

13-வது ஐபிஎல் டி20 சீசன் நாளை அபுதாபியில் தொடங்க உள்ள நிலையில் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து மோதுகிறது சிஎஸ்கே அணி.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த சீசனில் அனைத்து ஆட்டங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் நடக்கின்றன. அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய 3 நகரங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றன.
நாளை நடக்கும் முதல் லீக் ஆட்டம் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. ஒரு அணிக்கு சிறந்த பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் வெற்றிக்கு எந்த அளவுக்குத் துணைபுரிவார்களோ அதே அளவு முக்கியத்துவம் மைதானத்துக்கும் உண்டு.
அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானம் கடந்த 2004-ம் ஆண்டு கட்டப்பட்டது. 20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்ட இந்த மைதானம் 2 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால், கரோனா வைரஸ் காரணமாக இந்த முறை ரசிகர்களுக்கு வாய்ப்பு இருக்காது.
கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 44 டி20 போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்துள்ளன. இந்த முறை ஐபிஎல் தொடரில் 20 ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடைபெற உள்ளன.
இந்த மைதானம் மிதவேகப்பந்துவீச்சாளர்களுக்கும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் சமபங்கு ஒத்துழைக்கும். ஐக்கிய அரபு அமீரக அணியின் மிதவேகப் பந்துவீச்சாளர் ரோஹன் முஸ்தபா 11 போட்டிகளில் 15 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்.
இந்த மைதானம் பெரும்பாலும் சேஸிங் செய்யும் அணிக்கே சாதகமாக இருந்துள்ளது கடந்தகாலப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேன்களுக்கு இந்த மைதானம் ஏற்றதாகும்.
இந்த மைதானத்தில் ஓவருக்கு சராசரியாக 7 ரன்கள் வரை சேர்க்க முடியும். ஒரு அணி சராசரியாக 150 ரன்களுக்குக் குறைவில்லாமல் சேர்க்க முடியும்.
இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 225 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக 87 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இங்கு சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 166 ரன்களாகும். 129 ரன்கள் சேர்க்கப்பட்டு அதற்குள் எதிரணி சுருட்டப்பட்டுள்ளதுதான் குறைந்தபட்சத்தில் வெற்றி பெற்ற ஸ்கோராகும்.
இந்த மைதானத்தில் இதுவரை 44 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில், 19 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 25 போட்டிகள் 2-வது பேட்டிங் செய்த அணியும் வென்றுள்ளன.
மழை வருமா?
அபுதாபில் நாளை மேகம் மிகத் தெளிவாக இருப்பதால், நாளை மழை வருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. வெப்பநிலை 35 டிகிரி வரை இருக்கும். காற்றில் ஈரப்பதமும் அதிகமாகவே இருக்கும். ஆதலால், சேஸிங் செய்யும் அணிக்குத்தான் சாதகமாக இருக்கும்.
சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை மும்பை அணிக்கு எதிராக அதிகபட்சமாக 208 ரன்களும், குறைந்தபட்சமாக 79 ரன்களும் சேர்த்துள்ளனர். அதேபோல மும்பை அணியை சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிகபட்சமாக 202 ரன்களும், குறைந்தபட்சமாக 141 ரன்களும் சேர்த்துள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே தரப்பில் சுரேஷ் ரெய்னா ஒட்டுமொத்தமாக 722 ரன்கள் சேர்த்துள்ளார். விக்கெட் வீழ்த்தியவகையில் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர் ரசித் மலிங்கா ஒட்டுமொத்தமாக 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியை அதிகபட்சமாக 60 ரன்கள் வித்தியாசத்தில் கடந்த 2013-ம் ஆண்டு மே 5-ம் தேதி மும்பை வான்ஹடே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வென்றது. இதுதான் அதிகபட்ச ரன்களில் மும்பையை சிஎஸ்கே வீழ்த்தியதாகும்.
இதேபோல சிஎஸ்கே அணியை 2008 ஆம் ஆண்டு மே 14-ம் தேதி வான்ஹடே அரங்கில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியதே மிகப்பெரிய வெற்றியாகும்.