 ஓவர்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், சாம் கரன் அருமையாக வீசுகிறார்.
168 ரன்களுக்கு அவர்களை மட்டுப்படுத்தியதில் பவுலர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர், பேட்ஸ்மென்கள்தான் கோட்டை விட்டனர், என்றார்.