

முன்னாள் தமிழ்நாட்டு/இந்திய கிரிக்கெட் வீரர் எஸ்.ஸ்ரீராம், வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா அணிக்கு ஆலோசகராக பணியாற்றுகிறார்.
பயணிக்கும் ஆஸ்திரேலிய அணி ஒன்றிற்கு முதன் முறையாக இந்திய வீரர் ஒருவர் ஆலோசகராக செயலாற்றுகிறார்.
இது குறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு கிடைத்த ஆதாரபூர்வ செய்திகளின் படி சென்னையைச் சேர்ந்த 39 வயது எஸ்.ஸ்ரீராம் வங்கதேசத்தில் ஆஸ்திரேலியாவுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இணைவார்.
அக்டோபர் 9-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் தொடங்குகிறது. சமீபமாக ஆஸ்திரேலியா ஏ அணி இந்தியா பயணம் மேற்கொண்டு போட்டிகளில் பங்கேற்றபோது எஸ்.ஸ்ரீராம் ஆலோசகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது ஆலோசனைகளில் ஆஸ்திரேலிய வீரர்களின் துணைக்கண்ட பிட்ச் பற்றிய புரிதல்கள் மேம்பட்டுள்ளன என்று அந்த அணியினர் சிலர் தெரிவித்தனர்.
ஆனால் ஆஸ்திரேலியா சீனியர் அணிக்கு ஆலோசகர் என்பது எஸ்.ஸ்ரீராமுக்கு பெரிய திருப்பு முனையே.
இடது கை வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான இவர் ஆஸ்திரேலியா ஏ வீரர்களின் பேட்டிங் தடுப்பு உத்திகளை சிறப்புறச் செய்துள்ளார், அதே சமயம் தற்காப்பில் தன்னம்பிக்கை ஏற்பட்டவுடன் சரியான பந்துகளை தேர்ந்தெடுத்து அடித்து ஆடவும் இவர் ஆலோசனைகள் பயன்பட்டுள்ளன.
வங்கதேச அணியின் ஆற்றலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து எஸ்.ஸ்ரீராம் ஆஸ்திரேலியர்களுக்கு சிறப்பான அறிவுரைகளை வழங்கி உதவுவார் என்று அந்த அணி எதிர்பார்க்கிறது.