டிபிஎல் போட்டிகளின் சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு வீரர்கள் தேர்வு 

இடமிருந்து வலமாக: கார்த்திகேயன், ராஜ்மகேஷ்வரன், செந்தில்குமார், சன்மேக்கர்
இடமிருந்து வலமாக: கார்த்திகேயன், ராஜ்மகேஷ்வரன், செந்தில்குமார், சன்மேக்கர்
Updated on
1 min read

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் வருகிற நவம்பர் மாதம் ஐபிஎல் போட்டி போன்றே மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான டிபிஎல் போட்டி துபாயில் நடக்க உள்ளது. இதில், சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் என ஐந்து அணிகள் விளையாட உள்ளன.

இது முதல் வருடம் என்பதால் அந்தந்த மாநில வீரர்கள் அவர்கள் அணிக்காக விளையாட உள்ளனர். இதில், தமிழக அணி சார்பில் விளையாட உள்ள சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்கு இந்த மாதம் மதுரை மற்றும் தேனியில் நடைபெற்ற பயிற்சி முகாம் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், அரியலூர் மாவட்டத்திலிருந்து திருமழபாடி ராஜ்மகேஷ்வரன் (29), உதயநத்தம் கார்த்திகேயன் (28), கீழமிக்கேல்பட்டி சன்மேக்கர் (25), இரும்புலிக்குறிச்சி செந்தில்குமார் (36) ஆகிய 4 பேரும் தேர்வாகி உள்ளனர்.

இதில் ராஜ்மகேஸ்வரன் கடந்த ஆறு வருடங்களாக தமிழக மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர் ஆவார். மற்ற மூவரும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்வாகியுள்ள 4 பேரையும் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

டிபிஎல் போட்டியின் சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்குத் தேர்வாகி உள்ள இந்த நான்கு பேரும் அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அணியின் பயிற்சியாளர் வெங்கடேசன் மற்றும் பயிற்சி செய்ய இடம் கொடுத்து ஊக்குவித்த சுவாமி கிரிக்கெட் அகாடமியின் தாளாளர் கோவிந்தசாமி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in