

அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ்-ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றனர். இதன் மூலம் 9 கிராண்ட் ஸ்லாம் கலப்பு இரட்டையர் பட்டங்களை வென்று மகேஷ் பூபதியின் சாதனையை முறியடித்தார் பயஸ்.
கடினமான இறுதிப் போட்டியில் லியாண்டர் பயஸ்/மார்டினா ஹிங்கிஸ் ஜோடி, 6-4, 3-6, 10-7 என்று அமெரிக்க கலப்பு இரட்டையர் ஜோடியான பெதானி மேட்டக், சாம் குவெரி ஜோடியை போராடி வீழ்த்தினர்.
இன்னும் ஒரு கலப்பு இரட்டையர் கோப்பையை வென்றால் மார்டினா நவரதிலோவாவின் அனைத்து கால சாதனையை சமன் செய்வார் லியாண்டர் பயஸ். ஆனால் மார்டினா வென்ற இந்த 10 டிராபிகளில் இரண்டில் பயஸுடன் ஜோடி சேர்ந்து வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் கலப்பு இரட்டையர் சாம்பியன் பட்டத்துடன் 1969-ம் ஆண்டுக்கு பிறகு ஒரே ஆண்டில் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை ஒரே கலப்பு இரட்டையர் ஜோடி வென்றுள்ளனர்.
இது பயஸின் தனிப்பட்ட 18-வது கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டம், ஹிங்கிஸுக்கு 19-வது சாம்பியன் பட்டம். ஹிங்கிஸ் வென்ற 4 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களும் இந்திய ஜோடியுடன் வெல்லப்பட்டதே.
இறுதிப் போட்டியின் முதல் செட்டில் பயஸ்-ஹிங்கிஸ் தொடக்கத்திலேயே மேட்டக்-குவெரி சர்வை முறியடித்து 2-1 என்று முன்னிலை பெற்றனர். அதன் பிறகு பயஸ் அபாரமாக ஆட முதல் செட்டை 6-4 என்று கைப்பற்றினர்.
2-வது செட்டில் மேட்டக்-குவெரி ஜோடி எழுச்சி பெற்றது, ஹிங்கிஸ் சர்வ் ஒன்றை முறியடித்தார் மேட்டக். இதன் மூலம் எதிரணியினர் 3-1 என்று முன்னிலை பெற்றனர். ஹிங்கிஸ் அதன் பிறகு தனது சர்வில் 3 செட் பாயிண்ட்களை காப்பாற்றினார். ஆனால் குவெரி அடுத்த தனது சர்வில் எளிதில் வெல்ல இரண்டாவது செட்டில் 3-6 என்று பயஸ்-ஹிங்கிஸ் ஜோடி தோல்வி கண்டது.
அதன் பிறகு சூப்பர் டை பிரேக்குக்கு ஆட்டம் சென்றது. ஹிங்கிஸின் இரண்டு சர்வ்களை முறியடித்து மேட்டக்-குவெரி ஜோடி 4-1 என்று முன்னிலை பெற்றது. ஆனால் அதன் பிறகு பயஸ்-ஹிங்கிஸ் ஜோடி விட்டுக் கொடுக்காமல் சில அபாரமான ஷாட்களையும் சர்வ்களையும் போட 7-7 என்று சமன் ஆனது. இந்நிலையில் குவெரி சர்வ் ஒன்றை பயஸ் அபாரமாக பாஸிங் ஷாட் அடிக்க முன்னிலை பெற்றனர், அதன் பிறகு பயஸ் தனது 2 சர்வ்களிலும் வெற்றி பெற 1-4 என்ற நிலையிலிருந்து 10-7 என்று டைபிரேக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினர்.