இஷான் கிஷன் களைப்படைந்து விட்டார், அதனால்தன சூப்பர் ஓவரில் இறக்கவில்லை: ரோஹித் சர்மா

இஷான் கிஷன் களைப்படைந்து விட்டார், அதனால்தன சூப்பர் ஓவரில் இறக்கவில்லை: ரோஹித் சர்மா
Updated on
1 min read

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி பொலார்ட், இஷான் கிஷன் ஆகியோரால் விறுவிறுப்படைந்து சூப்பர் ஓவர் வரைச் சென்றது, சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.

இதில் சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்டியாவையும், கிரன் பொலார்டையும் இறக்கியது. ஆனால் 7 ரன்கள்தான் எடுக்க முடிந்தது, சைனி அபாரமாக வீசினார். தொடர்ந்து ஆடிய ஆர்சிபி பும்ரா வீசிய சூப்பர் ஓவரில் 8 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் கடைசி 4 ஓவர்களில் மும்பையின் இஷான் கிஷன், பொலார்ட் 79 ரன்களை வெளுத்துக் கட்டினர், சாம்ப்பா, சாஹல் ஓவர்களில் 49 ரன்கள் பறந்தன. மும்பை தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்தது வாஷிங்டன் சுந்தர் அதியற்புதமாக வீசினார்.

இந்நிலையில் சூப்பர் ஓவரில் ஹர்திக், பொலார்டை ஏன் இறக்க வேண்டும், நல்ல பார்மில் இருந்த இஷான் கிஷனை இறக்கியிருக்க வேண்டாமா என்ற கேள்வி எழுந்தது அதற்குத்தான் ரோஹித் சர்மா விளக்கம் அளித்தார்.

ரோஹித் சர்மா கூறியதாவது:

இது ஒரு மகா ஆட்டம். நாங்கள் தொடக்கத்தில் ஆட்டத்திலேயே இல்லை. பொலார்ட் வழக்கம் போல் பிரில்லியண்ட். எங்களிடம் இருக்கும் பேட்டிங்கை வைத்துக் கொண்டு 200 எடுத்து விட முடியும் என்றுதான் நம்பினோம்.

பொலார்ட் இருக்கும் வரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், இஷான் கிஷனும் நெடுந்தூரம் அடிக்க முடியும். ஆனால் பெங்களூரு தங்கள் நோக்கத்தில் விடாப்பிடியாக இருந்தனர்

இன்னிங்ஸ் முடிந்தவுடன் இஷான் கிஷன் மிகவும் களைப்பாக இருந்தார், இறங்கும் அளவுக்கு அவர் தன்னை சவுகரியமாக உணரவில்லை. அவரை விட்டால் ஹர்திக் பாண்டியாதான் பந்தை நீண்ட தூரம் அடிப்பவர். ஆனால் இந்த முறை ஒர்க் அவுட் ஆகவில்லை.

7 ரன்கள்தான் ஆனாலும் அதிர்ஷ்டம் நம் பக்கம் இருக்க வேண்டியது அவசியம். 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும், அப்போதுதான் வெற்றி சாத்தியம். மேலும் டிவில்லியர்ஸ் எட்ஜில் பட்டு பைன்லெக்கில் பவுண்டரி ஆனதும் துரதிர்ஷ்டமே, என்றார் ரோஹித் சர்மா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in