

13-வது சீசன் ஐபிஎல் டி20 தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி நகரில் இன்று ரசிகர்களின் ஆரவாரம் இன்றி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்துக் களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இனிவரும் 53 நாட்களுக்கும் ரசிகர்ளுக்கு கிரிக்கெட் ஜுரம் பிடித்துவிடும் நிலையில், இதுவரை நடந்த ஐபிஎல் டி20 தொடரில் நடந்த முக்கிய நிகழ்வுகள், ஒரு அணி அடித்த அதிக ஸ்கோர், குறைந்த ஸ்கோர், தனிப்பட்ட வீரர்கள், சாதனை, பார்ட்னர்ஷிப், விக்கெட் வீழ்த்திய சாதனை என அனைத்தையும் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.
அணிகள் குறித்த புள்ளிவிவரங்கள்:
அதிகமான ஸ்கோர்
கடந்த 2013-ம் ஆண்டில் புனே வாரியர்ஸுக்கு எதிராக 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களும், 2016-ல் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 3 விக்கெட் இழப்புக்கு 248 ரன்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எடுத்து, ஐபிஎல் வரலாற்றில் ஒர் அணியின் அதிகபட்ச எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது.
சிஎஸ்கே அணி 2010-ம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் சேர்த்துள்ளது.
மோசமான ஸ்கோர்
அதிகமான ஸ்கோர், மோசமான ஸ்கோர் இரு சாதனைகளையும் ஆர்சிபி அணிதான் தன்னகத்தே வைத்துள்ளது. 2017-ம் ஆண்டில் கேகேஆர் அணிக்கு எதிராக மிகக்குறைவாக 49 ரன்களில் ஆர்சிபி அணி சுருண்டது.
ராஜஸ்தான் ராயல்ஸ்அணி 2009-ல் ஆர்சிபி அணிக்கு எதிராக 58 ரன்களிலும், 2017-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி டேர்டெவில்ஸ் அணி 66 ரன்களிலும் சுருண்டதும் மிகக் குறைவான ஸ்கோராகும்.
அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
கடந்த 2017-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக 146 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றதே ஐபிஎல் வரலாற்றில் மிக அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.
அடுத்ததாக, 2016-ல் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 144 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வென்றிருந்தது. 3-வதாக 2008-ல் ஆர்சிபி அணிக்கு எதிராக 140 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணி வென்றிருந்தது.
சூப்பர் ஓவர்கள்
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 8 முறை சூப்பர் ஓவர்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 முறை மோதியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 சூப்பர் ஓவர் வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் சூப்பர் ஓவரைச் சந்தித்துள்ளன என்றாலும், இதில் ஒரு வெற்றிகூட பெறாதவை சிஎஸ்கே அணியும், கொல்கத்தா அணியும் மட்டுமே
அதிகமான உதரி ரன்கள்
ஐபிஎல் தொடரில் வித்தியாசமான சாதனையை கேகேஆர் அணி வைத்துள்ளது. அதிகமான உதிரிகள் ரன்களை வழங்கியதில் கேகேஆர் அணிதான் முதலிடம். கடந்த 2008-ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேகேஆர் அணி 28 உதிரி ரன்களை வாரிக் கொடுத்தது. அடுத்ததாக 2011-ம் ஆண்டில் ஆர்சிபிக்கு எதிராக 27 உதிரி ரன்களை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வழங்கியது. 2009-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி 27 உதிரிகளை வாரி வழங்கியது.