Last Updated : 05 Oct, 2020 07:48 AM

 

Published : 05 Oct 2020 07:48 AM
Last Updated : 05 Oct 2020 07:48 AM

'திரும்ப வந்துட்டோம்னு சொல்லு'; பட்டையைக் கிளப்பிய சிஎஸ்கே; 10 விக்கெட்டில் வெற்றி: பஞ்சாப்பைப் பந்தாடிய வாட்ஸன், டூப்பிளஸி கூட்டணி

வாட்ஸன், டூப்பிளசிஸின் மிரட்டலான, ஆகச்சிறந்த பார்ட்னர்ஷிப்பால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 18-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட்டில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமான வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. 179 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் சேர்த்து 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

முதல் முறை

துபாய் மைதானத்தில் இதுவரை எந்த அணியும் சேஸிங் செய்து இந்த சீசனில் வெல்லவில்லை. முதல் முறையாக ஒரு இலக்கை துரத்திச் சென்று சிஎஸ்கே அணி மட்டுமே வென்றுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் கடந்த 6 சீசன்களுக்கு முன் தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்திருந்த சிஎஸ்கே அணி இந்த சீசனில் மீண்டும் அதே நிலையை எதிர்கொண்டது.

சிஎஸ்கே அணிக்கு இது சோதனைக்காலமாக இருந்தாலும் அனைத்தையும் கடந்து “திரும்ப வந்துட்டோம்னு சொல்லு” எனும் ரீதியில் அனைத்து அணிகளுக்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் இந்த வெற்றியை சிஎஸ்கே அணி பதிவு செய்துள்ளது.

ஆட்டநாயகன் விருது

ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் இழப்பின்றி, 2-வது அதிகபட்ச சேஸிங் இந்தப் போட்டியில் சிஎஸ்கேயின் சேஸிங்காகும். ‘சிஎஸ்கே அணிக்கு என்னாச்சு’, ‘இனிமேல் அவ்வளவுதானா’, ‘சூப்பர் லீக் சுற்றுக்குள் வருமா’ என்று ஏங்கிய ரசிகர்களுக்கு மிக அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ‘சிஎஸ்கே சிங்கம்’ திரும்பி வந்துள்ளது.

விக்கெட் இழப்பின்றி முதல் விக்கெட்டுக்கு 181 ரன்கள் சேர்த்த வாட்ஸன், டூப்பிளசிஸ் ‘இருவருக்கும் ஆட்டநாயகன் விருது’ கொடுத்திருக்க வேண்டும். ஆனால், விருது ஒருவருக்குத்தான் என்பதால், அருமையான பல சிக்ஸர்களை அடித்து, ரசிகர்களுக்கு இனிப்பான வெற்றியை அளித்த ‘வாட்ஸனுக்கு ஆட்டநாயகன் விருது’ வழங்கப்பட்டது.

‘மதம்பிடித்த யானைபோல்’ களத்தில் அதிரடியாக பேட்டை சுழற்றிய வாட்ஸன் 53 பந்துகளில் 83 ரன்களுடன் (11 பவுண்டரி, 3 சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். துணையாக ஆடிய டூப்பிளசி்ஸ் 53 பந்துகளில் 87 ரன்களுடன் (11 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதிகபட்ச பார்ட்னர்ஷிப்

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி தொடக்க விக்கெட்டுக்கு சேர்க்கும் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் டூப்பிளசிஸ், வாட்ஸன் இந்த ஆட்டத்தில் சேர்த்த 181 ரன்களாகும். இதற்கு முன் ஆர்சிபி அணிக்கு எதிராக 2011,மே 28-ல் சென்னையில் நடந்த ஆட்டத்தில் மைக் ஹசி, முரளி விஜய் இருவரும் சேர்ந்து 159 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. அதை டூப்பிளசிஸ், வாட்ஸன் ஜோடி முறியடித்துவிட்டது.

இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் 5 ஆட்டங்களில் 2 வெற்றி 3 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் சிஎஸ்கே அணியின் ஆட்டம் இதுபோல் அமைந்தால், விரைவில் முதலிடத்துக்கு வரும்.

பஞ்சாப் தோல்வி ஏன்?

பரிதாபத்துக்குரிய பஞ்சாப் அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி 4 தோல்விகளுடன் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் அணியின் டாப் வீரர்கள் மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் இருவரும் முரட்டுத்தனமான ஃபார்மில் இருந்தபோதிலும்கூட அந்த அணி தொடர்ந்து 4 தோல்விகளைச் சந்தித்துள்ளது.

அந்த அணி இருவரை மட்டுமே அதிகமாகச் சார்ந்திருப்பதும் தோல்விக்கு முக்கியக்காரணம்.
178 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர்தான். நல்ல வலுவான பந்துவீச்சாளர்களையும், கட்டுக்கோப்பான பந்துவீச்சும் இருந்தால், நிச்சயம் சிஎஸ்கே அணிக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஆனால், பஞ்சாப் அணியின் பந்துவீச்சு நேற்று ஒட்டுமொத்த சொதப்பலாக இருந்தது.

அனைத்துப் பந்துவீச்சாளர்களும் சராசரியாக ஓவருக்கு 9 ரன் ரேட்டுக்குக் குறைவாக வழங்கவில்லை. இப்படியொரு மோசமான பந்துவீச்சை வைத்துக்கொண்டு சேஸிங் செய்வது பஞ்சாப் அணி தெரிந்தே பள்ளத்துக்குள் விழுவது போன்றதாகும். முதலில் பேட்டிங் செய்தால், 200 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டு வெற்றிக்கு இனிவரும் போட்டிகளில்பஞ்சாப் முயலலாம். மற்றவகையில் ராகுல், அகர்வால் மட்டுமே வெற்றிக்கு முழுமயைாக உழைக்க முடியாது.

பல கேள்விகள்

அதுமட்டுமல்லாமல் வெற்றி பெற வேண்டும் என்ற தீர்மானம் இல்லாமல் தொடக்கத்திலிருந்து விளையாடியானார்களா? பேட்டிங்கும், பந்துவீச்சும் அவ்வாறே அமைந்திருந்ததா எனும் சந்தேகம் எழுகிறது. ஏனென்றால் கடந்த சில போட்டிகளில் ராகுல், அகர்வாலிடம் பேட்டிங்கில் இருந்த ‘நெருப்பு’ இந்தப் போட்டியில் இல்லை.

பந்துவீச்சில் வாட்ஸன், டூப்பிளசிஸுக்கு ஏற்றாற்போல் மாற்றவில்லை, பீல்டிங்கிலும் பேட்ஸ்மேன் அடிக்கும் திசை பார்த்து நிறுத்தவேண்டும் என ராகுல் திட்டமிடவில்லை. (உஷ்... கண்டுக்காதீங்க).

கடந்த ஐபிஎல் சுழற்பந்துவீச்சில் அனைத்து அணிகளுக்கும் கிலி ஏற்படுத்தியவர் முஜிபுர் ரஹ்மான். அவரை ஏன் இந்தப் போட்டியில் களமிறக்கவில்லை. பவர்ப்ளே ஓவர் மட்டுமல்ல, 20-வது ஓவரில்கூட கட்டுக்கோப்பாக முஜிபுர் ரஹ்மான் பந்துவீசுவார். அவரைப் பயன்படுத்தவில்லை.

சிஎஸ்கே போன்ற வலிமையான அணி்க்கு எதிராக கெயில் புயலைக் களமிறக்கி, சோதித்து இருக்கலாம். அதையும் பஞ்சாப் அணி கோட்டைவிட்டது. இதையெல்லாம் பார்க்கும்போது, ஏன் இந்தத் தவறை தெரியாமலா செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

நிரூபித்த தோனி

இருப்பினும், ‘தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்’, ஏராளமான விமர்சனங்கள், ‘அணியில் பல கோளாறுகள்’, ‘தோனியை 4-வது இடத்தில் இறக்க வேண்டும்’, ‘சாம்கரனை தொடக்க வீரராக களமிறக்கவேண்டும்’, ‘கேதார் ஜாதவை நீக்க வேண்டும்’ என்று பல ஆலோசனைகள், அறிவுரைகள், கிண்டல்கள் சமூக வலைதளங்களிலும், வர்ணனைகளிலும் ஒலித்தாலும் அனைத்தையும் மீறி மாறாத அதே அணி வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தோனி தன்னை நிரூபித்துள்ளார்.

‘டாடிஸ் ஆர்மி’ வயதானாலும் அனுபவத்தை வெற்றியின் ரூபத்தில் நிரூபித்துள்ளது. வயதுக்கும் வெற்றிக்கும் தொடர்பில்லை, வயது வெறும் எண்தான் என்பதை மீண்டும் சிஎஸ்கே அணி நிரூபித்துள்ளது.

மதயானை வாட்ஸன்

அதிலும் ஷேன் வாட்ஸன் கடந்த 4 போட்டிகளிலும், 4,33,14,1 என சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அனைவருக்கும் வேதனையளித்தார். அதிலும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் இன்சைட் எட்ஜ் மூலம் விக்கெட்டை இழந்து மிகுந்த விரக்தியுடனே வாட்ஸன் பெவிலியன் திரும்பினார்.

ஆனால், இந்த ஆட்டத்தில் நிச்சயம் வாட்ஸன் ஏதாவது செய்யப்போகிறார் என எதிர்பாரத்த நிலையில் மதம்பிடித்த யானை போல் பேட்டிங் செய்தார். இந்த சீசனில் வாட்ஸன் தனது முதல் அரை சதத்தை 31 பந்துகளிலும், அதைத் தொடர்ந்து டூப்பிளசிஸ் 33 பந்துகளிலும் அரை சதத்தை நிறைவு செய்தனர்.

டூப்பிளசிஸ் இந்த சீசனில் அடிக்கும் மூன்றாவது அரை சதமாகும். கடந்த இரு போட்டிகளிலும் சோபிக்காத டூப்பிளசிஸ் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார்.

அதிரடி கூட்டணி

179 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. கடந்த போட்டியைப் போல் இந்தப் போட்டியிலும் சிஎஸ்கே அணி சொதப்பிவிடுமா என்றெல்லாம் ரசிகர்கள் தலையைச் சொறிந்தபடி டிவி முன் அமர்ந்திருந்தனர்.

ஆனால், காட்ரெல் வீசிய முதல் ஓவரை வாட்ஸன் வெளுத்தபோதே ரசிகர்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. அதிலும் பவர்ப்ளே முடியும்போது ஜோர்டன் வீசிய 6-வது ஓவரில் டூப்பிளசிஸ் 4 பவுண்டரி உள்பட 19 ரன்கள் சேர்த்து கிழித்துத் தொங்கவிட்டபோது ஏதோ தீர்மானத்துடன்தான் சிஎஸ்கே வந்துள்ளது எனத் தெரிந்துவிட்டது. பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் சேர்த்தது.

அதன்பின் வாட்ஸனும், டூப்பிளசிஸும் பஞ்சாப் வீரர்க்ளின் பந்துவீச்சை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பஞ்சுபோல் பறக்கவிட்டனர். இருவரும் வழக்கமான ஆட்டத்துக்குத் திரும்பி, பேட்டிங்கில் மிரட்டத் தொடங்கினர். 10 ஓவர்களில் சிஎஸ்கே அணி 101 ரன்களை எட்டியது. வாட்ஸன் 31 பந்துகளிலும், டூப்பிளசிஸ் 33 பந்துகளிலும் அரை சதம் அடித்தனர்.

15 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 150 ரன்களை எட்டியது. அதன்பின் வாட்ஸனும், டூப்பிளசிஸும் அதிரடியில் இறங்கி ஷமி, ஜோர்டான் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர்களைப் பறக்கவிட சிஎஸ்கே வெற்றி 14 பந்துகள் மீதமிருக்கையில் உறுதியானது. 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி சிஎஸ்கே அணி 181 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

நல்ல தொடக்கம்

முன்னதாக டாஸ் வென்ற கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. அகர்வால், ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினர். இந்த சீசன் முழுவதும் சிறப்பாக ஆடி இருவரும் இந்த போட்டியிலும் பவர்ப்ளே வரை விக்கெட்டை இழக்காமல் அதிரடியான ஆட்டத்தையே ஆடினர். பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் சேர்த்தது.

பவர்ப்ளே முடிந்து பியூஷ் சாவ்லா பந்துவீசிய முதல் ஓவரில் டீப் மிட்விக்கெட்டில் சாம்கரனிடம் கேட்ச் கொடுத்து அகர்வால் 26 ரன்களில் வெளியேறினார். அடுத்துவந்த மன்தீப் சிங் 27 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

ராகுல் மந்தம்

3-வது விக்கெட்டுக்கு வந்த பூரன் அதிரடியாக சில சிக்ஸர்களை விளாசி 17 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். வழக்கமாக குறைவான பந்துகளில் அதிரடியாக ஆடும் கேஎல் ராகுலின் ஆட்டத்தில் நேற்று சுரத்தே இல்லை. பந்துகளை வீணடித்தார், விக்கெட்டில் நிலைத்திருக்க வேண்டும் என்ற கவனத்தில் மெதுவாக ரன்களைச் சேர்த்தார். ஆனால், இந்தப் போட்டியில் ராகுல் ஏன் மெதுவாக பேட்டிங் செய்து, ரன்களை மெதுவாகச் சேர்த்தால் என்ற கேள்வி எழுகிறது.

52 பந்துகளைச் சந்தித்த ராகுல் 63 ரன்களில் (1 சிக்ஸ், 7 பவுண்டரிகள்) தாக்கூர் பந்துவீ்ச்சில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 11 ரன்களிலும், சர்பிராஸ்கான் 14 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புககு 174 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே தரப்பில் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும், பியூஸ் சாவ்லா, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x