

ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி சரியாகவே ஆடவில்லை. மேலும் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் ராகுல் 132 ரன்களை சாத்தி எடுத்த போது அவருக்கு 2 எளிதான கேட்ச்களையும் கோட்டை விட்டார் விராட் கோலி.
பேட்டிங்கில் 5 பந்துகளில் 1 ரன் எடுத்து ஷாட் சரியாகச் சிக்காமல் கொடியேற்றி 1 ரன்னில் வெளியேறினார், மொத்தத்தில் கோலிக்கு முதல் 2 போட்டிகளும் சரியாக அமையவில்லை.
வர்ணனையில் இருந்த சுனில் கவாஸ்கர் “Inhone lockdown me to bas Anushka ki gendon ki practice ki hain" என்று கோலி அவரது மனைவி அனுஷ்கா சர்மாவின் அந்தரங்க வாழ்க்கையை குறிப்பிட்டு மோசமான வார்த்தைகளினால் இந்தியில் நகைச்சுவை என்ற பெயரில் வர்ணனை செய்தது பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
இதனையடுத்து ஆர்சிபி மற்றும் விராட் கோலி ரசிகர்கள் சுனில் கவாஸ்கரை வர்ணனையிலிருந்து நீக்குமாறு பிசிசிஐக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இப்போது மட்டுமல்ல சில ஆண்டுகளாகவே விராட் கோலி தோல்வியடைந்தால் அதற்குப் பாவம்! அவரது மனைவி அனுஷ்கா சர்மாவை, நடிகை என்பதாலேயே ரசிகர்கள் ஆபாசமாக வசைபாடுவதும் கேலி செய்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
பல ரசிகர்கள் மீண்டும் அனுஷ்கா ஷர்மாவை ‘ட்ரோல்’ செய்ய, சுனில் கவாஸ்கர் இந்தப் பட்டியலில் இணைய, வேறு சில ட்விட்டர் வாசிகள், வர்ணனையில் சுனில் கவாஸ்கர் நகைச்சுவை என்ற பெயரில் வக்கிரமான கருத்துகளை கூறி வருகிறார் என்று சாடி வருகின்றனர்.
இந்நிலையில் சுனில் கவாஸ்கரை வர்ணனைக் குழுவிலிருந்து நீக்க வேண்டும், அவரது ரசனைகெட்ட கருத்துகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.