Last Updated : 23 Sep, 2020 12:55 AM

 

Published : 23 Sep 2020 12:55 AM
Last Updated : 23 Sep 2020 12:55 AM

சாம்ஸனிடம் வீழ்ந்தது சிஎஸ்கே: ஸ்மித், ஆர்ச்சர் அசத்தல்: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு முதல் வெற்றி: தோற்றாலும் மண்ஒட்டாத தோனி படை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணமாக அமைந்த சஞ்சு சாம்ஸன் : படம் உதவி் ஐபிஎல் ட்வி்ட்டர்

ஷார்ஜா

சஞ்சு சாம்ஸனின் முரட்டுத்தனமான பேட்டிங், ஸ்மித்தின் அதிரடி ஆகியவற்றால் ஷார்ஜாவில் நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் சேர்த்தது. 217 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே சேர்த்து 16 ரன்களில் தோல்வி அடைந்தது.

217 ரன்கள் சேஸிங் செய்யக்கூடிய ஸ்கோர் அல்ல என சிஎஸ்கே அணிக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அவ்வாறு சேஸிங் செய்ய முற்பட்டு அடித்து ஆடினால் விக்கெட்டை விரைவாக இழந்துவிடுவோம் எனத் தெரிந்துள்ளது. அதனால் ரன்ரேட்டை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் மிகவும் புத்திசாலித்தனமாக பேட் செய்து 200 ரன்களைச் சேர்்த்து தோற்றாலும் மீசையில் மண் ஒட்டாமல் தப்பித்துக்கொண்டது.

காட்டடி சாம்ஸன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் சஞ்சு சாம்ஸனின் காட்டடி பேட்டிங் மட்டும்தான். ஆட்ட நாயகன் விருதும் சாம்ஸனுக்கே வழங்கப்பட்டது.

2-வது விக்கெட்டுக்கு ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தபின் சாம்ஸன் அடித்த ஒவ்வொரு சிக்ஸர்களும் சிஎஸ்கே அணிக்கு இடியாக இறங்கியது. சாம்ஸனின் அசுரத்தனமான பேட்டிங்கைப் பார்த்து தோனியே ஒரு கட்டத்தில் குழப்பத்தில் யாரை பந்துவீசச் செய்யலாம் என திகைத்தார்.

முதல்முறையாக தொடக்க வீரர்

சாம்ஸனுக்கு இணையாக ஸ்மித்தும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். ராஜஸ்தான் அணியில் இருவரும் அடித்ததுதான் ரன் குவிப்புக்கு முக்கியமான காரணம், மற்றவர்கள் ஜொலிக்கவில்லை.

ஸ்டீவ் ஸ்மித் தனது 13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருமுறை கூட தொடக்க வீரராக களமிறங்கியதில்லை. ஸ்மித் இதுவரை 551 இன்னிங்ஸ்களில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியபோதிலும், பல்வேறு நிலையில் களமிறங்கினார். ஆனால் தொடக்கவீரராக மட்டும் களமிறங்கியதில்லை. முதல்முறையாக இந்த ஆட்டத்தில் ஆட்டத்தைத் தொடங்கினார்.

அர்ச்சர் அதிரடி

ஆர்ச்சர் கடைசி ஓவரில் சரவெடியாக வெடித்துச் சிதறியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றது. ஒருவேளை ஆர்ச்சரை அடிக்க விடாமல் கட்படுத்தி இருந்தால் 30 ரன்களை மிச்சப்படுத்தப்பட்டு இருக்கும். சிஎஸ்கே அணிக்கு வெற்றியும் சாத்தியமாகி இருந்திருக்கும்.

பந்துவீ்ச்சிலும் ஆர்ச்சர் கட்டுக்கோப்பாக 13 டாட் பந்துகளை வீசினார். 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக்கொடுத்து முக்கியமான விக்கெட்டான டூப்பிளசிஸை ஆர்ச்சர் வெளியேற்றினார். அதேபோல திவேஷியாவும் 4 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணாக அமைந்தார்.

சுழற்பந்து நிலைமை பரிதாபம்

சுழற்பந்துதான் பலம் என்று சிஎஸ்கே நினைத்திருத்த நிலையில் சாம்ஸனிடம் சுழற்பந்துவீச்சாளர்களான பியூஷ் சாவ்லா, ஜடேஜா இருவரும் க்ளீன் போல்டாகினர்.

சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை சாம்ஸன் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கு அடித்து வான வேடிக்கை காட்டுவதைப் பார்த்த சுழற்பந்துவீச்சாளர்கள் மிரண்டுவிட்டனர். எந்தப் பக்கம் வீசுவது எனத் தெரியாமல் பதற்றத்தில் ஓவர் பிட்சாக வீசி வாங்கிக் கட்டிக்கொண்டனர். இதில் சாவ்லா நிலைமை பரிதாபம், இங்கிடி நிலைமை மிக மோசம்.

தோனியின் தவறுகள்

வாட்ஸன் ஆட்டமிழக்கும்வரை 56 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த சிஎஸ்கே அதன்பின் 21 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை விரைவாக இழந்தது களத்தில் இருந்த பேட்ஸ்மேனை நெருக்கடியில் ஆழ்த்தியது. இந்த விக்கெட் சரிவைத் தடுத்திருக்கலாம்.

தோனி 7-வது வீரராக களமிறங்குவதைவிட 3 அல்லது 4-வது வீராக களமிறங்கிருக்க வேண்டும். ஒருவேளை கெய்க்வாட் இடத்தில் தோனி களமிறங்கி இருந்தால், நிச்சயம் டூப்பிளசிஸுடன் சேர்ந்து ஆட்டத்தை நகர்த்திக் கொண்டு வந்திருப்பார். கடந்த போட்டியிலும் செய்த அதை தவறை இந்த போட்டியிலும் தோனி செய்துள்ளார்.

கடைசி ஓவரில் தோனி உயிரைக் கொடுத்து வெளுத்து வாங்கியதை தொடக்கத்திலேயே செய்திருந்தால் அணியின் ஸ்கோர் இன்னும் வேகமாக உயர்ந்திருக்கும், அழுத்தமும் குறைந்திருக்கும்.

சிஎஸ்கே அணியில் சிறந்த ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜாவை தோனி தொடர்ந்து மறந்து வருகிறார். ஜடேஜாவை கடைசிநிலையில் இறக்கி அவரின் விக்கெட்டையும், திறமையும் தோனி வீணடிக்கிறார். அவரை 3வது வீரராக களமிறக்கி தோனி வாய்ப்பு கொடுக்கலாம்.

அம்பதிராயுடு, பிராவோ, ரெய்னா ஆகியோரின் இல்லாத வெற்றிடம் சிஎஸ்கே அணியில் நன்கு தெரிகிறது.

கடினமான இலக்கு

ஓவருக்கு 11 ரன்ரேட் தேவை எனும் கடினமான இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. வாட்ஸன், முரளி விஜய் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆர்ச்சர், உனத்கத் வீசிய முதல் இரு ஓவர்களில் பெரிதாக ரன் ஏதும் சேர்க்கவில்லை.

அதன்பின் வாட்ஸன் வழக்கம்போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பந்தை பறக்கவிட்டதால் ரன் ரேட் வேகமெடுத்தது. பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்தது.

விக்கெட் சரிவு

7-வது ஓவரை திவேஷியா வீசினார். 4-வது பந்தில் வாட்ஸன் க்ளீன் போல்டாகி 33 ரன்களில் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

2-வது விக்கெட்டுக்கு டூப்பிளசிஸ் களம் புகுந்தார். ஸ்ரேயாஸ் கோபால் வீசிய 8-வது ஓவரில் டீப் ஸ்குயர் லெக் திசையில் டாம் கரனிடம் கேட்ச் கொடுத்து முரளி விஜய் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து சாம் கரன் களமிறங்கினார்.

திவேஷியா வீசிய 9-வது ஓவரில் இரு சிக்ஸர்களை சாம் கரன் விளாசினார். ஆனால், 5-வது பந்தில் அடிக்க முற்பட்ட சாம்ஸன், விக்கெட் கீப்பர் சாம்ஸனால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு 17 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 4-வது விக்கெட்டுக்கு வந்த கெய்க்வாட் விக்கெட் கீப்பர் சாம்ஸனால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே திணறியது. 5-வது விக்கெட்டுக்கு வந்த ஜாதவ், டூப்பிளசிஸுடன் சேர்ந்தார். 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் சேர்த்திருந்தது.

ஸ்ரேயாஸ் கோபால் வீசிய 12-வது ஓவரில் ஜாதவ் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார். டாம் கரன் வீசிய 14-வது ஓவரில் விக்கெட் கீப்பர் சாம்ஸனிடம் கேட்ச் கொடுத்து ஜாதவ் 22 ரன்களில் வெளியேறினார்.
7-வது விக்கெட்டுக்கு தோனி களமிறங்கி, டூப்பிளஸிஸுடன் ஜோடி சேர்ந்தார். டூப்பிளஸியை அடிக்கவிட்டு, அவருக்கு தோனி ஒத்துழைத்தார்.

டூப்பிளசிஸ் நம்பிக்கை

திவேஷியா வீசிய 15-வது ஓவரில் இரு அபாரமான சிக்ஸர்களை விளாசினார் டூப்பிளசிஸ். அதில் பராக் ஒரு கேட்ச்சை கோட்டைவிட்டதால் அது சிக்ஸருக்குச் சென்றது.

சிஎஸ்கே அணியின் வெற்றி்க்கு 30 பந்துகளில் 86 ரன்கள் தேவைப்பட்டது. உனத்கட் வீசிய 17-வது ஓவரை டூப்பிளசி 3 சிக்ஸர்களை 21 ரன்கள் சேர்க்கப்பட்டது. அதிரடியாக ஆடிய டூப்பிளசிஸ் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து 2-வது அரைசதத்தை டூப்பிளசிஸ் பதிவு செய்தார்.

கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 48 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை ஆர்ச்சர் வீசினார். இந்த ஓவரில் 4-வது பந்தில் சிக்ஸர் அடித்த டூப்பிளசிஸ் அடுத்த பந்தில் விக்கெட் கீப்பர் சாம்ஸனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

டூப்பிளசிஸ் 37 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதில்7சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி அடங்கும். 6-வது விக்கெட்டுக்கு தோனி, டூப்பிளசிஸ் ஜோடி 65 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

தோனி ஆறுதல்ஆட்டம்

கடைசி ஓரு ஓவரில் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா களமிறங்கினார். டாம் கரன் வீசிய 20வது ஓவரில் தோனி ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்தளித்தார். இதில் ஒரு சிக்ஸர் அரங்கையும் கடந்து சாலையைக் கடந்து விழுந்தது. கடைசி ஓவரில் தோனியால் 21 ரன்கள் மட்டுமே சேர்க்க முடித்து.

20ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே சேர்த்து 17 ரன்களில் தோல்வி அடைந்தது. தோனி 17 பந்துகளில் 29 ரன்களுடனும், ஜடேஜா ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ராஜஸ்தான் பேட்டிங்

டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித், அறிமுக வீரர் யாஸ்ஹஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டத்தைத் தொடங்கினர். தீபக் சாஹர் வீசிய 3-வது ஓவரில் பவுண்டரி அடித்த ஜெய்ஸ்வால், அடுத்த பந்தில் சாஹரிடமே ேகட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் வெளியேறினார்.

11 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான் அணி. அடுத்து சஞ்சு சாம்ஸன் களமிறங்கினார். சாம்ஸன் வந்தபின், அணியின் ஸ்கோர் டாப் கியரில் எகிறத் தொடங்கியது. சாம்ஸன் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை தெறிக்கவிட்டார்.

அதிவேக அரைசதம்

5-வது ஓவரிலருந்து 11-வது ஓவர் வரை ராஜஸ்தான் அணி ஸ்கோர் 14 ரன்ரேட் வீதத்தில் சென்றது. குறிப்பாக சாம்ஸன் காட்டடியில் சிக்ஸர்கள் நாலாபுறமும் பறந்தன. பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான் அணி.

ஜடேஜா வீசிய 7-வது ஓவரில் இரு இமாலய சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் சாம்ஸன். வெறித்தனாக பேட் செய்த சாம்ஸன் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 6 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கும். ஐபிஎல் போட்டியில் சாம்ஸனின் அதிவேக அரைசதமாகும்.

பியூஸ் சாவ்லா நிலைமை பரிதாபம். அவர் வீசிய 8-வது ஓவரில் சாம்ஸன் 3 சிஸ்கர்களும், நோபாலுக்கு கிடைத் ப்ரீஹி்ட்டில் ஸ்மித் ஒரு சிஸ்கரும் என 28 ரன்கள் சேர்த்தனர். 8.6 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 100 ரன்களை எட்டியது.

10-வது ஓவரை பியூஸ் சாவ்லா மீண்டும் வீசினார். அப்போதும் சாவ்லா ஓவரை ஸ்மித்தும், சாம்ஸனும் பிய்த்து எடுத்தனர். ஸ்மித் ஒருசிஸ்கர்,பவுண்டரியும், சாம்ஸன் ஒரு சிக்ஸரும் விளாசி 19 ரன்களைச் சேர்த்தனர்.

சுழற்பந்துவீச்சை இருவரும் நொறுக்கி எடுக்கிறார்கள் என்பதால், மீண்டும் வேகப்பந்துவீச்சாளர்களை தோனி வரவழைத்தார்.

12-வது ஓவரை இங்கிடி வீசினார். இங்கிடியின் 4-வது பந்தை ஆப் சைடில் சாம்ஸன் தூக்கி அடிக்க பந்து சாஹர் கரங்களில் தஞ்சமடைந்தது.

அதிரடியாக ஆடிய சாம்ஸன் 32 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 9 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கும். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

விக்கெட் வீழ்ச்சி

அதன்பின் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழத் தொடங்கின.
அடுத்து டேவிட் மில்லர் களமிறங்கி ஒரு பந்தைக் கூட சந்திக்காமல் ரன் அவுட் செய்யப்பட்டார். ஒரே ஓவரில் ராஜஸ்தான் அணி இரு வி்க்கெட்டுகளை இழந்தது. அதிரடியாக ஆடிய ஸ்மித் 35 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

4-வது விக்கெட்டுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உத்தப்பா 5 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். சாம் கரன் வீசிய ஓவரில் ராகுல் திவேஷியா(10) ரியான் பராக்(4) இரு விக்ெகட்டுகள் விழுந்தன.

6-வது விக்கெட்டுக்கு டாம் கரன் களமிறங்கினார். 132 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த ராஜஸ்தான் அணி, அடுத்த 45 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது.

சாம் கரன் வீசிய 19-வது ஓவரி்ல் கேதார் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும்.

ஆர்ச்சர் அசத்தல்

அடுத்து ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளே வந்தார். இங்கிடி வீசிய கடைசி ஓவரை ஆர்ச்சர் நொறுக்கி எடுப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து 4 சிக்ஸர்கள் உள்பட 30 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிகமான ரன் கொடுத்த வீரர்கள் பட்டியில்ல இங்கிடி இணைந்தார். இதற்கு முன் அசோக் டிண்டா, கிறிஸ் ஜோர்டான் இருந்தநிலையில் 3-வது வீரராக இங்கிடி இணைந்தார்.

ஆர்ச்சர் 8 பந்துகளில் 27 ரன்களிலும், டாம் கரன் 10 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 62ரன்களைச் சேர்த்தது ராஜஸ்தான் அணி.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x