Published : 17 Sep 2020 10:06 PM
Last Updated : 17 Sep 2020 10:06 PM

பந்துவீச்சுக்கு முன் ரன் அவுட்: ரசிகரின் விமர்சனமும், அஸ்வினின் பதிலும்

இந்திய சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், பந்துவீச்சுக்கு முன் எதிர்முனையில் ரன் அவுட் செய்வது குறித்து ஓரிரு நாட்களில் பேசுவதாக ரசிகர் ஒருவருக்குப் பதிலளித்துள்ளார்.

பந்துவீச்சாளர், பந்தை தன் கையிலிருந்து வீசும் முன், அவர் பக்கம் இருக்கும் பேட்ஸ்மேன் க்ரீஸை தாண்டி வந்தால் ரன் அவுட் செய்வதே மான்கேட். மான்கேடிங் (Mankdaing) என்று சொல்லப்படும் ரன் இந்த அவுட் முறை கிரிக்கெட் விளையாட்டில் விதிமுறைகளின் படி சரியானதே. ஆனால் அப்படிச் செய்வது விளையாட்டின் போட்டி மனப்பான்மைக்கு எதிரானது என்ற கருத்து பரவலாக உள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சில முறை இப்படியாக பந்துவீச்சாளர்கள் சில பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளனர். அப்படி அஸ்வின், கடந்த வருடம் ஐபிஎல் ஆட்டத்தின் போது, தன் முனையிலிருந்த ஜாஸ் பட்லர் க்ரீஸை விட்டு வெளியேறுவதைக் கவனித்து, பந்து வீச்சுக்கு முன் அவரை ரன் அவுட் செய்தார். இது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.

இன்று வரை அஸ்வின் செய்தது சரியா தவறா என்ற விவாதம் கிரிக்கெட் உலகில் நடைபெற்று வருகிறது. ஆனால் அஸ்வின் தான் செய்தது விதிமுறைகளின் படி சரியே என்பதால், தனது நம்பிக்கையில் உறுதியுடன் இருக்கிறார்.

கடந்த வருடம் பஞ்சாப் அணியிலிருந்த அஸ்வின் இம்முறை டெல்லி அணிக்கு விளையாடுகிறார். டெல்லி அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங், இதுபோல ரன் அவுட் செய்வதைக் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது, அஸ்வினுடன் கண்டிப்பாக இது பற்றி பேசுவேன் என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து அஸ்வினும் பாண்டிங்கும் இதுகுறித்து தொலைப்பேசியில் உரையாடியது அஸ்வினின் யூடியூப் சேனலில் பகிரப்பட்டது.

புதன்கிழமை அன்று ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த ஒருநாள் போட்டியின் போது ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், பந்துவீசும் முனையில் இருந்த அடில் ரஷித் க்ரீஸை விட்டு வெளியே வந்த போது அவரை ரன் அவுட் செய்யாமல் எச்சரித்தார். இதைக் ரசிகர் ஒருவர் "கற்றுக் கொள்ளுங்கள் அஸ்வின். இப்படித்தான் விளையாட வேண்டும்" என்று அஸ்வினைக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார்.

இதற்குப் பதிலளித்திருக்கும் அஸ்வின், "எனக்கு நியாயமாகச் சண்டையிடுவது பிடிக்கும். ஆனால் நாளை மறுநாள் வரை காத்திருங்கள். நான் இது குறித்து உங்களிடம் பேசுகிறேன். எனக்கென ஒரு நாள் ஓய்வு கொடுத்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் 2020, வரும் செப்டம்பர் 19 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது. அஷ்வின் உள்ளிட்ட பல வீரர்கள் தற்போது அங்கு முகாமிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x