Last Updated : 28 Sep, 2020 03:13 PM

 

Published : 28 Sep 2020 03:13 PM
Last Updated : 28 Sep 2020 03:13 PM

யாருடனும் ஒப்பிடாதீர்கள்: தோனி மாதிரி சஞ்சு சாம்ஸன் இருக்கத் தேவையில்லை: சசி தரூர் கருத்துக்கு கவுதம் கம்பீர், ஸ்ரீசாந்த் பதிலடி


ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சஞ்சு சாம்ஸனை எந்த வீரருடனும் ஒப்பிடாதீர்கள். தோனி மாதிரி சாம்ஸன் இருக்கத் தேவையில்லை என்று சசிதரூர் கருத்துக்கு கவுதம் கம்பீர், ஸ்ரீசாந்த் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்ெகட் இழப்புக்கு 223 ரன்கள் சேர்த்தது.

இமாலய இலக்கான 224 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் என வரலாற்று சேஸிங் செய்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

களத்தில் இறங்கியது முதல் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு, 42 பந்துகளில் 85 ரன்கள்(7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) சேர்த்த சஞ்சு சாம்ஸன் ஆட்டநாயகன் விருது பெற்றார். சாம்ஸன் தொடர்ச்சியாக பெறும் 2-வது ஆட்டநாயகன் விருதாகும்.

சஞ்சு சாம்ஸன் ஆட்டத்தைப் புகழ்ந்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து கருத்துப் பதிவிட்டார் அதில் “ ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கிடைத்தது என்ன ஓர்அற்புதமான வெற்றி. எனக்கு சாம்ஸனை கடந்த 10 ஆண்டுகளாகத் தெரியும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது சாம்ஸன் 14 வயது இருக்கும் போதே, ஒருநாள் நிச்சயம் அடுத்த தோனியாக மாறுவார் என்று தெரிவித்தேன். நல்லது அந்த நாள் இன்றுதான். ஐபிஎல் தொடரில் இரு இன்னிங்ஸிலும் சாம்ஸன், தன்னை உலகத் தரம்வாய்ந்த வீரர் என நிரூபித்துவிட்டார்” எனத் தெரிவித்திருந்தார்.

சசி தரூரின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள பாஜக எம்.பி. கவுதம் கம்பீர், கேரள மாநிலத்தின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் ஆகியோர் யாருடனும் சஞ்சு சாம்ஸனை ஒப்பிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர்.

கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ யார் மாதிரியும் சஞ்சு சாம்ஸன் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர், இந்தியக் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்ஸன் என்ற பெயரிலேயே இருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ சாம்ஸன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்புகிறேன். இரு இன்னிங்ஸ்களுடன் முடியாது, ஏராளமான சாதனைகளை சாம்ஸனை உடைக்கப் போகிறார், நாட்டுக்காகப் பல கோப்்பைகளை பெற்றுத் தரப்போகிறார்.

ஆதலால், தயவு செய்து யாருடனும் சாம்ஸனை ஒப்பிடாதீர்கள். அவரிடம் இருந்து இன்னும் அவரின் முழுத்திறமையும் வெளிவரவில்லை” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x