Published : 30 Sep 2020 12:25 PM
Last Updated : 30 Sep 2020 12:25 PM

'முடியாதுன்னு சொல்றதை முடிச்சுக் காட்டுவோம்' - சிஎஸ்கே ஆட்டம் குறித்து இம்ரான் தாஹிர் ட்வீட்

முடியாது என்று சொல்வதை முடித்துக் காட்டுவதுதான் தங்கள் அணியின் பழக்கம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் இம்ரான் தாஹிர் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2020 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. கரோனா நெருக்கடியால் மைதானத்தில் பார்வையாளர்கள் இன்றி நடந்து வந்தாலும் நேரலையில் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த ஆட்டங்களை ரசித்து வருகின்றனர்.

இதுவரை நடந்த போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டில் தோல்வியடைந்துள்ளது. இதே நிலையில் இன்னும் சில அணிகள் இருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

இதுகுறித்து சென்னை அணிக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

''2010 ஐபிஎல் தொடரில் 7 ஆட்டங்கள் முடிந்த நிலையில் 2-ல் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்றிருந்தது. சென்னைக்கு வாய்ப்பே இல்லை எனப் பலர் எழுதினாலும் அடுத்த 7 ஆட்டங்களில் ஐந்தில் வெற்றி பெற்று, ப்ளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெற்று கடைசியில் கோப்பையை வென்றது. நிரூபித்துக் காட்டியவர்களை என்றும் சாடாதீர்கள்'' என்று ரசிகர் ஒருவர் ட்வீட் செய்திருந்தார்.

இதற்குப் பதிலளித்திருக்கும் சென்னை அணி வீரர் இம்ரான் தாஹிர், "சார், ஒரு சிலர் அவங்களை வெச்சு முடியாதுன்னு சொல்றாங்க. நாங்க எங்களை வெச்சு முடியும்னு சொல்றோம். முடியாதுன்னு சொல்றதை முடிச்சுக் காட்டுறதுதான் எங்க பழக்கம். எட்றா வண்டிய, போட்றா விசில" என்று குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்த அம்பதி ராயுடு மற்றும் பிராவோ ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் கண்டிப்பாக அடுத்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறும் என்று சில ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

அடுத்ததாக அக்டோபர் 2-ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் சிஎஸ்கே மோதுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x