Last Updated : 20 Sep, 2020 12:43 AM

 

Published : 20 Sep 2020 12:43 AM
Last Updated : 20 Sep 2020 12:43 AM

அனுபவ சிஎஸ்கே அபார வெற்றி; 6/2 லிருந்து அணியை மீட்ட ராயுடு, டூப்பிளசிஸ் அற்புதம்: தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த தோனி படை

சிஎஸ்கே வெற்றி்க்கு முக்கியக் காரணமாக இருந்த அம்பரி ராயுடு, டூப்பிளசிஸ் : படம் உதவி பிசிசிஐ ட்விட்டர்

அபு தாபி

தோனியின் மதிநுட்பமான கேப்டன்ஷிப், அம்பதி ராயுடு, டூப்பிளசிஸின் அபாரமான பாட்னர்ஷிப் போன்றவற்றால், அபு தாபியில் நடந்த 13-வது ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. 163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து, 166 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோல்விக்கு முற்றுப்புள்ளி

இந்த வெற்றி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தொடர்ந்து 5 தோல்விகளை அடைந்ததற்கு முற்றுப்புள்ளி வைத்து பழிதீர்த்துக் கொண்டது சிஎஸ்கே.

அதுமட்டுமல்லாமல், கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது தோனிபடை.

கடந்த 2018ல் மும்பை, 2019 ஆர்சிபி, 2020ல் மீண்டும் மும்பையை அணியை சிஎஸ்கே வீழ்த்தியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் வென்று 8 ஆண்டுகள் ஆகிறது.

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அம்பதி ராயுடு, டூப்பிளஸின் பாட்னர்ஷிப் என்றால் மிகையாகாது. அதுமட்டுமல்லாமல் டூப்பிளஸி பீல்டிங்கில் பிடித்த இரு அபாரமான கேட்சுகளை மறக்கவே முடியாது.

சிஎஸ்கே அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, இருவரும் சேர்ந்து நங்கூரமாக நின்று அணியை மீட்டெடுத்து வெற்றியை நோக்கி ராயுடுவும், டூப்பிளசிஸும் அழைத்துச் சென்றனர். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த வெற்றிக்கு துணையாக இருந்தனர்.

கடந்த ஐபிஎல் தொடரில் ஜொலிக்காத ராயுடு இந்த முறை 71(48பந்து) ரன்கள் சேர்த்து ஒளிர்ந்தார். டூப்பிளசிஸ் 58(44)ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆட்டநாயகன் சாம் கரன்

இருப்பினும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும், அதிரடியாக ஆடி 6 பந்துகளில் 18 ரன்களைச் சேர்த்த சாம் கரனுக்குத்தான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.ஏனென்றால், சாம் கரன் அதிரடியாக 6 பந்துகளில் சேர்த்த 18 ரன்கள் தான் சிஎஸ்கே அணியின் வெற்றியை இன்னும் லேசாக்கியது.

ஏன் தோனி களமிறங்க தாமதம்

இதில் எழும் கேள்வி என்னவென்றால், ராயுடு ஆட்டமிழந்தவுடனே களம்புகுந்திருக்க வேண்டும். ஆனால், ஜடேஜா, சாம்கரனுக்கு அடுத்தார்போல்தான் வந்தார். இருவரும் ஓரளவுக்கு ஸ்கோர் செய்ததால் வெற்றி லேசானது. இருவரும் சொதப்பி இருந்தால், போட்டியின் நிலைமை தலைகீழாக மாறியிருக்கும்.

கேப்டன்ஷிப்பில் விஸ்வரூபம்

உலகத் தரம்வாய்ந்த கேப்டன்ஷிப் தோனி என்பதை இந்த போட்டியில் மீண்டும் நிரூபித்துவிட்டார். டீகாக், ரோஹித் சர்மா வெளுத்து வாங்கிய நிலையில் இருவரையும் பிரிக்க பியூஷ் சாவ்லாவை பயன்படுத்தி ரோஹித் சர்மாவை வெளியேற்றியது.

கடைசி நேர நெருக்கடிக்கு சாஹர், இங்கிடியை தோனி பயன்படுத்தியது என கேப்டன்ஷிப்பில் விஸ்வரூபமெடுத்து நின்றார் தோனி. அதுமட்டுமல்லாமல் எந்த பேட்ஸ்மேன் எங்கு அடிப்பார் என கணக்கிட்டு கச்சிதமாக பீல்டிங் செட் செய்ததும் அருமை. பல கேட்சுகளை பீல்டர்கள் கைக்கே சென்றன.
ஒட்டுமொத்ததில் டாடிஸ் ஆர்மி என்று விமர்சித்தாலும், அனுபவம்தான் வெல்லும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது தோனிபடை. சிஎஸ்கே அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று தோனி பெறும் 100-வது வெற்றியாகும்

தல களத்துக்குவந்ததே போதும்…

436 நாட்களுக்குப்பின் களம் கண்ட தல தோனியின் பேட்டிங்கை ரசிகர்கள் காண முடியாமல் போனதுதான் வருத்தம். ஆனால், தல களத்துக்குள் வந்ததே போதும் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவது தனிக்கதை.
சென்னை அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக முரளி விஜய் பேட்டிங்கிலும்,பீல்டிங்கும் சொதப்பல். வேறுயாரையாவது இறக்கி பரிசோதித்திருக்கலாம்.

மும்பையின் தவறுகள்…

மும்பை அணியைப் பொருத்தவரை தொடக்கத்தில் டீகாக், ரோஹித் இருவரும் நல்ல ரன்ரேட்டையில் கொண்டு சென்றனர். அதேநிலையில் சென்றிருந்தால் 200 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கலாம். ஒருவேளை கூடுதலாக இன்னும் 15 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி சேர்திதருந்தால், ஆட்டம் நிச்சயம் மும்பை பக்கம் திருப்பியிருக்கும்.

4 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்திருந்த மும்பை அணி அடுத்த 41 ரன்களைச் சேர்பதற்குள் 5 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது

மைதானாமா இது

ஆனால், 15 ஓவர்களுக்குப்பின், ஜடேஜாவின் ஓவரிலும், இங்கிடி வீசிய ஓவரிலும் ஆட்டம் தலைகீழாக மாறிப்போனது. இருவரின் ஓவரின் இரு விக்கெட்டுகள் வீழ்ந்தது போட்டியை திருப்பிப்போட்டது.

டெத் பவுலிங் ஸ்பெஸலிஸ்ட் எனச் சொல்லப்படும் பும்ரா, பட்டின்ஸன் இருவரின் பந்துவீச்சும் இந்த மைதானத்தில் எடுபடவில்லை. இவர்களைச் சொல்லி தப்பில்லை. மைதானத்தில் பும்ராவும், பட்டின்ஸனும் உயிரைக் கொடுத்து பவுன்ஸர் வீசினாலும் பந்து இடுப்புக்கு மேல் எழும்பவில்லை.
அதுமட்டுமல்லாமல் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் மைதானம் எனத் தெரிந்திருந்தும் ரோஹித் சர்மா வேகப்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தரமான சுழற்பந்துவீச்சாளர்ளைத் தேர்வு செய்திருக்கலாம்.

தொடக்கமே சரிவு

163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணியின் வாட்ஸன், முரளி விஜய் களமிறங்கினர். டிரன்ட் போல்ட் முதல் ஓவரில் கால்காப்பில் வாங்கி 4 ரன்னில் வாட்ஸன் வெளியேறினார்.
நீண்டகாலமாக கிரிக்கெட் விளையாமல் இருந்தது என்பது வாட்ஸனின் ஆட்டத்தில் நன்றாகத் தெரிந்தது. தேவையில்லாமல் காலைக் கொடுத்து கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

அடுத்து டூப்பிளசிஸ் களமிறங்கி, முரளியுடன் சேர்ந்தார். பட்டின்ஸன் பந்துவீச்சுக்கு தொடக்கத்திலிருந்தே திணறிய முரளி விஜய் முதல் முறை கால்காப்பில் வாங்கி தப்பினார், ஆனால், 6-வது பந்தில் மீண்டும் கால்காப்பில் வாங்கி ஒரு ரன்னில் வெளியேறினார்.

முரளி விஜயை விளையாடும் 11 பேர் அணியில் தேர்வு செய்தபோதே வியப்பாக இருந்தது. பேட்டிங் ஃபார்மிலேயே இல்லாத வீரருக்கு தோனி ஏன் வாய்ப்பளித்தார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், தன்னைத் தேர்வு செய்தது தவறு என்பது நிரூபித்து சென்றுவிட்டார் முரளி.
6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது சிஎஸ்கே அணி.

நங்கூர பாட்னர்ஷிப்

4-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு களமிறங்கி, டூப்பிளஸிஸுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். பவர்ப்ளே முடிவில் சிஎஸ்கே அணி 2 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் சேர்த்திருந்தது.

ராகுல் சாஹர் வீசிய 10-வது ஓவரில் இருபவுண்டரிகளை தொடர்ச்சியாக அடித்து ராயுடு, ரன்ரேட்டை உயர்த்தினார். 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் சேர்த்திருந்தது சிஎஸ்கே அணி.
அதிரடியாக ஆடிய ராயுடு 34 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இந்த ஐபிஎல் சீசனின் முதல் அரைசதத்தை ராயுடு எடுத்து முத்திரை பதித்தார். குர்னல் பாண்டியா, ராகுல் சாஹர் ஓவர்களில் ராயுடு தலா ஒரு சிக்ஸரை விளாசி ஸ்கோரை உயர்த்தினார்.

கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது. ராகுல சாஹர் வீசிய 16-வது ஓவரில் ராயுடுவுக்கு ஒரே கேட்சை குர்னல் பாண்டியா நழுவவிட்டார். ராயுடு ஏற்கெனவே நங்கூரம் பாய்ச்சி வெளுத்து வந்தநிலையில் கேட்ச்சை கோட்டைவிட்டு குர்னல் பாண்டியா தவறு செய்தார்.

ஆனால், அதேஓவரின் 6-வது பந்தில் ராகுல் சாஹரிடமே கேட்ச் கொடுத்து ராயுடு 48 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ராயுடு கணக்கில் 3 சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும். 3-வது விக்கெட்டுக்கு டூப்பிளஸிஸ் ராயுடு சேர்ந்து, 115 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

4-வது விக்கெட்டுக்கு ஜடேஜா களமிறங்கினார். இருபவுண்டரிகள் அடித்த ஜடேஜா குர்னல் பாண்டியா வீசிய 17-வது ஓவரின் முதல் பந்திலேயே கால்காப்பில் வாங்கிய ஜடேஜா 10 ரன்னில் வெளியேறினார்.
5-வது விக்கெட்டுக்கு வந்த சாம் கரன் வந்த வேகத்தில் குர்னல் பாண்டியா பந்தில் ஒரு சி்க்ஸர், பவுண்டரி விளாசி பதற்றத்தைக் குறைத்து, ரன்ரேட்டை உயர்த்தினார்.

கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்திலேயே சாம் கரன் மிட்விக்கெட்டில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். ஆனால் அடுத்த பந்தையும் தூக்க அடிக்க ஆசைப்பட்ட சாம் கர்ரன் 18 ரன்கள் சேர்த்த நிலையில் பட்டின்ஸனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

டிஆர்எஸ் ரிவியூ மன்னர்

அடுத்து தோனி 436 நாட்கள் விளையாடாமல் இருந்து களம்புகுந்தார். நிதானமாக ஆடிய டூப்பிளசிஸ் 42 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

தோனி தனது முதல்பந்தைச் சந்தித்தார். ஆனால் பந்தை ஹூக் ஷாட் அடிக்க முற்பட பந்து விக்கெட் கீப்பர் டீ காக்கிடம் புகுந்தது. பும்ரா நடுவரிடம் அப்பீல் செய்யவே நடுவரும் அவுட் அளி்த்தார்.

ஆனால், தோனி முதல்பந்திேலயே ஆட்டமிழந்துவிட்டாரா என்ற அதிர்ச்சி நிலவ, தோனி டிஆர்எஸ் ரிவியூக்கு சென்றார். டிஆர்எஸ் ரிவியூவில் தோனியின் பேட்டில் பந்துபடவில்லை என்பது தெரிந்ததால், நடுவர் முடிவு திரும்பப் பெறப்பட்டது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் போல்ட் பந்துவீச்சில் இரு பவுண்டரிகளை விளாசி டூப்பிளசி ஆட்டத்தை முடித்துவைத்தார். 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.

தல தோனியின் பேட்டிங்கை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே காத்திருந்தது. ஆனால், 436 நாட்களுக்குபின் தல தோனி களமிறங்கியதே ரசிகர்களுக்கு விருந்துதான்.

முன்னதாக, டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

விளாசல்

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோஹித் சர்மா, டீகாக் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினார். தீபக் சாஹர், சாம்ரன்ஸ இங்கிடி என யார் பந்துவீசினாலும் பவுண்டரிகளா அடித்து விளாசினர். இதனால் 10 ரன்ரேட்டில் ஸ்கோர் உயர்ந்தது. இதனால் 4ஓவர்ளில் மும்பை அணி 45 ரன்களை எட்டியது.

ரோஹித் திணறல்

5-வது ஓவர் பியூஷ் சாவ்லாவுக்கு வழங்கினார் தோனி. வெற்றிகரமான கேப்டன் என அனைவராலும் புகழ்வதற்கான காரணத்தை தோனி நிரூபித்தார். தோனியின் முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது.
பியூஷ் சாவ்லா பந்துக்கு தொடக்கத்திலிருந்தே திணறிய ரோஹித் சர்ஹமா 4-வது பந்தில் ஸ்ட்ரைட் மிட்ஆப்பில் நின்றிருந்த சாம் கர்ரனிடம் கேட்ச் கொடுத்து 12 ரன்னில் வெளியேறினார்.

லெஸ் ஸ்பின்னில் ரோஹித் சர்மா நீண்டகாலமாகவே திணறி வருகிறார். கடந்த 2017 ஐபிஎல் போட்டியிலிருந்து இதுவரை 120 லெக் ஸ்பின் பந்துவீச்சைச் சந்தித்த ரோஹித் சர்மா 9 முறை ஆட்டமிழந்துள்ளார்,134 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். சராசரியாக 14 ரன்கள் சேர்த்துள்ளார். 2-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார்.

6-வது ஓவரை மீண்டும் சாம் கர்ரன் வீசினார். முதல் பந்திலேயே ஸ்ட்ரைட் மிட்விக்கெட்டில் வாட்ஸனிடம் கேட்ச் கொடுத்து டீகாக் 33 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

திவாரி நம்பிக்கை

3-வது விக்கெட்டுக்கு திவாரி களமிறங்கி, சூர்யகுமார் யாதவுடன் சேர்ந்தார்.பவர் ப்ளே ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்திருந்தது.

சூர்யகுமார் யாதவும், திவாரியும் இணைந்து நிதானமாக பேட் செய்தனர். 11-வது ஓவரில் மீண்டும் சாஹருக்கு வாய்ப்பளித்தார் தோனி. தோனியின் புத்திசாலித்தனமான முடிவுக்கு நல்ல பலன் கிடைத்தது.

இந்த ஓவரில் தொடக்கத்திலிருந்தே திணறிய சூர்யகுமார் யாதவ் கடைசிப்பந்தில் லாங்கானில் தூக்கி அடிக்க சாம் கரர்ரனிடம் கேட்ச் கொடுத்து 17 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 3வது விக்கெட்டுககு இருவரும் 44 ரன்கள் சேர்்த்துப் பிரிந்தனர்.

4-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா களமிறங்கி, திவாரியுடன் இணைந்தார். நீண்ட நாட்களுக்குப்பின் வந்த ஹர்திக் பாண்டியா ஜடேஜா வீசிய 12-வது ஓவரை நொறுக்கி எடுத்தார். டீப் மிட்விக்கெட், லெக் சைடில் இரு சிக்ஸர்களை விளாசினார் பாண்டியா. இந்த ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. லுங்கி இங்கிடி வீசிய 13-வது ஓவரில் திவாரி 2 பவுண்டரிகளை விளாசினார்.

திருப்புமுனை ஓவர்

15-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரிலிருந்துதான் ஆட்டம் தலைகீழாக மாறியது. சிஎஸ்கே அணிக்கு திருப்புமுனையாகவும் இந்த ஓவர் அமைந்தது.

முதல் பந்தை திவாரி லாங் ஆன் திசையில் தூக்கி அடிக்க அதை பவுண்டரி லைனில் லாவகமாக கேட்ச் பிடித்தார் டூப்பிளசிஸ். ஆனால், பவுண்டரி கோட்டை மிதித்துவிடக்கூடிய சூழல் வந்தவுடன் பந்தை மேேல தூக்கிவீசி மீண்டும் மைதானத்துக்குள் வந்து கேட்ச் பிடித்தார் டூப்பிளசிஸ். சிறப்பாக ஆடிய திவாரி 31 பந்துகளில் 42ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அற்புதமான கேட்ச்

அடுத்து 5-வது விக்கெட்டுக்கு பொலார்ட் களமிறங்கி, பாண்டியாவுடன் சேர்ந்தார். ஜடேஜா வீசிய அதே ஓவரின் 5-வது பந்தில் பாண்டியா ஸ்ட்ரைட்டில் தூக்கி அடித்தார்.

திவாரிக்கு பிடித்தது போன்று கேட்சை லாவகமாக பவுண்டரி லைனில் பிடித்து மேலே தூக்கிவீசி மீண்டும் பிடித்தார் டூப்பிளசிஸ். ஜடேஜா வீசிய ஒரே ஓவரில் இரு விக்கெட் வீழ்ந்தது மும்பை அணியை தடுமாறச் செய்தது.

6-வது விக்கெட்டுக்கு குர்னல் பாண்டியா களமிறங்கி பொலார்டுடன் சேர்ந்தார். 17-வது ஓவரை இங்கிடி வீசினார். முதல் பந்தில் லெக்சைடில் அடிக்க முயன்ற குர்னல் பாண்டியா 3 ரன்னில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து பட்டின்ஸன் களமிறங்கி, பொலார்டுடன் இணைந்தார்.

19-வது ஓவரை இங்கிடி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலும் விக்கெட்டை வீழ்த்தினார் இங்கிடி. பவுன்ஸராக வந்த பந்தை அடிக்க முயன்ற பொலார்ட் 18 ரன்கள் சேர்்த்து தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ராகுல் சாஹர் களமிறங்கினார்.

இந்த ஓவரின் 5-வது பந்தில் லாங்ஆன் திசையில் பட்டின்ஸன் தூக்கி அடிக்க டூப்பிளஸிஸ் கையில் பந்து தஞ்சமடைந்தது. பட்டின்ஸன் 11 ரன்னில் வெளியேறினார்.

9-வது விக்கெட்டுக்கு போல்ட் களமிறங்கி, சாஹருடன் சேர்ந்தார்.

20வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்தில் போல்ட் க்ளீன் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து பும்ரா களமிறங்கி, ராகுல் சாஹருடன் சேர்ந்தார். கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்தனர். சாஹர் 2 ரன்னிலும், பும்ரா 5ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. 4 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்திருந்த மும்பை அணி அடுத்த 41 ரன்களைச் சேர்பதற்குள் 5 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது.

சிஎஸ்கே தரப்பில் ஜடேஜா, சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், இங்கிடி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x