Published : 25 Sep 2015 09:50 AM
Last Updated : 25 Sep 2015 09:50 AM

ஸ்பானிஷ் லா லிகா: புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது ரியல் மாட்ரிட்



மாட்ரிட்

முன்னணி 20 கால்பந்து அணிகள் பங்கேற்கும் ஸ்பானிஷ் லா லிகா கால்பந்துப் போட்டியில் அத்லெடிக் பில்பாவோ அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ரியல் மாட்ரிட் அணி, 13 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியில் முதலிடம் பிடித்துள்ளது.

அதேசமயம், பார்சிலேனாவை, செல்டா 4-1 என்ற கோல்கணக்கில் அபாரமாக வீழ்த்தி அதிர்ச்சி யளித்தது.

ரியல் மாட்ரிட் அணிக்கும் அத்லெடிக் பில்பாவோ அணிக்கும் இடையே நடந்த போட்டியில், 19-வது நிமிடத்தில் பிரான்ஸின் கரிம் பென்ஸிமா ரியல்மாட்ரிட் அணிக்கான முதல் கோலை அடித்தார். அத்லெடிக் அணியின் பலவீனமான பின்களத்தை எளிதில் கடந்த அவர் முதல் கோல் அடித்து ரியல் மாட்ரிட்டுக்கு முன்னிலை பெற்றுத்தந்தார்.

அத்லெடிக் அணி உடனடியாக மும்முரத் தாக்குதலைத் தொடுத்து. அந்த அணியின் கடுமையான போராட்டத்துக்கு 67-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அத்லெடிக் அணியின் சபின் மெரினோ தலையால் முட்டி அழகான கோல் அடித்தார். இதன்மூலம் இந்த சீசனில் ஒரு கோலைக் கூட அனுமதிக்காத ரியல் மாட்ரிட் கோல் கீப்பர் கெய்லோர் நவாஸின் சாதனை முடிவுக்கு வந்தது.

இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது வெறும் 3 நிமிடங்களுக்கே நீடித்தது. பென்ஸிமா 70-வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்தார். அதன்பிறகு ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கூடுதல் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து, 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற ரியல் மாட்ரிட் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

5 போட்டிகளில் விளையாடி யுள்ள ரியல் மாட்ரிட் 13 புள்ளிகளைப் பெற்றுள்ளது. பார்சிலோனாவை வீழ்த்திய செல்டாவும் 13 புள்ளிகள் பெற்றிருந்தபோதும் கோல் எண்ணிக்கை அடிப்படையில் முதலிடத்தை ரியல் மாட்ரிட் பிடித்துள்ளது.

பார்சிலோனாவின் தோல்வி

முன்னதாக, 4-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தியது செல்டா விகோ.

செல்டா விகோ அணியின் மானுவேல் அகுடோ நோலிடா 26-வது நிமிடத்தில் பார்சிலோனா அணிக்கு முதல் அதிர்ச்சியை அளித்தார். 0-1 என்ற கணக்கில் பின்தங்கியதால் பார்சிலோனா வீரர்கள் பதில் கோலடிக்க தீவிர முயற்சி செய்தனர். ஆனால், செல்டோ அணியில், சமீபத்திய போட்டிகளில் சோபிக்காத லாகோ அஸ்பாஸ் எழுச்சி பெற்றார். அவர் 30-வது நிமிடத்திலும், 57-வது நிமிடத்திலும் கோல்கள் அடித்தார்.

இதனால், இரண்டாவது பாதியில் 0-3 என்ற கணக்கில் பார்சிலோனா பின்தங்கியது. அந்த அணியின் நெய்மர் மேற் கொண்ட முயற்சிக்கு 80-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. மெஸ்ஸி கடத்தித் தந்த பந்தை எடுத்துச் சென்ற நெய்மர் பார்சிலோனாவுக்கான முதல் கோல் அடித்தார். ஆனால் அடுத்த 3-வது நிமிடத்தில் செல்டா தரப்பில் பதிலி வீரராகக் களமிறங்கிய ஜான் குய்டெட்டி மற்றொரு கோலை அடிக்க செல்டா 4-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனவை வீழ்த்தியது. மெஸ்ஸிக்கு இரு வாய்ப்புகள் கிடைத்தபோதும் அவரால் அதனைக் கோலாக மாற்ற முடியவில்லை.

பார்சிலோனாவின் தோல்வியை அதன் பயிற்சியாளர் என்ரிக் ஏற்றுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “நம்மை விட வேறொரு அணி சிறப்பாக ஆடும்போது, அதுபற்றிக் கூறுவதற்கு வேறெதுவும் இல்லை. வெற்றி பெற்ற செல்டாவை வாழ்த்துகிறேன். அவர்கள் இதே போன்ற ஆட்டத்தைத் தொடர வேண்டும். இந்த தோல்வி குறித்து ஆய்வு செய்வோம். நாங்கள் சில தவறுகள் செய்தோம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x