

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான சிஎஸ்கேயின் தோல்விக்கு கேப்டன் தோனி முன்னாள் களமிறங்காமல் 7ம் நிலையில் இறங்கியது அர்த்தமற்ற செயல் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடுமையாகச் சாடியுள்ளார்.
217 ரன்கள் இலக்கை எதிர்த்து தோனி போன்ற ஒரு ஹிட்டர் இறங்காமல் பின்னால் தள்ளிப்போட்டதுதான் கேப்டனாக அணியை வழிநடத்துவதா என்று கம்பீர் கடும் விமர்சனத்தை தோனி மீது வைத்தார்.
தோனி இறங்கும் போது ஆட்டம் முடிந்து விட்டது, 38 பந்துகளில் 103 ரன்கள் தேவை. டுபிளெசிஸும் முழு வீச்சுக்கு வரவில்லை அவர் 18 பந்துகளில் 17 என்று கொஞ்சம் திணறிக் கொண்டிருந்தார். கடைசியில் சிஎஸ்கே அணி 200 ரன்களுக்கு முடிந்து தோல்வி கண்டது.
முன்னதாக பவர் ப்ளேயில் 4 ஓவர்களில் 26/1 என்று சாதாரணமாகத்தான் இருந்தது ராஜஸ்தான் அணி, ஆனால் சஞ்சு சாம்ச்ன, ஸ்மித் ஜோடியில் சஞ்சு சாம்சன் பிரித்து மேய்ந்து விட்டார். சிஎஸ்கே ஸ்பின்னர்களை மைதானத்துக்கு வெளியே அடித்து பியூஷ் சாவ்லாவையும் ஜடேஜாவையும் வெளுத்து வாங்கினார், 4 ஓவர் 26 ரன்களிலிருந்து 10 ஒவர்கள் 119 ரன்கள் என்று ஆனது. ஜடேஜா ஒரு ஓவர் 14 ரன், சாவ்லா ஒரு ஓவர் 28 ரன். 32 பந்துகளில் 9 சிக்சர்கள் ஒரு பவுண்டரியுடன் சஞ்சு 73 ரன்கள் என்று பெரிய சேதத்தை ஏற்படுத்திச் சென்றார். ஸ்மித் 47 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 69 ரன்கள் எடுத்தார், கடைசியில் ஆர்ச்சர் 8 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 27 விளாச ராஜஸ்தான் 216 ரன்களைக் குவித்தது.
சிஎஸ்கே அணி பவர் ப்ளேவுக்குப் பிறகே போட்டியிலேயே இல்லை, தோனி இறங்கும் போது ஏற்கெனவே போட்டி முடிந்து விட்ட நிலைதான், அதனால் நெட் ரன் ரேட்டுக்காக சிஎஸ்கே ஆடியது போல் தோன்றியது. சாம் கரன், ருதுராஜ், கேதார் ஜாதவ் ஆகியோரை இறக்கி விட்டு 7ம் நிலையில் தோனி இறங்கியதை கம்பீர் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ டி20 டைம் அவுட் நிகழ்ச்சியில் கடுமையாகச் சாடிய போது:
“எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. எம்.எஸ்.தோனி 7ம் நிலையில் இறங்கியது. அதுவும் ருதுராஜ் கெய்க்வாடை இறக்கிய பிறகு தான் இறங்க முடிவெடுத்தது, சாம்கரணை முன்னால் களமிறங்கச் செய்தது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. இது அர்த்தமுள்ளதாக தெரியவில்லை. உண்மையில் சொல்லப்போனால் கேப்டனாக அணியை முன்னின்று வழிநடத்தியிருக்க வேண்டாமா. இதை வழிநடத்துவது என்று அழைக்காதீர்கள்.
217 ரன்கள் இலக்கை விரட்டும் போது 7ம் நிலையிலா இறங்குவது? அவர் இறங்கும்போது ஆட்டம் முடிந்து விட்டது. ஃபாப் டுபிளெசிஸ் தனி வீரராக நின்றார்.
உடனே கடைசி ஓவரில் தோனி 3 சிக்சர்கள் அடித்தார் என்று கூறுவார்கள், அதனால் என்ன பயன்? அது அவரது சொந்த ரன்கள் அவ்வளவே.
தோனி செய்ததையே மற்றவர்கள், மற்ற கேப்டன்கள் செய்தால் என்ன ஆகியிருக்கும், கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கும். செய்தது தோனி என்பதால் ஒருவரும் வாயைத்திறப்பதில்லை. சுரேஷ் ரெய்னா இல்லாத நிலையில் சாம் கரனை இறக்கி விடுவது, தோனி தன்னை விட சாம்கரணைத்தான் சிறந்தவர் என்று நம்புகிறார் போல் தெரிகிறது. ருதுராஜ் கெய்க்வாட் தன்னை விட சிறந்த வீரர் என்று தோனி கருதுகிறாரா. கரண், கேதார் ஜாதவ், டுபிளெசிஸ், முரளி விஜய் ஆகியோர் அவரை விடச் சிறந்தவர்கள் அப்படித்தானே.
தோனி முன்னால் இறங்கி அவுட் ஆகியிருந்தால் கூட பரவாயில்லை. அதில் தவறொன்றுமில்லை. குறைந்தபட்சம் அணியை முன்னின்று வழிநடத்தியிருக்கலாம், உத்வேகம் அளித்திருக்கலாம். கடைசி ஓவரில் ஆடிய ஆட்டத்தை 4ம் நிலை அல்லது 5ம் நிலையில் இறங்கிச் செய்திருந்தால் டுபிளெசிசுடன் சேர்ந்து இதை ஒரு சுவாரசியமான ஆட்டமாக மாற்றியிருக்கலாம். ஆனால் அப்படி சவாலாக இருக்க வேண்டும் என்ற நோக்கமெல்லாம் அவருக்கு இல்லை.
முதல் 6 ஒவர்களுக்குப் பிறகே சிஎஸ்கே போட்டியை விட்டுவிட்டது என்றே நான் கருதினேன். தோனி இறங்குவார், போட்டிக்கான ரிதமுக்கு அவர் திரும்பி கடைசி வரை நின்று வரும் போட்டிகளில் இன்னும் இது போன்ற இன்னிங்ஸை ஆடுவார் என்றே நினைத்தேன். ஆனால் அவர் இறங்கவேயில்லை.
நிகழ்காலத்தில் இருக்க வேண்டும், ஒவ்வொரு போட்டியையும் முடிந்தவரையில் வெல்லப் பார்க்க வேண்டும். சிஎஸ்கே அணியிடம் தீவிரமே இல்லை, நோக்கமே இல்லை. விரட்டலில் அவர்கள் இல்லவே இல்லை. டுபிளெசியும் ஆரம்பத்தில் திணறினார். எனவே தோனி 7ம் நிலையில் இறங்கியது தவறான கணக்கே. சரியான கேப்டன்சி இல்லை. தோனி போன்ற ஒருவரிடம் யாரும் இதை எதிர்ப்பார்க்கவில்லை.” என்று கம்பீர் கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.