

கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக திடீரென சீறிப்பாய்ந்து ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசி ராஜஸ்தான் அணிக்கு நம்ப முடியாத வெற்றியப் பெற்றுத்தந்தார் ராகுல் திவேஷியா.
ஆரம்பத்தில் ரன் எடுக்கத் தடுமாறினாலும் பிறகு ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து, 31 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் அணி வீரர் ராகுல் தெவாதியா, தனது அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.
ஸ்மித் 50 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் திவேஷியா களமிறங்கினார். இடது கை பேட்ஸ்மென் என்பதால் லெக் ஸ்பின்னுக்கு எதிராக சரியாக அடிப்பார் என்று அவர் இறக்கப்பட்டார், ஆனால் அவரால் லெக்ஸ்பின்னரை அடிக்க முடியவில்லை 19 பந்துகளில் 8 ரன்கள் என்று தடுமாறினார் திவேஷியா.
மேக்ஸ்வெல் பவுலிங்கில் 2 சிக்சர்களை அடித்த சஞ்சு சாம்சன் பிறகு 85 ரன்களில் வெளியேற, 173/3 என்ற நிலையில் 18 பந்துகளில் 51 ரன்கள் தேவை என்ற நிலையில் காட்ரெல் வீசிய 18வது ஓவரில் 5 சிக்சர்களை விளாசினார், ஒரு பந்து பீட்டன் ஆனார். இல்லையெனில் 6 சிக்சர் ஓவராக அது அமைந்திருக்கும். பிறகு ஷமியையும் அப்பர் கட்டில் சிக்ஸ் அடித்து 7 சிக்சர்களுடன் 53 ரன்களை விளாச ராஜஸ்தான் வெற்றி எளிதானது.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ராகுல் திவேஷியா போல 2020-ம் ஆண்டும் தடாலடியாக மாறும் என நம்புவோம் என்று குறிப்பிட்டுள்ளது.
2020-ம் ஆண்டு கரோனாவினால் பாதிக்கப்பட்டு மக்கள் உலகம் முழுதும் பல இன்னல்களை சந்தித்து வருவதையடுத்து இந்த வாசகம் நம்பிக்கையூட்டுவதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.