

யுஏஇயின் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் மேற்கொண்டதன் அடிப்படையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் 2020 ஐபிஎல் தொடர் ஆகியவை ஐக்கிய அரபு அமீரகத்திலேயே நடைபெறலாம் என்று தெரிகிறது.
இருநாட்டு வாரியங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் இந்த ஆண்டு ஐபிஎல் -ஐ மட்டும்தான் குறிப்பிட்டாலும், விவாதத்தின் போது இங்கிலாந்து தொடர், மற்றும் 2021 ஐபிஎல் தொடரை யுஏஇயிலேயே நடத்தலாம் என்ற பேச்சு எழுந்தது, இது தொடர்பாக பிசிசிஐ நேர்மறையான பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை எகிறுகிறது. பலி எண்ணிக்கையும் நாளொன்றுக்கு 1000த்தை தாண்டி நிகழ்ந்து வருகிறது.
இதனையடுத்து சுருக்கமாக அடுத்த ஆண்டு இங்கிலாந்து இங்கு வந்து ஆடும் தொடரை ஜனவரி-பிப்ரவரியில் யுஏஇ.யில் வைக்கலாமா என்ற விவாதம் சுருக்கமாக நடைபெற்றது.
இந்தியா இங்கிலாந்து இடையேயான குறைந்த ஓவர் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு அக்டோபரில் நடக்க வேண்டும். இந்தத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. இப்போது டெஸ்ட் தொடருடன் ஒருநாள் தொடரும் நடைபெறும் என்று தெரிகிறது.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று நிலவரத்தைப் பொறுத்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரும் யுஏஇ.யில் நடைபெறலாம் என்று தெரிகிறது.