

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் தொடக்க வீரரான நஜீப் தரகாய் சாலையைக் கடக்கும் போது கார் மோதி பரிதாபமாக பலியானது ஆப்கான் கிரிக்கெட் அரங்கில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று இவருக்கு விபத்து நடந்தது, இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் மரணமடைந்ததாக ஆப்கான் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
“ஆப்கான் கிரிக்கெட் சங்கம் மற்றும் கிரிக்கெட்டை நேசிக்கும் ஆப்கான் தேசத்துக்கும் பேரிழப்பு. ஆக்ரோஷமான தொடக்க வீரர் நஜிப் தரகாய் நம்மிடையே இல்லை என்ற இருதயத்தை உடைக்கும் செய்தியை அறிவிக்கிறோம். இவர் நல்ல மனிதர். சாலை விபத்தில் மரணமடைந்த நஜீப் தரக்காய் எங்களை தீரா சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திவிட்டுச் சென்று விட்டார். அல்லா அவர் மீது கருணை பொழியட்டும்” என்று ஆப்கான் கிரிக்கெட் வாரியம் தன் இரங்கல் செய்தியில் கூறியுள்ளது.
நஜீப் தரகாய் ஆப்கான் அணிக்காக 12 டி20 சர்வதேசப் போட்டிகளிலும் ஒரேயொரு ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.
2014 டி20 உலகக்கோப்பையில் அறிமுகப் போட்டியில் ஆடினார் நஜீப். கடைசியாக இவர் ஷ்ப்கீஸா கிரிக்கெட் லீகில் டி20 போட்டியில் அய்னக் நைட்ஸ் அணிக்காக ஆடி 32 ரன்களை எடுத்தார்.
இவரது மரணம் ஆப்கான் கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.