போட்டியின்போது காயமடைந்த குத்துச் சண்டை வீரர் மரணம்: விளையாட்டுக்கு தடை விதிக்க கோரிக்கை

போட்டியின்போது காயமடைந்த குத்துச் சண்டை வீரர் மரணம்: விளையாட்டுக்கு தடை விதிக்க கோரிக்கை
Updated on
1 min read

போட்டியின்போது காயமடைந்த ஆஸ்திரேலிய குத்துச் சண்டை வீரர் டேவி பிரவுன் ஜூனியர் (28) மருத்துமனையில் நேற்று உயிரிழந்தார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனத்தின் ஐபிஎஃப் சூப்பர் ஃபெதர் வெய்ட் பிராந்திய போட்டி நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியாவின் டேவி பிரவுன் ஜூனியர், பிலிப்பைன்ஸின் கார்லோ மகலி ஆகியோர் மோதினர்.

போட்டியின் 12-வது மற்றும் இறுதிச் சுற்றின் 30-வது நொடியில் கார்லோவால் தாக்கப்பட்ட பிரவுன் நாக்அவுட் ஆகி தோல்வியுற்றார். கார்லோவின் குத்து பிரவுனின் தலையில் இறங்கியது. பிரவுன் நினைவிழந்து விழுந்தார். சுதாரித்து நினைவு திரும்பி எழுந்தார். ஆனால், சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக் கப்பட்டது.

மூளைக் காயம் காரணமாக அவர் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தார். இதனை, ஆஸ்தி ரேலிய காவல்துறை மற்றும் ஆஸ்திரேலிய குத்துச் சண்டை சம்மேளன தலைவர் ஜான் மெக்டோகல் உறுதி செய்துள்ளனர்.

“கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டியின்போது இதுபோன்ற மரணம் அல்லது தீவிர காயம் ஏற்பட்டுள்ளது. அவர் நன்றாக சுவாசிக்கிறார் எனத் தகவல் கிடைத்தது. அவர் நலம் பெறுவார் என நினைத்தோம். ஆனால், மிகத் துயரமான செய்தியே கிடைத்தது” என மெக்டோகல் தெரிவித்துள்ளார்.

டேவி பிரவுன் ஜுனியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் இவ்விளை யாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய மருத்து சங்கம் (ஏஎம்ஏ) கோரிக்கை விடுத்துள்ளது.

ஏஎம்ஏ துணைத் தலைவர் ஸ்டீபன் பர்னிஸ் இதுதொடர்பாகக் கூறும்போது, “ஒரு குத்து போதும் உயிரைப்பறிக்க. இளம் உயிர்கள் துயரமான முறையில் பலியாகின்றன. குத்துச் சண்டைக்குத் தடை விதிக்க இது சரியான நேரம். யாரேனும் ஒருவர் ரத்தம் சிந்துவதை தவிர்க்க முடியாது அல்லது மீள முடியாத மூளைக் காயம் காயம் அடைவதைத் தவிர்க்க முடியாது என்ற வகையில்தான் இன்றைய சூழலில் குத்துச் சண்டை போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் வீரர்கள் உயிரிழக் கின்றனர் அல்லது மூளைக்காயம் அடைகின்றனர். எனவேதான் குத்துச் சண்டைக்கு தடை விதிக்க வேண்டும் என நாங்கள் எண்ணு கிறோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in