

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் 6வது போட்டியில் 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 17 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 97 ரன்களில் தோல்வி அடைந்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல். ராகுல் இறுதி ஆட்டமிழக்காமல் 14 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 69 பந்துகளில் 132 ரன்கள் சேர்த்து கேப்டனாக அணியை முன்னின்று வழிநடத்துவது எப்படி என்பதை கோலிக்கும் தோனிக்கும் கற்றுக் கொடுத்தார் என்றால் அது மிகையாகாது.
ராகுலுக்கு மட்டும் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி இரு கேட்சுகளை நேற்று நழுவவிட்டு அவர் சதம் அடிக்க பெரும் துணையாக அமைந்தார்.
இந்நிலையில் ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்காக ஆர்சிபி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
பவுலிங்கில் நடு ஓவர்களில் நல்ல நிலையில் இருந்தோம், தோல்வி மீதான விமர்சனங்களை நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அவர்களை 180 ரன்களுக்கு மட்டுப்படுத்தியிருந்தால் பேட்டிங்கில் முதல் பந்திலிருந்தே அடிக்கப் போக வேண்டிய நிர்பந்தம் இருக்காது.
இப்படி நடக்கும் நாட்கள் கிரிக்கெட்டில் இருக்கவே செய்யும். நல்ல ஆட்டமாக அமையலாம், மோசமான ஆட்டமாக அமையலாம், ஆனால் ஏற்றுக்கொண்டு அடுத்தக்கட்டத்துக்கு நகர வேண்டும். சிறு சிறு தவறுகளை சரிசெய்ய வேண்டும்.
2 கேட்ச்களை விட்டேன், பேட்டிங்கிலும் அணியை முன்நின்று வழிநடத்தவில்லை. நன்றாகத் தொடங்கினோம், எடுத்த எடுப்பிலேயே அவர்களுக்கு இக்கட்டு ஏற்படுத்தியிருக்க வேண்டும். பிலிப் நன்றாக ஆடக்கூடியவர்தான் ஆஸி. பிக்பாஷ் லீகில் டாப்-ல் இறங்கி நல்ல ஸ்கோர்களை எடுத்துள்ளார்.
ஆரம்பக்கட்டம்தானே, போகப்போக அவரது திறமையை அதிகரிக்க வழி செய்வோம். முயற்சி செய்கிறோம் ஆனால் செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன, என்றார் விராட் கோலி.