

அன்று கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக கோலியே 2 கேட்ச்களை விட்டார் இதனால் தோல்வி ஏற்பட்டது. நேற்று துபாயில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 3 கேட்ச்களை பெங்களூரு அணி விட்டது.
இதில் பொலார்டுக்கு பவன் நெகி விட்ட கேட்ச்சின் விளைவு ஆர்சிபிக்கு மோசமாகியிருக்கும்.
இந்நிலையில் சூப்பர் ஓவரில் வென்றதையடுத்து விராட் கோலி கூறியதாவது:
முதலில் 200 ரன்களைக் கடக்க நன்றாகப் பேட் செய்தோம். பந்து வீச்சிலும் அருமையாகவே தொடங்கினோம் (மும்பை 39 ரன்களுக்கு 3 விக்கெட்), அதன் பிறகு மும்பை அருமையாக ஆடினர். பொறுமை காத்து பனிப்பொழிவு வரட்டும் என்று காத்திருந்து பின்னால் பவர் ஹிட் அடித்தனர்.
நாங்கள் ஹர்திக் பாண்டியாவை வீழ்த்தினோம். ஆனால் பொலார்டும் இஷான் கிஷனும் மிக அருமையாகவே ஆடினர்.
மீண்டும் பீல்டிங்தான் பிரச்சனை. கேட்ச்களை விட்டதுதான் போட்டியை சூப்பர் ஓவருக்குக் கொண்டு சென்றது, இல்லையெனில் ரெகுலர் ஆட்டத்திலேயே வென்றிருப்போம். எனவே பீல்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்.
நவ்தீப் சைனி பிரமாதமான சூப்பர் ஓவரி வீசினார். அதுவும் ஹர்திக், பொலார்டுக்கு எதிராக சிறப்பாக வீசியது அருமை. நீளமான பவுண்டரிகள் அவரை யார்க்கர் வீச ஊக்குவித்தது. அவரிடம் நல்ல வேகம் உள்ளது, வைடு யார்க்கரும் நன்றாக வீசுகிறார். 2 புள்ளிகளை பெற அணி வீரர்கள் நல்ல திறமையை வெளிப்படுத்தினர். இவை முக்கியமான புள்ளிகள்.
சூப்பர் ஓவரில் ஏபி டிவில்லியர்ஸ் தான் இறங்குகிறேன் என்றார். நான் உங்களுடன் இறங்குகிறேன் என்றேன். இருவரும் ஆளுக்கு ஒரு பவுண்டரி அடித்து காரியத்தை கச்சிதமாக முடித்தோம்.
பும்ராவை எதிர்கொள்வது சுவாரஸ்யமாக இருந்தது, அவர்களின் சிறந்த வீச்சாளர் பும்ரா. அவரும் அழுத்தத்தில் இருந்திருப்பார். அவரும் ஆட்டத்தில் இருந்தார், நாங்களும் ஆட்டத்தில் இருந்தோம். இத்தகைய போட்டியைத்தான் மக்கள் பார்க்க விரும்புகிறார்கள். உயர்தரமான கிரிக்கெட். ரசிகர்களுக்கு பார்க்க விறுவிறுப்பு, ஆனால் கேப்டன்களுக்கு அல்ல.
பவர் ப்ளேயில் வாஷிங்டன் சுந்தர் நன்றாக வீசுவார், அதையே இப்போதும் செய்தார். இசுரு உதனாவும் நன்றாகத்தான் வீசினார். போலார்ட் கடைசி ஓவரில் அடித்திருக்காவிட்டால் அதுவரை ஸாம்பாவும் நன்றாகவே வீசினார்.
2 வெற்றிகள் தொடக்கத்திலேயே நல்ல விஷயம். தொடர்ந்து புள்ளிகளைச் சேர்த்தபடி இருக்க வேண்டும், என்றார் கோலி.