

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐபிஎல் விதிமுறைகளுக்கு எதிராகப் பந்து வீசுவதற்கு டெல்லி கேபிடல்ஸ்அணி அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதையடுத்து, இந்த அபராதம் ஸ்ரேயாஸ் அய்யருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. 163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே சேர்த்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகப் பந்துவீசுவதற்கு அதிகமான நேரத்தை டெல்லி கேபிடல்ஸ் அணி எடுத்துக் கொண்டுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “செப்டம்பர் 29-ம் தேதி நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகப் பந்துவீச டெல்லி கேபிடல்ஸ் அணி அதிகமான நேரம் எடுத்துக்கொண்டது. இது ஐபிஎல் விதிமுறைக்கு எதிரானது. ஆதலால், டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு போட்டி ஊதியத்திலிருந்து ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.