Last Updated : 04 Oct, 2020 08:33 AM

 

Published : 04 Oct 2020 08:33 AM
Last Updated : 04 Oct 2020 08:33 AM

டெல்லி ‘கில்லி’: ஸ்ரேயாஸ், பிரித்வி ஷா அபாரம்:  3 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிய மோர்கன், திரிபாதி: வெற்றியை கோட்டைவிட்ட கொல்கத்தா 

டெல்லி அணியின் வெற்றிக்கு உதவி, ஆட்டநாயகன் விருது பெற்ற ஸ்ரேயாஸ் அய்யர் : படம் உதவி ட்விட்டர்

ஷார்ஜா


ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா, ரிஷப்பந்த் ஆகியோரின் பேட்டிங்கால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 16-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது. 229 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் சேர்த்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.

அதிகபட்ச ஸ்கோர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட மிக அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் கடந்த 2018-ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. அதை முறியடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் சீசனில் அதிகபட்ச ஸ்கோரை டெல்லி அணி பதிவு செய்தது.

பேட்ஸ்மேன் ஆதிக்கம்

டெல்லி அணியின் வெற்றிக்கு முழுக் காரணம் பேட்ஸ்மேன்கள் மட்டுமே. ஷார்ஜா போன்ற சிறிய மைதானம், பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சொர்க்கபுரியாக திகழும் ஆடுகளத்தில் அவர்களின் ஆட்சி மட்டுமே இருக்கும் என்பதை தெரிந்தே டெல்லி பேட்ஸ்மேன்கள் விளையாடினார்.

பிரித்வி ஷா, ரிஷப்பந்த், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மூவரும் சேர்த்த ஸ்கோர் வெற்றிக்கு உதவியது. பந்துவீச்சு இரு அணிகளுக்கும் சுத்தமாக எடுபடவில்லை. பந்துவீ்ச்சாளர்கள் நிலைமைதான் நேற்று பரிதாபம்.

38 பந்துகளில் 88 ரன்கள் சேர்த்து(6 சிக்ஸர்,7பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஆட்டத்தை மாற்றிய மோர்கன், திரிபாதி

கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில்தான் நேற்றை போட்டி டெல்லி அணிக்கு பிற்பாதியில் சென்றது. ராகுல் திரிபாதி, மோர்கன் கூட்டணி நிலைத்தபின் ஆட்டம் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியது. 16-வது ஓவர் முதல் 18-வது ஓவர்வரை மோர்கன், திரிபாதி ஆட்டத்தை திருப்பித் தொடங்கினர்.

அதிலும் ரபாடா மீது மோர்கனுக்கு என்ன கோபமோ தெரியவில்லை, ரபாடாவின் பந்துவீச்சை கிழித்து தொங்கவிட்டார். ரபாடா வீசிய 16 ஓவரில் 14 ரன்கள், 18 ஓவரில் ஹாட்ரிஸ் சிக்ஸ், பவுண்டரி உள்பட 23 ரன்கள் என பொளந்துகட்டிவிட்டார்.

ஸ்டாய்னிஷ் வீசிய 17-வது ஓவரில் திரிபாதி 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 24 ரன்களை திரபாதி வெளுத்து வாங்கினார். இருவரின் அதிரடியால் கொல்கத்தா சேஸிங் செய்துவிடும் என்று எண்ணப்பட்டது. கடைசி இரு ஓவர்களில் கொல்கத்தா வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால், நார்ஜே வீசிய 19 ஓவர்தான் திருப்புமுனையாக அமைந்தது. சிறப்பாக பேட் செய்த மோர்கன் 44ரன்னில் (18பந்துகள் 5சிக்ஸ் ஒரு பவுண்டரி) ஆட்டமிழந்தார், 5 ரன்கள் மட்டுமே அந்த ஓவரில் சென்றது. இது கொல்கத்தாவுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டபோது திரிபாதி 36(16பந்துகள் 3 சிக்ஸ்,3பவுண்டரி) ஆட்டமிழந்தவுடன் கொல்கத்தா தோல்வி உறுதியானது.

ரஸல் ஊசிப்பட்டாசு

கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ஆன்ட்ரூ ரஸல், தினேஷ் கார்த்திக் போன்றோர் ஓரளவுக்கு நடுவரிசையில் நின்று அடித்து ரன் சேர்த்திருந்தால், மோர்கன், திராபாதி கூட்டணி நிச்சயம் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றிருப்பார்கள். இருவரும் 7-வது விக்கெட்டுக்கு சேர்ந்து 72 ரன்கள் குவித்தனர்.

கொல்கத்தா அணியின் நம்பிக்கை நாயகன் ரஸல் நேற்று ஊசிப்பட்டாசாக மாறிவிட்டார். பந்துவீச்சில் பட்டையக் கிளப்பிய ரஸல், பேட்டிங்கில் சொதப்பிவிட்டார். தினேஷ் கார்த்திக் இதுவரை ஒருபோட்டியில்கூட சோபிக்கவில்லை.

நரேன் மீது இன்னும் நம்பிக்கையா

நரேன் மீது கொல்கத்தா அணி ஏன் இவ்வளவு நம்பிக்கை வைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. தொடக்க வரிசையில் களமிறங்கி தொடர்ந்து விரைவாக விக்கெட்டை இழந்தாலும், பிடிவாதமாக நரேன்தான் ஆட்டத்தை தொடங்குவார் என்று அவரையே ஓபனிங் செய்ய வைக்கிறார்கள்.

சுப்மான் கில்லுடன் ராணா அல்லது திரிபாதியை களமிறக்கி இருந்தால், ஆட்டத்தில் நிச்சயம் மாற்றம் நிகழ்ந்திருக்கும். ஒட்டுமொத்தத்தில் வெற்றிக்கு அருகே சென்று கொல்கத்தா கோட்டைவிட்டுள்ளது.

பந்துவீச்சாளர்கள் பரிதாபம்

ஷார்ஜா மைதானம் என்றாலே பேட்டிங்கிற்கு சாதகம், சிறிய மைதானம் என்பதால், பந்துவீச்சாளர்கள் இங்கு சோபிப்பது கடினம். இது நேற்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் நடந்தது. டெல்லி அணியில் நார்ஜே, ஹர்ஸ் படேல் மட்டுமே ஓவருக்கு 8 ரன்கள் கொடுத்தனர், ரபாடா, அஸ்வின், ஸ்டாய்னிஷ் , மிஸ்ரா ஆகியோர் ஓவருக்கு 13 ரன்கள் வீதம் வாரிக் கொடுத்தனர். இல்லை....வெளுத்து வாங்கப்பட்டது.

அதேபோல கொல்கத்தா அணியில் ஆன்ட்ரூ ரஸலைத் தவிர்த்து அனைத்துப் பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 12 ரன்களுக்கு மேல்தான் வாரிவழங்கினர். ஆதலால், இதுபோன்ற மைதானங்களில் வலுவான பேட்ஸ்மேன்களை மட்டுேம நம்பி அணி களமிறங்குகிறது.

பிரித்வி ஷா அபாரம்

அதை டெல்லி அணியும் தொடக்கத்திலிருந்தே பயன்படுத்திக் கொண்டனர். ஷிகர் தவன்(26) விரைவாக ஆட்டமிழந்தபின், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர் கூட்டணி சேர்ந்து ஓவருக்கு 10 ரன்ரேட் குறையாமல் அணியை வழிநடத்தினர். பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் சேர்த்தது டெல்லி அணி. பிரித்வி ஷா 35பந்துகளில் அரைசதம் அடித்தார். 10.5 ஓவர்களில் டெல்லி அணி 100 ரன்களை திட்மிட்டு எட்டியது.

அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 41 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து நாகர்கோட்டி ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 73 ரன்கள் சேர்த்தனர். 3-வது விக்கெட்டுக்கு வந்த ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அய்யருடன் சேர்ந்து ஸ்கோரை உச்சத்துக்கு நகர்த்தினார்.

அதிரடி ஸ்ரேயாஸ்

நிதானமாகத் தொடங்கிய ஸ்ரேயாஸ், அதிரடியை கையில் எடுத்தபின்,26 பந்துகளில் அரைசதம் அடித்தார். ரிஷப்பந்த் அவ்வப்போது பவுண்டரி, சிஸ்கரை விளாசினார். 17.1 ஓவர்களில் டெல்லி 200ரன்களைத் தொட்டது. ரிஷப்பந்த் 17பந்துகளில் 38ரன்கள் சேர்த்து ரஸல் பந்துவீச்சில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் பந்த் கூட்டணி 71 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த ஸ்டாய்னிஷ் ஒரு ரன்னில் பெவிலியின் திரும்பினார்.

அதிரடியாக பேட் செய்த ஸ்ரேயாஸ் அய்யர் 88 ரன்னிலும், ஹெட்மயர் 7ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது.

இமாலய இலக்கு

229 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. கில், நரேன் ஆட்டத்தைத் தொடங்கினர். நரேன் (3) வழக்கம்போல் விரைவாக ஆட்டமிழந்தார். நார்ஜே வீசிய முதல்ஓவரில் போல்டாகி நரேன் வெளியேறினா்.

அடுத்துவந்த ராணா, கில்லுடன் சேர்ந்தார். இருவரும் அவ்வப்போது அடித்து ரன்ரேட்டை குறையாமல் கொண்டு சென்றனர். பவர்ப்ளேயில் டெல்லிக்கு இணையாக ஒரு விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் சேர்த்தது கொல்கத்தா.

சிற்பபாக பேட் செய்துவந்த கில் 28 ரன்னில் மிஸ்ரா பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் அடிக்க முற்பட்டு எட்ஜ் எடுத்தது ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்தார். 2-வதுவிக்கெட்டுக்கு இருவரும் 64 ரன்கள் சேர்த்தனர்.

ரஸல் ஏமாற்றம்

அடுத்துவந்த ரஸல் ஏமாற்றம் அளித்தார். ரஸல் 13 ரன்னில் ரபாடா ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். ராணா 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். 35 பந்துகளில் 58 ரன்கள்(4சிக்ஸர்,4 பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 6ரன்னில் பெவிலியன் திரும்பினார். கம்மின்ஸ் 5 ரன்னில் வெளியேறினார்.

72 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த கொல்கத்தா அணி அடுத்த 50ரன்களுக்குள் சீரான இடைவெளியில் 5 விக்கெட்டுகளை இழந்தது பெரும் பின்னடைவாகும்.

ஆட்டத்தை திருப்பிய கூட்டணி

7-வது விக்கெட்டுக்கு மோர்கன், திரிபாதி கூட்டணி ஆட்டத்தை வேறுதிசையில் நகர்த்தினர். 16-வது ஓவர்கள் முதல் 18 ஓவர்கள் வரை 3 ஓவர்களில் 61 ரன்கள் சேர்க்கப்பட்டதால் ஆட்டம் திசைதிரும்பியது.
18பந்துகளைச் சந்தித்த மோர்கன் 5சிக்ஸர்,ஒருபவுண்டரி உள்பட44 ரன்கல் சேர்த்து ஆட்டமிழந்தார். திரிபாதி 16பந்துகளில் 36(3சிக்ஸர்,3பவுண்டரி) வெளியேறினார். இருவரும் ஆட்டமிழந்தபின் தோல்வி உறுதியானது.

முன்னணி வீரர்கள் யாரேனும் ஒருவர் தொடக்கத்தில் விக்கெட்டை இழக்காமல் அடித்திருந்தால் கொல்கத்தா அணி இமாலயவெற்றி பெற்றிருக்கும்.

நாகர்கோட்டி 3 ரன்னிலும், மாவி ஒருரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 210ர ன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.
ெடல்லி அணித் தரப்பில் நார்ஜே அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், படேல் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x