Published : 22 Sep 2020 07:39 am

Updated : 22 Sep 2020 07:39 am

 

Published : 22 Sep 2020 07:39 AM
Last Updated : 22 Sep 2020 07:39 AM

சாஹல் கொடுத்த திருப்புமுனை 121/2-லிருந்து சரசரவென சரிந்த சன்ரைசர்ஸ்: படிக்கால், டிவில்லியர்ஸ் விளாசலில் ஆர்சிபி-க்கு வெற்றித் தொடக்கம்

dream11-ipl-2020-match-3-srh-vs-rcb-match-report-rcb-beats-sunrisers

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020-ன்3வது போட்டியில் கேன் வில்லியம்சன் இல்லாத சன் ரைசர்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பலவீனம் பட்டவர்த்தனமாக 164 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து 121/2 என்ற நிலையிலிருது சாஹல் (3/18) பந்து வீச்சில் சரிந்து 153 ரன்களுக்குச் சுருண்டு ஆர்சிபியிடம் தோல்வி தழுவியது.

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை இழப்பது என்பது 3 முறை நேற்று சன் ரைசர்ஸுக்கு நடந்தது, வார்னரின் துரதிர்ஷ்ட ரன்னர் முனை ரன் அவுட். ரஷீத் கான், அபிஷேக் சர்மா நேரடி மோதல், கார்க் பந்தை ஹெல்மெட் கிரில்லில் வாங்கி ஸ்டம்புக்குள் விட்டுக் கொண்டது. 16வது ஒவரில் சாஹல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 17வது ஓவரில் 2 விக்கெட், மீண்டும் 18வது ஓவரில் 2 விக்கெட் என்று சன் ரைசர்ஸ் கொத்துக் கொத்தாக உதிர்ந்தது.


துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய கோலி தலைமை ஆர்சிபி அணியில் கர்நாடகா வீரர் தேவ்தத் படிக்கால் மற்றும் ஏரோன் பிஞ்ச் இறங்கினர்.

தேவ்தத் படிக்கால் அசத்தல்!

கர்நாடகாவின் தேவ்தத் படிக்கால் அடுத்த யுவராஜ் என்று அவரை அழைப்பதற்கு இணங்க பிரமாதமாக ஆடினார், ஏரோன் பிஞ்ச் இங்கிலாந்தில் ஆடிவிட்டு வந்ததால் இந்தப் பிட்சின் மந்தத் தன்மை அவரது டைமிங்கில் கொஞ்சம் சிரமத்தை ஏற்படுத்தியது. ஆனால் படிக்கால் சரளமாக ஆடினார். ஐபிஎல் அறிமுகப் போட்டியிலேயே கலக்கினர் படிக்கால்.

2வது ஓவரில் 2 பவுண்டரிகளை அடித்தார், பவுண்டரி ஷாட்கள் மெஜஸ்டிக் ரகம், ஆனால் தடுப்பாட்டத்தில் அவ்வளவு உறுதியில்லை. பிறகு 4வது ஓவரில் மீண்டும் 3 பவுண்டரிகளை பின்னி எடுத்து ஆர்சிபிக்கு ஒரு ஃபிளையர் தொடக்கத்தைக் கொடுத்தார். மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக வெளியேறியது சன் ரைசர்ஸ் பந்து வீச்சில் சிறிய ஓட்டையை ஏற்படுத்தியது. 2 பந்துகள் வீசி மார்ஷ் வெளியேற அந்த ஓவரின் மீதிப் பந்துகளை வீச விஜய் சங்கர் வந்தார். நோ-பால்கள், வைடுகள் என்று படுமோசம். பிஞ்ச் ஒரு சிக்சரையும் விஜய் சங்கர் ஓவரில் அடித்தார்.மொத்தம் 16 ரன்கள் 5வது ஓவரில் வந்தது. மார்ஷ் விட்டுப் போன 2 பந்துகளை வீச வந்த விஜய் சங்கர் நோபால், வைடுகள் என்று 5 பந்துகளை வீசினார்.

டி.நடராஜனின் இடது கை வேகப்பந்து வீச்சும் எடுபடவில்லை அவர் ஒருஓவரில் 12 ரன்களை வாரி வழங்கினார்.

படிக்கால், சன்ரைசர்ஸ் பவுலிங்கில் இல்லாத வேகத்தை பயன்படுத்தி 22 பந்துகளில் 34 ரன்கள் விளாச பெங்களூரு அணி பவர் பிளேயில் 50 ரன்களைக் கடந்தது.

பவர் ப்ளேவுக்குப் பிறகு 3 டைட் ஓவர்களை சன்ரைசர்ஸ் வீசியது, ஆனால் ஏரோன் பிஞ்ச் பொறுத்தது போதும் பொங்கி எழு மகனே என்பது போல் சன் ரைசர்ஸின் அனுபவ லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் ஓவரில் ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி அடிக்க 9 ஓவர்களில் 75/0 என்று ஆர்சிபி அபாரமாகச் சென்று கொண்டிருந்தது. சந்தீப் சர்மா நல்ல 6வது ஓவரை வீசினார் 5 ரன்களையே விட்டுக்கொடுத்தார். 10வது ஓவரில் அபிஷேக் சர்மா தன் இடது கை ஸ்பின்னை வீச படிக்கால் ஸ்வீப் ஆடினார், டீப் பேக்வர்ட் ஸ்கொயர்லெக்கில் ரஷீத் கான் மிகவும் முன்னால் வந்ததால் பந்து பின்னால் சென்று பவுண்டரி ஆக அறிமுகப் போட்டியில் அரைசதம் கண்டார் படிக்கால். இது அதிர்ஷ்டம்தான். ரஷீத் பின்னால் நின்றிருந்தால் எளிதான கேட்ச் ஆகியிருக்கும். ஆர்சிபி 10 ஓவர்களில் 86/0.

11வது ஓவரை விஜய் சங்கர் வீச வந்தார். படிக்கால் அடித்த அடி நேராக கொடியேற டீப்பில் ஃபேபியன் ஆலன், அபிஷேக் இருவரும் மோதிக்கொண்டு கேட்சை விட்டனர்.

2016-ல் சாம்பில்லிங்ஸ் ஐபிஎல் அறிமுகப் போட்டியில் அரைசதம் எடுத்த பிறகு படிக்கால் அசத்தல் அரைசதம் எடுத்தர். ஆனால் அதே ஒவரில் கடைசி பந்தில் படிக்கால் விக்கெட்டை பவுல்டு மூலம் எடுத்து சங்கர் கொண்டாடினார். படிக்கால் 42 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஏரோன் பிஞ்ச் 29 ரன்களில் அபிஷேக் சர்மாவின் பந்தில் பிளம்ப் எல்.பி.ஆகி வெளியேறினார்.

விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் என்ற அபாய ஜோடி களத்தில் இருந்தது. ஆனால் இருவரும் 28 பந்துகளில் 33 ரன்களைச் சேர்த்தனர். இந்த 28 பந்துகளில் 2 ஓவர்கள் ரஷீத் கான் விசியது, அவரை அடிக்க வேண்டாம் என்று இருவரும் முடிவெடுத்து விட்டனர். அபிஷேக், சந்தீப் ஓவர்களிலும் ரன்கள் எதிர்பார்த்த வேகத்தில் வரவில்லை. நல்ல தொடக்கம் சுணக்கம் கண்டது. கோலி 13 பந்துகள் ஆடி பவுண்டரி இல்லாமலேயே 14 ரன்களில் டி.நடராஜன் பந்தை மிட்விக்கெட்டில் தூக்கி கையில் கொடுத்து விட்டு ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு டிவில்லியர்ஸ் ஆடியதுதான் ஆர்சிபி வெற்றியில் முக்கியப் பங்களிப்பு என்று கூற வேண்டும். முதலில் 13 பந்துகளில் 14 என்று இருந்த டிவில்லியர்ஸ் 30 பந்துகளில் 51 ரன்கள் என்று விளாசல் பாணிக்கு திரும்பினார். இதில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தன் 200வது சிக்சரை விளாசினார். இதன் மூலம் தன் மொத்த சிக்சர் எண்ணிக்கையை 399 ஆக அதிகரித்தார். கடைசி 4 ஓவர்களில் 39 ரன்கள் வர பெங்களூரு அணி 163/5 என்று முடிந்தது, டிவில்லியர்ஸ் 30 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர் என்று 51 ரன்கள் எடுத்து மிக முக்கிய இன்னிங்ஸை ஆடி ரன் அவுட் ஆனார்.

சாஹல் அபாரம், பேர்ஸ்டோ அற்புதம், சரிந்த சன்ரைசர்ஸ்:

164 ரன்கள் இலக்கு விரட்டப்படக்கூடியதே, ஆனால் ஆர்சிபி அணி அதிர்ஷ்டவசத்தில் வார்னர் (6) விக்கெட்டைக் கைப்பற்றியது. உமேஷ் யாதவ் பந்தை பேர்ஸ்டோ ஒரு காட்டடி அடிக்க பந்து செம வேகத்தில் உமேஷ் யாதவிடமே கேட்ச் போல் வந்தது, ஆனால் பந்து கையில் பட்டு ரன்னர் முனை ஸ்டம்பைத் தாக்க பாவம் வார்னர் கிரீசுக்கு வெளியே சிக்கி விநோத ரன் அவுட் ஆனார்.

மணீஷ் பாண்டே, பேர்ஸ்டோ ஜோடி பிரமாதமாகக் கொண்டு சென்றனர். பேர்ஸ்டோவுக்கு இரண்டு வாழ்வு கொடுக்கப்பட்டது. அதை அவர் நன்றாகப் பயன்படுத்தினார், மணீஷ் பாண்டே டைமிங்கில் திணறினார். 33 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் பாண்டே 34 ரன்கள் எடுத்து சாஹலின் பந்தை லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், ஆனால் இவரும் பேர்ஸ்டோவும் சேர்ந்து 71 ரன்களைச் சேர்க்க 13வது ஓவரில் சன் ரைசர்ஸ் 89/2 என்று இருந்தது. பிகே கார்க், பேர்ஸ்டோவுடன் இணைய இருவரும் சேர்ந்து ஸ்கோரை 16வது ஒவரில் 121 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். ஜானி பேர்ஸ்டோ 43பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 61 ரன்கள் எடுத்து சாஹல் வீசிய பந்தை நோக்கி மட்டையை எந்த ஒரு இலக்குமில்லாமல் சுற்ற பந்து மட்டையைக் கடந்து சென்று பவுல்டு ஆனது.

ஆனால் அடுத்த பந்தை அப்படி சொல்ல முடியாது, விஜய் சங்கர் இறங்கியவுடன் அதியற்புத கூக்ளியை சரியாக வீச விஜய் சங்கருக்கு ஒன்றும் புரியவில்லை பவுல்டு ஆவதைத் தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை, டக் அவுட் ஆகி வெளியேறினார். பிரியம் கார்க் நன்றாகவே ஆடினார் ஆனால் மிகவும் விசித்திரமாக ஷிவம் துபே பந்தில் ஸ்கூப் ஷாட் ஆடுகிறேன் என்று பந்து சரியாகச் சிக்காமல் ஹெல்மெட் கிரில்லில் பட்டு பவுல்டு ஆனார். 129/5 என்று சரியத் தொடங்கியது.

இதே ஓவரில் அபிஷேக் சர்மா, ரஷீத் கான் இடையே நடுப்பிட்சில் மோதல் ஏற்பட அபிஷேக் சர்மா ரன் அவுட் ஆனார். இருவரும் 2வது ரன்னுக்கு ஓடும்போது ஒரே பாதையில் வந்தனர் பந்தைப் பார்த்துக் கொண்டே இருவரும் வந்ததால் பயங்கரமாக மோதிக் கொண்டனர். ரஷீத் கான் கீழே விழுந்தார். ரஷீத் கானுக்கு கன்கஷன் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மோதலில் அபிஷேக் ரன் அவுட் ஆனார். இப்படிப்பட்ட ரன் அவுட்களை பொதுவாக பீல்டிங் அணி மேற்கொள்ளாது, அது ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட். ஆனால் இப்போது ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் கெட்ட வார்த்தையாகிப் போனது. எனவே தோல்வியையே கண்டு வந்த ஆர்சிபி மட்டும் என்ன விதிவிலக்கா, ரன் அவுட்டைச் செய்தது.

18வது ஓவரில் சைனி பவுன்சரை வீச அது வைடு 5 ரன்களானது. ஆனால் அதே ஓவரில் சைனி தன் அதிவேக நேர் பந்துகளில் புவனேஷ்வர் குமார் (0), ரஷீத் கான் (6) இருவரையும் பவுல்டு செய்தார். 2 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி. ஆனால் சிவம் துபே 19வது ஓவரில் 4 ரன்களையே கொடுத்து காயமடைந்த மிட்செல் மார்ஷ் விக்கெட்டையும் கைப்பற்ற கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை. டேல் ஸ்டெய்ன் வீச 7 ரன்களையே எடுக்க முடிந்தது, 4வது பந்தில் சந்தீப் சர்மா அவுட் ஆனார், கோலி அபார கேட்சைப் பிடிக்க சன் ரைசர்ஸ் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

ஆட்ட நாயகன் சாஹல் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டைக் கைப்பற்றினார். இதில் ஒரேயொரு பவுண்டரியைத்தான் அவர் கொடுத்தார், 11 டாட் பால்கள். துபே, சைனி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். உமேஷ் யாதவ் மறக்க வேண்டிய போட்டி இது, 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 4 ஓவர்களில் 48 ரன்கள் விளாசப்பட்டார். அதே போல் விஜய் சங்கருக்கும் இது சரியாக போட்டியாக அமையவில்லை.

சன் ரைசர்ஸ் தன் அணியை மாற்றி வேறு ஒரு சேர்க்கையை முயற்சி செய்வது நலம்.

தவறவிடாதீர்!

DREAM11 IPL 2020MATCH 3 SRH VS RCB – MATCH REPORT- RCB beats SunrisersIPL 2020CricketChahalKohliWarnerUAERCBvSRHசாஹல்கோலிவார்னர்பேர்ஸ்டோபடிக்கால்பிஞ்ச்டிவில்லியர்ஸ்ஷிவம் துபே

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x