

ரோஹித் சர்மா கேப்டன்சியில் ஆடும்போது உள்ள சுதந்திரம் தன் நம்பிக்கையை ஊட்டி வளர்ப்பதாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பும்ரா கூறும்போது, “எனக்கு அவர் அதிக சுதந்திரம் அளிக்கிறார், என்னை வெளிப்படுத்துமாறு அவர் எப்போதும் கூறுவார், எந்த சூழ்நிலையாக இருந்தாலும் நான் விரும்பும் முறையில் வீச அனுமதிப்பார், என் பவுலிங்குக்கு நானே பொறுப்பு என்ற அளவுக்கு அவர் எனக்கு சுதந்திரம் வழங்குகிறார்.
அதனால் எனக்கு நம்பிக்கையும் பொறுப்பும் அதிகரிக்கிறது. நான் என்ன செய்கிறேனோ அதற்கு நானே பொறுப்பு. கேப்டனுக்கு இது மிகப்பெரிய விஷயம். ஒரு பவுலருக்கு சுதந்திரம் அளிப்பதென்பது அவ்வளவு எளிதானதல்ல. அவர் நம் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்.
நாம் எடுக்கும் முடிவை நம்புகிறார், இது ஒரு பாசிட்டிவ் ஆன அறிகுறி” என்றார் பும்ரா
மும்பை இந்தியன்ஸ் இன்னொரு வீரர் சூரியகுமார் யாதவ், “களத்தில் எல்லோர் அறிவுரைக்கும் திறந்த மனதுடன் இருப்பார், இக்கட்டான தருணங்களிலும் அவர் அமைதியாக இருப்பார். அப்போது கடினமான சில முடிவுகளை எடுப்பார்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளரான மகேலா ஜெயவர்தனே, ரோஹித்தை ஒரு ‘இயல்பூக்கமான கேப்டன்’ என்றும் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், ‘அவர் ஒரு சிந்திக்கும் கிரிக்கெட் வீரர்’ என்று ரோஹித்தை புகழ்ந்துள்ளார்.