சாவ்லா, ராயுடு பிரகாசித்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்: சஞ்சய் மஞ்சுரேக்கர் 

சாவ்லா, ராயுடு பிரகாசித்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்: சஞ்சய் மஞ்சுரேக்கர் 
Updated on
1 min read

சஞ்சய் மஞ்சுரேக்கர் சமீபகாலங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். உலகக்கோப்பை 2019-ல் ஜடேஜாவை துண்டு துணுக்கு வீரர் என்று வர்ணித்து வகையாக பலரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

இதனால் அவருக்கு பிசிசிஐ ஆதரவு குறைய தற்போது ஐபிஎல் வர்ணனைக்குழுவில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இருந்தாலும் ட்விட்டரில் அவர் கருத்து கூறுவதை யார் தடுக்க முடியும்.

ஐபிஎல் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியின் சாவ்லா சிறப்பாக வீசி ரோஹித் சர்மாவை வீழ்த்தினார், மேலும் அம்பதி ராயுடு மிக அற்புதமாக ஆடி 6/2 என்ற இக்கட்டிலிருந்து டுபிளெசியுடன் கூட்டணி அமைத்து சென்னையை அணியை கரைசேர்த்தார். அது தோனியின் 100வது வெற்றியாகவும் அமைந்தது.

இந்நிலையில் இந்த சிஎஸ்கே, மும்பை போட்டி குறித்து கருத்து தெரிவித்த சஞ்சய் மஞ்சுரேக்கர், தன் ட்விட்டர் பக்கத்தில், “குறைந்த ரக வீரர்களான இரண்டு வீரர்கள், சாவ்லா, ராயுடு ஆகியோருக்காக மகிழ்ச்சியடைகிறேன். சாவ்லா பந்து வீச்சில் பரபரப்பு ஏற்படுத்தினார்.

மேலும் 5வது மற்றும் 16வது ஓவரையும் வீசினார் சாவ்லா. ராயுடு, ஐபிஎல்-ன் சிறந்த இன்னிங்ஸை ஆடினார். அவர் ஆடிய ஷாட்களின் தரத்தை வைத்துக் கூறுகிறேன். வெல்டன் சிஎஸ்கே” என்று வாழ்த்தியுள்ளார்.

இதில் சாவ்லாவையும் ராயுடுவையும் ‘லோ புரொபைல்’ வீரர்கள் என்ற வார்த்தையில் சஞ்சய் மஞ்சுரேக்கர் வர்ணித்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை.

அதாவது சஞ்சய் மஞ்சுரேக்கர் குறைத்து மதிப்பிடப்பட்ட ராயுடு, சாவ்லா என்று சஞ்சய் குறிப்பிட்டிருக்க வேண்டும், லோ புரபைல் என்ற வார்த்தை எதிர்மறையானது, குறைந்த ரக என்று ரசிகர்கள் புரிந்து கொண்டனர். ஆனால் ஒருவேளை சஞ்சய் மஞ்சுரேக்கர், அதிகம் பேசப்படாத சாவ்லா, ராயுடு என்ற பொருளில் கூட அவர் கூறியிருக்கலாம், அல்லது அதிகம் எதிர்ப்பார்க்கப்படாத வீரர்கள் என்ற பொருளில் கூட அவர் கூறியிருக்கலாம்.

ஆனால் நெட்டிசன்கள் அவரை, சரியான வார்த்தையைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சாடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in