Last Updated : 18 Sep, 2020 03:09 PM

 

Published : 18 Sep 2020 03:09 PM
Last Updated : 18 Sep 2020 03:09 PM

களைகட்டும் ஐபிஎல் திருவிழா: சூப்பர் ஓவரில் மிரட்டும் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் ஒவ்வொரு அணியிலும் யாராக இருப்பார்கள்?

13-வது சீசன் ஐபிஎல் டி20 திருவிழா நாளை தொடங்க இருக்கிறது. ஐபிஎல் போட்டியின் 8 அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற தீர்மானத்துடன் அனைத்து அணிகளும் களமிறங்கினாலும், ஆனால் வெற்றி என்னவோ ஒரு அணிக்குத்தான் கிடைக்கும்.

ஆனால், அந்த வெற்றியும் சில நேரங்களில் மிகுந்த இழுபறிக்குப் பின், கடும் போராட்டத்துக்குப் பின் கிடைக்கும் சூழலும் எழலாம். கடந்த ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின்போது நியூஸிலாந்து, இங்கிலாந்து இடையிலான ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்று டை ஆனது.

அதேபோன்று ஐபிஎல் போட்டியிலும் பல ஆட்டங்கள் சூப்பர் ஓவர் வரை சென்றுள்ளன. ஆனால் மற்ற சாதாரண ஓவர்களில் அடித்து ஆடுவதற்கும், பந்துவீசுவதற்கும், சூப்பர் ஓவரில் விளையாடுவதற்கும் சில துணிச்சல் மிகுந்த, புத்திசாலியான பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்களும் அணிக்கு அவசியம்.

இல்லாவிட்டால், வெற்றிக்கு அருகே வந்து கோட்டை விட வேண்டிய சூழல்தான் உருவாக்கும்.
ஆதலால், சூப்பர் ஓவருக்கென விளையாடுவதற்கு ஒவ்வொரு அணியிலும் தனித்துவமான பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள். அவர்கள் யாரென்று பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் அதிகமான சூப்பர் ஓவர்களைச் சந்தித்தது இல்லை. அதனால், சூப்பர் ஓவர் வரை சென்றால் யாரைக் களமிறக்குவார்கள், பந்துவீசச் செய்வார்கள் என்பதைத் தெளிவாக வரையறுக்க முடியவில்லை.

இருப்பினும் பேட்டிங்கைப் பொறுத்தவரை எம்எஸ் தோனி, வாட்ஸன், ரவிந்திர ஜடேஜா ஆகியோரைத்தான் சூப்பர் ஓவருக்கு களமிறக்குவார்கள்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை டுவைன் பிராவோ, ரவிந்திர ஜடேஜா, தீபக் சாஹர் ஆகிய மூவரில் இருவரைத் தேர்வு செய்யலாம். இதில் டாட் பந்துகளை அதிகமாக வீசும் திறமை கொண்டவர், கடைசி கட்ட டெத் ஓவர்களை வீசி அனுபவமிக்கவர் பிராவோ. அதேபோல, பந்துவீச்சில் ரன்களை வழங்காமல் கட்டுக்கோப்பாக பந்துவீசக்கூடியவர் ஜடேஜா. இவர்கள் இருவருக்குத்தான் பெரும்பாலும் வாய்ப்பு இருக்கும்.

டெல்லி கேபிடல்ஸ் அணி

டெல்லி கேபிடல்ஸ் அணி, சூப்பர் ஓவரை கடந்த ஐபிஎல் தொடரில் சந்தித்துள்ளது. கேகேஆர் அணிக்கு எதிரான சூப்பர் ஓவர் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் இருவரும் களமிறங்கி வெளுத்து வாங்கினார்கள். தேவைப்பட்டால் மே.இ.தீவுகள் வீரர் ஷிம்ரன் ஹெட்மயரையும் களமிறக்கலாம். மூவருமே சூப்பர் ஓவரில் பந்துகளை வீணாக்காமல் ரன்களை அதிரடியாகச் சேர்க்கக்கூடியவர்கள்.

பந்துவீச்சில் டெல்லி அணியின் டெத் பவுலர் காகிசோ ரபாடாதான் சூப்பர் ஓவரில் பந்துவீசுவார். கடந்த ஆண்டு ரஸலை ஒரு யார்க்கர் மூலம் வீழ்த்தி வெற்றியை அணிக்குப் பெற்றுக்கொடுத்தவர் ரபாடா.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி சமீபத்தில் எந்த சூப்பர் ஓவர் ஆட்டத்திலும் விளையாடவில்லை என்றாலும், வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. குறிப்பாக அதிரடி சரவெடி கெயில், கேப்டன் கேஎல் ராகுல், மேக்ஸ்வெல், ஜிம்மி நீசம் ஆகியோர் இருக்கிறார்கள். இதில் 3 வீரர்களைத் தேர்வு செய்து களமிறக்கலாம். அதிலும் கே.எல். ராகுல், கெயில் இருவரும்தான் சூப்பர் ஓவரை விளையாடத் தகுதியானவர்கள்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை முகமது ஷமி மட்டுமே கட்டுக்கோப்பாகப் பந்துவீசக்கூடியவர். இந்திய அணியிலும் தன்னுடைய கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி, ஷமி, டெத் ஓவர் வீசுவதற்குத் தகுதியானவர். ஷமி இல்லாவிட்டால் முஜிப்புர் ரஹ்மானுக்கு வழங்கலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்றாலே சூப்பர் ஓவரின்போது யார் களமிறங்குவார்கள் என்பதைக் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். ஆம். ஆன்ட்ரூ ரஸல், தினேஷ் கார்த்திக், சமீபத்திய இணைவு மோர்கன். இதில் மூவரும் தங்களுக்குக் கிடைக்கும் பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்க விடுவார்கள்.

பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை வேகப்பந்துவீச்சு என்றால் பாட் கம்மின்ஸ், சுழற்பந்துவீச்சு என்றால் சுனில் நரேன். இருவரும் சூப்பர் ஓவரின்போது தவிர்க்க முடியாதவர்கள். தனது ஸ்விங் பந்துவீச்சாலும், துல்லியத்தாலும், வேகத்தாலும் எதிரணியைத் திணறவைப்பவர் கம்மின்ஸ், அதேபோல, நிதானமாகப் பந்துவீசி, ரன்களைக் குறைவாகக் கொடுத்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை கொண்டவர் நரேன். இருவருமே சூப்பர் ஓவருக்குத் தகுதியானவர்கள்.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணி வலுவான பேட்டிங் வரிசை கொண்டது என்றாலும், சூப்பர் ஓவரின்போது பொலார்ட், ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா மூவர் மட்டுமே தேறுவார்கள். இதில் சூப்பர் ஓவரைத் தொடங்க ரோஹித் சர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் சிறந்தவர்கள். விக்கெட் ஏதும் வீழ்ந்தால், பொலார்ட் களமிறங்கலாம்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை உலகத் தரம்வாய்ந்த டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஜஸ்பிரித் பும்ராதான் என்பதில் மாற்றமில்லை. சர்வதேச அளவில் பும்ராவின் டெத் பவுலிங் பேசப்பட்டு வரும் நிலையில் சூப்பர் ஓவருக்கும் பும்ராதான் சரியான தேர்வாக இருப்பார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

சூப்பர் ஓவரில் விளையாடுவதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏராளமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்ஸன், ஸ்டீப் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் எனச் சூழலுக்குத் தகுந்தாற்போல் ஆடக்கூடியவர்கள் இருக்கிறார்கள்.

ஆனாலும், சூப்பர் ஓவரைத் தொடங்குவதற்கு பட்லர், சாம்ஸனுக்குத்தான் முதலிடம். இவர்களில் ஒருவர் விக்கெட் இழந்தால், ஸ்டோக்ஸ், ஸ்மித்தில் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கலாம்.

ராஜஸ்தான் அணியின் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர். கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக சூப்பர் ஓவரில் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ஓவர்களே சிறந்த டெத்பவுலர் என்பதற்கு சாட்சி. ஆதலால், ஜோப்ரா ஆர்ச்சருக்குதான் வாய்ப்பு வழங்க வேண்டும். இதில் பென் ஸ்டோக்ஸ் பெயரையும் பரிசீலிக்கலாம். ஆனால், ஆர்ச்சருக்கு ஈடாக முன்னுரிமை அளிக்க முடியாது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை ஐபிஎல் தொடரில் சூப்பர் ஓவர்களைச் சந்தித்து இல்லை. இருப்பினும் அந்த அணியில் இதுபோன்ற நெருக்கடியான கால கட்டத்தில் அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்களுக்குப் பஞ்சமில்லை.

விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச் என மிரட்டும் வீரர்கள் இருக்கிறார்கள். இதில் சூப்பர் ஓவரை விராட் கோலியும், ஆரோன் பிஞ்சும் தொடங்கிட வேண்டும். இருவரும் பந்துகளை வீணடிக்காமல் அடித்து ஆடக்கூடியவர்கள். இவர்களில் ஒருவர் ஆட்டமிழந்தால் டிவில்லியர்ஸ் களமிறங்கலாம்.

பந்துவீச்சில் கிறிஸ் மோரிஸ், யஜுவேந்திர சாஹல் இருவர் மட்டுமே தேறுவார்கள். கிறிஸ் மோரிஸ் டி20 போட்டிகளில் அதிகமான அனுபவம் உள்ளவர் என்பதால், இதுபோன்ற நெருக்கடியான காலகட்டத்தில் நிச்சயம் சிறப்பாகச் செயல்படுவார். ஒரேவேளை சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்த வேண்டும் என அணி விரும்பினால் சாஹலைப் பயன்படுத்தலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x