சூப்பர் சீரிஸ் இறுதிச்சுற்று கனவு நனவாகிவிட்டது: இந்திய பாட்மிண்டன் வீரர் அஜய் ஜெயராம் நெகிழ்ச்சி

சூப்பர் சீரிஸ் இறுதிச்சுற்று கனவு நனவாகிவிட்டது: இந்திய பாட்மிண்டன் வீரர் அஜய் ஜெயராம் நெகிழ்ச்சி
Updated on
2 min read

தென் கொரிய பாட்மிண்டன் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியதன் மூலம் சூப்பர் சீரிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ஆட வேண்டும் என்ற எனது கனவு நனவாகிவிட்டது என இந்திய பாட்மிண்டன் வீரர் அஜய் ஜெயராம் தெரிவித்துள்ளார்.

தென் கொரிய தலைநகர் சியோலில் நடந்த தென் கொரிய ஓபனில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஜெயராம், அதில் உலகின் முதல் நிலை வீரரான சீனாவின் சென் லாங்கிடம் தோல்வி கண்டார். இதனால் வெள்ளிப் பதக்கத்தோடு நாடு திரும்பிய ஜெயராம், மேலும் கூறியதாவது: நான் குழந்தையாக இருந்தபோதே பீட்டர் காடே, லின் டான், தவ்பிக் ஹிதாயத் போன்ற பாட்மிண்டன் ஜாம்பவான்களை பார்த்து வளர்ந்தவன். அதனால் சூப்பர் சீரிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ஆட வேண்டும் என்ற கனவு எனக்குள் இருந்தது. எனவே தென் கொரிய பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் விளையாடியது எனக்கு மிகப்பெரிய தருணம் ஆகும் என்றார்.

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக 7 மாத காலம் ஓய்வில் இருந்தார் ஜெயராம். அப்போது பல்வேறு மருத்துவர்களை சந்தித்த அவர், அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். அது குறித்து அவரிடம் கேட்டபோது, “காயத்தால் ஓய்வில் இருக்கும் காலம் அவ்வளவு எளிதான காலம் அல்ல. காயம் ஏற்பட்டபோது 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் களம் திரும்பிவிடலாம் என நினைத்தேன்.

ஆனால் அதன்பிறகு பழைய நிலைக்கு வருவதற்காக 2 மாத காலம் பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. அது மிகவும் சவாலான காலம் ஆகும். ஏனெனில் அந்த காலக்கட்டத்தில் ஏராளமான ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். அந்த நேரங்களில் நீங்கள் நன்றாக இருப்பது போன்று உணர முடியாது. அவ்வப்போது வலி ஏற்படும். அதனால் உடற்தகுதி குறித்து நமக்குள் சந்தேகம் எழும்.

ஆனால் 7 மாத ஓய்வுக்குப் பிறகு மீண்டும் களம் திரும்பியதுமே நெதர்லாந்து ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றது எனக்கு மிகப்பெரிய விஷயமாகும். அதன்பிறகு மலேசிய ஓபனில் அரையிறுதி வரையும், ஸ்விஸ் ஓபனில் இறுதிச்சுற்றுக்கும் முன்னேறினேன். எனது ஆட்டம் சிறப்பாக அமைந்தது. எனக்கும் அதுபோன்ற ஆட்டம்தான் தேவைப்பட்டது. தென் கொரிய சூப்பர் சீரிஸ் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியது எனது தலைசிறந்த செயல்பாடு ஆகும். அடுத்ததாக நிறைய சூப்பர் சீரிஸ் போட்டிகளில் விளையாடவிருப்பதால் பார்மை தக்க வேண்டும். அது மிகவும் சவாலானதாகும்.

காயம் காரணமாக ஓய்வில் இருந்த காலக்கட்டம், வேகமாக களம் திரும்பவும், சிறப்பாக ஆடவும் என்னை தூண்டியது. அது கடினமான காலக்கட்டமாக இருந்தாலும், எனது பெற்றோருடன் நேரத்தை செலவிட முடிந்ததில் மகிழ்ச்சியே” என்றார்.

தென் கொரிய ஓபன் குறித்துப் பேசிய ஜெயராம், “ஜப்பான் ஓபனில் விக்டர் ஆக்ஸெல்சனிடம் தோற்றிருந்தேன். அது என்னை மிகவும் பாதித்தது. ஆனால் தென் கொரிய ஓபனின் முதல் சுற்றில் விக்டரை வீழ்த்தியபோது அது எனக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்தது. அது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எனக்கு உந்துதல் கொடுத்தது. இதேபோல் டியென் சென்னிடமும் இரு முறை தோற்றிருந்தேன்.

அவரையும் கொரிய ஓபனில் வீழ்த்தியபோது அது எனக்கு மேலும் அதிகமான நம்பிக்கையைத் தந்தது. அந்தப் போட்டியின் ஒவ்வொரு சுற்றிலும் எனது நம்பிக்கை உயர்ந்து கொண்டேயிருந்தது. அதனால் சிறப்பாக ஆட முடிந்தது. இறுதிச் சுற்றிலும் நன்றாகவே ஆடினேன். சென் லாங்குக்கு இணையாக ஆடியிருந்தால் போட்டியின் முடிவை மாற்றியிருக்கலாம்” என்றார்.

சர்வதேச பாட்மிண்டன் புதிய தரவரிசை நாளை வெளியாக வுள்ளது. அது வெளியாகும்போது அஜய் ஜெயராம் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பார். அது குறித்துப் பேசிய ஜெயராம், “தரவரிசையைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. முதல் 25 இடங்களுக்குள் நான் இருப்பேன் என்பது எனக்குத் தெரியும். தொடர்ச்சியாக வெற்றி பெறுவதிலும், தொடர்ச்சியாக காலிறுதி மற்றும் அரையிறுதிக்கு முன்னேறுவதிலும் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். அப்படி சிறப்பாக ஆடும்போது தரவரிசை தானாக உயரும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in