சஞ்சு சாம்சன் அடித்த ஒவ்வொரு ஷாட்டுமே சிக்ஸருக்குச் சென்றதைப் போல் உணர்ந்தேன்,  நம்ப முடியாத பேட்டிங்: கொண்டாடும் ஸ்டீவ் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித்.
ஸ்டீவ் ஸ்மித்.
Updated on
1 min read

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றித் தொடக்கம் கண்டது.

ஒரு புறம் எதிரணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், அணியை முன்னின்று வழிநடத்தும் விதமாக தொடக்கத்தில் இறங்கி பிரமாதமாக தன் பணியைச் செய்ய எம்.எஸ்.தோனி மற்றவர்கள் கையில் போட்டியை ஓப்படைத்து விட்டு இறங்கிய போது ஆட்டம் ஏறக்குறைய ராஜஸ்தான் வெற்றியை உறுதி செய்திருந்தது.

4 ஒவர்களில் 26 என்ற நிலையில் ஸ்மித்துடன் இணைந்து 9 ஓவர்களில் 121 ரன்களைச் சேர்த்தார் சஞ்சு. இதில் சஞ்சு மட்டுமே 32 பந்துகளில் 1 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 74 ரன்கள் விளாசினார். ஸ்கோர் 10 ஓவர்களில் 119 ரன்களை எட்டியது, கடைசியில் லுங்கி இங்கிடி சொதப்ப ஜோப்ரா ஆர்ச்சர் 4 தொடர் சிக்சர்களுடன் 30 ரன்களை கடைசி ஓவரில் விளாசினார். இதனையடுத்து ஸ்கோர் 216 ரன்களை எட்டியது, சிஎஸ்கே 200 ரன்களையே எடுக்க முடிந்து தோல்வி தழுவியது.

சஞ்சு சாம்சன் இன்னிங்ஸ் பற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறும்போது, “சஞ்சு சாம்சன் நம்ப முடியாத ஒரு ஆட்டத்தை ஆடினார். அவர் அடித்த ஒவ்வொரு ஷாட்டுமே சிக்ஸருக்குச் சென்றதைப் போல் உணர்ந்தேன். கடைசியில் ஜோப்ரா ஆர்ச்சர் அடித்ததும் பிரமாதம்.

நான் சஞ்சுவிடம் ஸ்ட்ரைக்கை அளித்தேன். சஞ்சு மட்டையின் நடுவில் எல்லாப் பந்தையும் வாங்கி ஆடினார். இந்த இன்னிங்ஸ் அவருக்கு இந்த ஐபிஎல் தொடரில் பெரிய இடத்துக்கான முன்னோட்டம் என்று கருதுகிறேன்.

ஜோஸ் பட்லர் வந்த பிறகு நான் எந்த டவுனில் ஆடுவது என்பதை யோசிக்க வேண்டும். இந்தப் பிட்சில் ஸ்பின்னர்கள் நேராக அடிக்குமாறு வீசக்கூடாது. அதனால் பேக் ஆஃப் லெந்த்தில் வைத்திருந்தோம், சிஎஸ்கேவை ஒரு ஐயத்திலேயே வைத்திருந்தோம்.” என்றார் ஸ்டீவ் ஸ்மித்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in