Last Updated : 01 Oct, 2020 07:28 AM

 

Published : 01 Oct 2020 07:28 AM
Last Updated : 01 Oct 2020 07:28 AM

7-லிருந்து 2-வது இடம்: தினேஷ் கார்த்திக் தலைமை அபாரம்: ராஜஸ்தானுக்கு முதல் தோல்வியை அளித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சுப்மான் கில், மோர்கனின் பொறுப்பான பேட்டிங், கம்மின்ஸ், நாகர்கோட்டி, மாவி ஆகியோரின் பந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 12-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. 175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு137 ரன்கள் சேர்த்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆட்டநாயன் மாவி

சிறப்பாகப் பந்துவீசி பட்லர், சாம்ஸன் என மிகப்பெரிய விக்கெட்டை வீழ்த்திய கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷிவம் மாவி ஆட்டநாயகன் விருது பெற்றார். 4 ஓவர்கள் வீசிய மாவி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 7-வது இடத்திலிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பரமபத ஏணியில் விர்ரென 2-ம் இடத்துக்கு உயர்ந்துள்ளது. ரன்ரேட் அடிப்படையிலும் ராஜஸ்தான் அணியைவிட சிறப்பாக இருக்கிறது. தோல்வியுடன் தொடங்கினாலும் அடுத்தடுத்து இரு வெற்றிகளால் தினேஷ் கார்த்திக் தலைமை உற்சாகத்துடன் இருக்கிறது.

ஆர்ச்சர் மிரட்டல்

துபாய் மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நேற்று ஒத்துழைக்கவே இல்லை. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கமாக இருந்ததால், சர்வதேச பந்துவீச்சாளர்கள் மிரட்டினர்.

இந்த ஆட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர், கம்மின்ஸ் ஆகிய இரு தலைசிறந்த தொழில்முறை வேகப்பந்துவீச்சாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆர்ச்சரின் பந்துவீச்சை எதிர்கொண்ட பேட்ஸ்மேன்களுக்கு நேற்று நரகமாக இருந்திருக்கும்.

எப்போது ஓவர் முடியும் என்று எதிர்பார்த்திருப்பார்கள். ஆர்ச்சரின் பந்துகள் நேற்று ராக்கெட் வேகத்தில் பேட்ஸ்மேன் கண்இமைக்கும் வேகத்தில் கடந்து சென்றது. சராசரியாக 149 கி.மீ வேகத்தில் பந்து பாய்ந்தது. கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் கில், ரஸல், மோர்கன் ஆகியோரால் தொடக்கூட முடியவில்லை.

அதிலும் தினேஷ் கார்த்திற்கு “டெஸ்ட் மேட்ச் லெக் கட்டர்” வீசி ஆர்ச்சர் விக்கெட் வீழ்த்திய விதம் அழகு. ஒரு பந்து ரஸலின் ஹெல்மெட்டை பதம்பார்த்தது. 3 ஓவர்கள்வரை ஆர்ச்சர் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். 4-வது ஓவரில் மோர்கன் ஒருபவுண்டரி, சிக்ஸர் அடித்ததால் 13 ரன்கள் சேர்த்தன. ஆர்ச்சர் 4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.

கில், மோர்கன் நம்பிக்கை

ஆர்ச்சரின் பந்துவீச்சுக்கு கம்மின்ஸும் எந்தவிதத்திலும் குறையவில்லை. தலைசிறந்த பந்துவீச்சாளர் என்பதை கம்மின்ஸ் நிரூபித்தார். 3 ஓவர்கள் வீசி 13ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைச் சாய்த்தார்.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் சுப்மான் கில், மோர்கன் மட்டுமே நம்பிக்கைக்குரிய வகையில் நேற்று பேட்டிங் செய்தனர். நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிட்டனர். கில், மோர்கன் நேற்று ஏமாற்றம் அளித்திருந்தால், கொல்கத்தா அணி 174 ரன்களைச் சேர்ப்பதே கடினமாக இருந்திருக்கும்.

இளம்பந்துவீச்சாளர்கள் அசத்தல்

பந்துவீச்சைப் பொறுத்தவரை கொல்கத்தா அணியின் கூட்டு உழைப்புதான் வெற்றியைத் தேடித்தந்தது. கம்மின்ஸ் தொடக்கத்திலேயே ஸ்மித் விக்கெட்டை சாய்த்தபின் மற்ற வீரர்களின் விக்கெட்டுகளை கழற்றுவதை ஷிவம் மாவி, நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி செய்தனர்.

2 ஓவர்கள் மட்டுமே நாகர்கோட்டி வீசினாலும் 13 ரன்கள் கொடுத்து ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து ராஜஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தார். வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகள், மாவி 2 விக்கெட்டுகள் என ராஜஸ்தான் சரிவுக்கு மூவரும் காரணமாக அமைந்தனர்.

வழக்கமாக நரேன் கட்டுக்கோப்பாகப் பந்துவீசுவார் ஆனால், நேற்றைய ஆட்டத்தி்ல நரேன் மட்டுமே ரன்களை வாரி வழங்கினார். மற்ற அனைத்து வேகப்பந்துவீச்சாளர்களும் சராசரியாக 6 ரன்களையே வழங்கினர். ஒட்டுமொத்தத்தில் கொல்கத்தா அணியின் கூட்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றி

டாப்ஆர்டர் சொதப்பல்

175ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. விரட்டக்கூடிய இலக்கு தான் என்றாலும், ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நேற்று சொதப்பியதே தோல்விக்கு முக்கியக் காரணம். ஷார்ஜாவில் நடந்த இருபோட்டிகளிலும் பேட்டிங்கில் வெளுத்து வாங்கிய ஸ்மித், சாம்ஸன் இருவரும் இந்த போட்டியில் ஏமாற்றம் அளித்தனர்.

தனது துல்லியமான வேகப்பந்துவீச்சு, ஸ்விங் பந்துவீச்சில் கலக்கிய கம்மின்ஸ் முதல் ஓவரிலேயே ஸ்மித்தை 3 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த சாம்ஸன் வழக்கமான அதிரடியை வெளிப்படுத்த முயன்றார்.

ஆனால், ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்ததால், மாவி பந்துவீச்சில் மிட் விக்கெட்டில் நரேனிடம் கேட்ச் கொடுத்து சாம்ஸன் 8 ரன்னில் வெளியேறினார். பவர்ப்ளேயில் 39 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை ராஜஸ்தான் இழந்தது.

விக்கெட் சரிவு

பட்லர் 21 ரன்னில் மாவி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். பட்லர் வெளியேறிய பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சென்றதுமே ராஜஸ்தான் தோல்வி ஏறக்குறைய உறுதியானது.

உத்தப்பாவை நம்பி ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் அணி. இதுவரை எந்த ஆட்டத்திலும் 10 ரன்களை தாண்டவில்லை. நாகர்கோட்டி வீசிய 8-வது ஓவரில் உத்தப்பா 2 ரன்னிலும், ரியான் பராக் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரே ஓவரி்ல் 2 விக்கெட்டுகளை இழந்ததால் ராஜஸ்தான் அணி மேலும் நெருக்கடிக்கு ஆளானது. 42 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 சிக்ஸர்கள் அடித்து அசத்திய ஹீரோவான திவேஷியா(14), ஸ்ரேயாஸ் கோபால்(5), என நடுவரிசை நிலைக்கவே இல்லை. ஆர்ச்சர்(6) உனத்கத்(9) கடைநிலை பேட்ஸ்மேன்களும் வந்த வேகத்தில் வெளியேறினர்.

30 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த ராஜஸ்தான் அணி அடுத்த 59 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்தது.

டாம் கரன் அரைசதம்

டாம் கரன் மட்டுமே நம்பிக்கையளிக்கும் வகையில் பேட்டிங் செய்து 36 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.

20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137ரன்கள் மட்டுமே சேர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 37 ரன்னில் தோல்வி அடைந்தது. கொல்கத்தா தரப்பி்ல நாகர்கோட்டி, மாவி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் , நரேன், குல்தீப் தலா ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர்

நரேன் சொதப்பல்

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங் செய்ததால், கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணி தொடர்ந்து ஒரு தவறைச் செய்து வருகிறது. அது தவறா அல்லது அந்த அணிக்கு அது செட் ஆகிவிட்டதா எனத் தெரியவில்லை.

சுனில் நரேன் தொழில்முறையில் பந்துவீச்சாளரேத் தவிர பேட்ஸ்மேன் இல்லை. அவரை தொடக்க வரிசையில் இறக்கும்போது பவர்ப்ளேயில் விக்கெட்டை இழந்து விடுகிறது அந்த அணி. அதற்கு பதிலாக நிதிஷ் ராணாவை களமிறக்கினால் விக்கெட்டும் சரியாது, ரன்வேகமும் அதிகரிக்கும்.

ஆனால், நரேனுக்கு ஏன் தொடக்க வரிசை கொடுக்கிறார்கள் எனத் தெரியவில்லை. பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களும் இந்தக் கருத்தை தெரிவித்தபோதிலும் கொல்கத்தா அணி மாற்றவில்லை.
இந்த ஆட்டத்திலும் நரேன் வழக்கம்போல் நிலைத்து நிற்காமல் 15 ரன்களில் வெளியேறினார். பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் சேர்த்தது கொல்கத்தா அணி.

திவேஷியா பந்துவீச்சில் ராணா 22 ரன்னில் வெளியேறினார். நிதானமாக ஆடி வந்த சுப்மான் கில் 47 ரன்கள் சேர்த்தநிலையில் ஆர்ச்சரின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பேட்டில் எட்ஜ் எடுத்து அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ரஸல் ஏமாற்றம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆன்ட்ரூ ரஸல் நேற்றும் ஜொலிக்கவில்லை. 3 சிக்ஸர்கள் உள்பட 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்தில் ஒரு ரன்னில் ஆர்ச்சரி்ன் மிரட்டலான லெக்கட்டரில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 15 ஓவர்களில் கொல்கத்தா அணி 115 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

கடைசி 5 ஓவர்களில் 60 ரன்கள் சேர்க்கப்பட்டன. மோர்கன், கம்மின்ஸ் ஜோடி ஓரளவுக்கு கடைசி நேரத்தில் ஆடி ரன்களைச் சேர்த்தது. கம்மின்ஸ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஷாட்களை ஆடிய மோர்கன் 23 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தும், நாகர்கோட்டி 8 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது.

ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x