மோர்கனை தாக்கிய பவுன்சர்: நடுங்கிப்போன ஆஸ்திரேலிய வீரர்கள்

மோர்கனை தாக்கிய பவுன்சர்: நடுங்கிப்போன ஆஸ்திரேலிய வீரர்கள்
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியின்போது, ஆஸ்திரேலியாவின் மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய அதிவேக பவுன்சர் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனின் தலையில் தாக்கியது. உடனடியாக அவர் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் போட்டியிலிருந்து வெளியேறினார்.

மோர்கனை பவுன்சர் தாக்கியதும் ஸ்டார்க் உட்பட சில ஆஸ்திரேலிய வீரர்கள் அச்சத்தால் நடுங்கிப் போய்விட்டனர் என ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் மான்செஸ்டரில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 33 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியாவில் பிஞ்ச் 70, பெய்லி 41 ரன்கள் ஆட்டமிழக்காமல் எடுக்க 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. தொடரையும் 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை மார்ஷ் வென்றார்.

இங்கிலாந்து 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது, அணித் தலைவர் மோர்கன் களமிறங்கினார். அவர் ஒரு ரன் எடுத்திருந்த நிலையில், ஸ்டார்க் வீசிய 7-வது ஓவரை எதிர்கொண்டார். அந்த ஓவரின் 5-வது பந்தை 144.8 கி.மீ வேகத்தில் பவுன்சராக வீசினார் ஸ்டார்க். அந்த பந்து மோர்கனின் ஹெல்மெட்டைத் தாக்கியது. இதில் நிலைகுலைந்த அவர், தடுமாறினார். பின்னர் கீழே அமர்ந்து விட்டார்.

உடனடியாக மருத்துவர்கள் மோர்கனைப் பரிசோதித்து முதலுதவி அளித்தனர். மோர்கனால் ஆட்டத்தைத் தொடர முடிய வில்லை. அவரின் தலையில் உள்காயம் ஏற்பட்டுள்ளது.

இதேபோன்ற சம்பவத்தால் ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோர்கனை பந்து தாக்கியதால் தாங்கள் நடுங்கிப் போனதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்மித் கூறியதாவது:

எங்களில் சில வீரர்கள் அச்சத்தால் நடுங்கி விட்டனர். குறிப்பாக ஸ்டார்க். அண்மையில்தான் பிலிப் ஹியூக்ஸை இழந்துள்ளோம். எனவே, மோர்கனை பந்து தாக்கியதும் சில வீரர்கள் நடுங்கி விட்டோம். நல்லவேளையாக அவர் நலமாக இருக்கிறார். யாரும் வேண்டுமென்றே இப்படி செய்ய மாட் டார்கள். பவுன்சர்கள் வீசுவது ஆட்டத் தின் ஒரு பகுதிதான். இதுபோன்று யாரையும் பந்து தாக்கு வதை நிச்சயமாக பார்க்க விரும்ப மாட்டீர்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in