Last Updated : 17 Sep, 2020 06:11 PM

 

Published : 17 Sep 2020 06:11 PM
Last Updated : 17 Sep 2020 06:11 PM

ஐபிஎல் சாம்பியன் பட்டம் வெல்லுமா டெல்லி கேபிடல்ஸ்? ரிக்கி பாண்டிங்கின் பயிற்சி, இளம் வீரர்கள் கூட்டம் பற்றி ஓர் அலசல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் டி20 போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லத் தகுதியுள்ள அணிகளில் முக்கியமாகப் பார்க்கப்படுவது டெல்லி கேபிடல்ஸ் அணி என்பதில் எந்தவிதமான சந்தேகமும்இல்லை.

கவுதம் கம்பீருக்குப் பின், ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன்ஷிப்பை ஏற்றதிலிருந்து அணியில் புதுவிதமான உற்சாகம், துடிப்பு, களத்தில் ஆவேசம், வெற்றிக்கான தாகம் போன்றவை இருப்பதைக் காண முடிகிறது. ஐபிஎல் தொடரில் 3-ம் இடம் பெற்றதே டெல்லி அணி புதிய உத்வேகத்தில் இருப்பதற்கான சாட்சியாகும்.

கடந்த தொடரில் கங்குலி, பாண்டிங் மேற்பார்வையில் அணி 3-வது இடம் வரை முன்னேறியது. ஆனால், இந்த முறை முழுமையாக தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பயிற்சியில் அணி தயாராகிறது.
அதிகமான அனுபவம் இரட்டை கூர் முனைகள் கொண்ட வாள் என்று சொல்வார்கள். இந்த உண்மையை டெல்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நன்கு உணர்ந்தவர்.

ஏனென்றால், டெல்லி கேபிடல்ஸ் அணியில் அதிகத் திறமையான பேட்ஸ்மேன்கள், அனுபவ வீரர்கள், 3 கேப்டன்கள், சுழற்பந்துவீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்கள், வெளிநாட்டு வீரர்கள் இருப்பதால் கேப்டனும், பயிற்சியாளரும் அணித் தேர்வைக் கவனமாகக் கையாள வேண்டும்.

அஜின்கயே ரஹானே, ரவிச்சந்திர அஸ்வின், அக்ஸர் படேல், அமித் மிஸ்ரா, ஜேஸன் ராய், பிரித்விஷா, தவண், ஸ்ரேயாஸ் அய்யர், அலெக்ஸ் கேரே, ரிஷப் பந்த், ஸ்டானிஸ், வோக்ஸ் என ஏராளமான திறமையான பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் இருப்பதால், எதிரிணியின் தன்மைக்கு ஏற்ப அணியைத் தேர்வு செய்தால் வெற்றி நிச்சயம்.

கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஜேஸன் ராய் (ரூ.1.50 கோடி), ஷிம்ரன் ஹெட்மயர் (ரூ.7.50 கோடி), கிறிஸ் வோக்ஸ் (ரூ.1.50), அலெக்ஸ் காரே (ரூ.240 கோடி), லலித் யாதவ் (ரூ.20 லட்சம்), மார்கஸ் ஸ்டானிஸ் (ரூ.4.80 கோடி), மோகித் சர்மா (ரூ.50 லட்சம்), துஷார் தேஷ்பாண்டே(ரூ.20 லட்சம்) ஆகியோரை டெல்லி அணி விலைக்கு வாங்கியுள்ளது.

கூடுதல் பலம்

இதில் ஜேஸன் ராய், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் தனது அதிரடி பேட்டிங்கால் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர்கள். பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் கலக்கும் கிறிஸ் வோக்ஸ், பிக்பாஷ் லீக்கில் அதிக ரன்கள் குவித்த மார்கஸ் ஸ்டானிஸ் ஆகியோர் நடுவரிசைக்குப் பலம் சேர்ப்பார்கள், இதில் ரிஷப் பந்துக்கு மாற்றாக விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரே இருப்பது கூடுதல் நம்பிக்கை.

ஏற்கெனவே டெல்லி அணி பேட்டிங்கில் வலுவாக இருக்கும் நிலையில், இந்த வீரர்கள் இருப்பதும் இன்னும் அசுரபலத்தை அளிக்கிறது.

டெல்லி அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கிலும், சுழற்பந்துவீச்சிலும் எந்த அணிக்கும் சவால் விடுக்கும் வகையில் அதீதமான வலுவுடன், பலதரப்பட்ட வீரர்களுடன் இருக்கிறது. ஆனால், வேகப்பந்துவீச்சில் மட்டும் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

டெல்லியின் அசுர பேட்டிங்

டெல்லி அணிக்கு தொடக்க வீரர்களாக யாரைக் களமிறக்குவது என்ற குழப்பம் இந்தத் தொடரில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு நிச்சயம் வரலாம். ஏனென்றால், யாரையும் நிராகரிக்க முடியாத நிலையில்தான் வீரர்கள் இருக்கிறார்கள்.

உலகத் தரம்வாய்ந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜேஸன் ராய், ஷிகர் தவண், பிரித்வி ஷா ஆகியோர் இருக்கிறார்கள். இதில் ஐபிஎல் தொடரில் 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 120க்கு மேல் இருக்கிறது. இவர்களில் திறமையான இருவரைத் தேர்வு செய்து ஆடத் தொடங்கச் செய்வது கடினம்தான். ஏனென்றால், இவர்கள் யாரும் நிராகரிக்க முடியாத திறமைசாலிகள்.

அதிலும் ஜேஸன் ராய், பிரித்வி ஷா களத்தில் நின்று அடிக்கத் தொடங்கிவிட்டால் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயரும். தவண் களத்தில் நின்று சாதிக்கக்கூடியவர். ஆதலால், தொடக்க வரிசை எதிரணியை மிரட்டும் விதத்திலும், வந்து பார் என்று எச்சரிக்கும் விதத்தில் இருக்கிறது.

இதில் கடந்த தொடரில் பிரித்வி ஷா அவசரப்பட்டு பல்வேறு போட்டிகளில் ஆட்டமிழப்பதை இந்த முறை குறைத்துக்கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இந்த முறை ரகானே டெல்லி அணிக்கு வந்துள்ளார். ரகானேயின் பேட்டிங் திறனை யாராலும் கணிக்க முடியாது. அவரை நடுவரிசையில் இறக்கி பரிசோதிப்பதை விட 3-வது வீரராகக் களமிறக்கி, அதன்பின் ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினால், அணியின் விக்கெட் வரிசை கூடுதல் ஸ்திரமாக இருக்கும்.
இது தவிர ஸ்ரேயாஸ் அய்யர் நடுவரிசைக்கு நம்பிக்கையளிக்கும் பேட்ஸ்மேன், ஆட்டம் சூடுபிடித்துவிட்டால், சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிடுவார்.

அடுத்த நிலையில் ரிஷப் பந்த், அலெக்ஸ் கேரே இருவர் இருக்கிறார்கள். இருவருமே திறமையான பேட்ஸ்மேன்கள் என்றாலும், ரிஷப் பந்திடம் பொறுமை இல்லை. ஆனால் அலெக்ஸ் நிதானமாக ஆடக்கூடியவர். ஆதலால், இருவருக்கும் கலந்து வாய்ப்பளித்தால் அணிக்கு கூடுதல் பலமாகும்.

ரிஷப் பந்துக்கு வாய்ப்பு

இந்திய அணியில் நம்பிக்கையளிக்கும் விக்கெட் கீப்பராக வலம்வர ரிஷப் பந்துக்கு இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாகும். இதில் சிறப்பாகச் செயல்பட்டால், நிச்சயம் இந்திய அணிக்குள் மீண்டும் செல்வார். இல்லாவிட்டால், கேஎல் ராகுலுக்கு விக்கெட் கீப்பர் பதவி நிரந்தரமாக வழங்கப்படலாம். ஆதலால், ரிஷப் பந்த் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இது தவிர நடுவரிசைக்கு ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டானிஸ், பேட்ஸ்மேன் ஷிம்ரன் ஹெட்மயர் என எதிரணிக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதில் கரீபியன் லீக்கில் கலக்கிய ஷிம்ரன் ஹெட்மயம், பிக்பாஷ் லீக்கில் அதிக ரன்கள் குவித்த ஸ்டானிஸ் இருவரும் அணியில் இருப்பது பேட்டிங்கையும் பந்துவீச்சையும் பலமாக்கும்.

ஆக பேட்டிங் வரிசையில் டெல்லி கேபிடல்ஸ் அணி அசுரபலத்துடன் இருக்கிறது. ஏறக்குறைய 7-வது விக்கெட் வரை களத்தில் நின்று விளையாடக்கூடிய வீரர்கள் இருப்பதால், விக்கெட் வீழ்த்துவது என்பது எதிரணிக்கு நிச்சயம் கடினமாகவே இருக்கும்.

அனுபவமான சுழற்பந்துவீச்சாளர்கள்

சுழற்பந்துவீச்சிலும் டெல்லி அணி அனுபவமான வீரர்களைக் கொண்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னணியில் இருக்கும் அமித் மிஸ்ரா, அனுபவ ரவிச்சந்திர அஸ்வின், அக்ஸர் படேல், சந்தீப் லாமிசானே ஆகியோர் இருக்கிறார்கள்.

ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், ரிஸ்ட் ஸ்பின் என 3 வகையிலும் பந்துவீசக்கூடிய சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பது எதிரணிக்குப் பெரும் குடைச்சலைக் கொடுக்கும்.

தொடக்க ஓவர்களை வீசி எதிரணியை திணறவிட்டவர் அஸ்வின் என்பதை கடந்த தொடரில் நிரூபித்துள்ளார். தவிர 6 ஓவர்களுக்கு மேல் பந்து வீச அக்ஸர் படேல், மிஸ்ரா இருக்கிறார்கள். இதில் அக்ஸர் படேல் ஓரளவுக்கு பேட்டிங் செய்யக்கூடியவர் என்பது கூடுதல் பலம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஆடுகங்கள் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால், பல அணிகள் சுழற்பந்துவீச்சுப் பிரிவைப் பலப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் டெல்லி கேபிடல்ஸ் அணி அனுபவமிக்க வீரர்களைப் பெற்றுள்ளது.

பலமில்லாத வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சில்தான் டெல்லி கேபிடல்ஸ் அணி கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். காகிசோ ரபாடா, இசாந்த் சர்மா, கிறிஸ் வோக்ஸ் மூவரைத் தவிர நம்பகத்தன்மையான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. கீமோ பால், மோகித் சர்மா 2 வீரர்கள் இருந்தாலும் ரன்களை வாரி வழங்குவார்கள். ஆவேஷ் கான் ஓரளவுக்கு நம்பக்கதன்மையுள்ள வீரர்.

கிறிஸ் வோக்ஸ் , ஸ்டானிஷ் நடுப்பகுதியில் பந்துவீசப் பயன்படுத்தலாம் என்றால், 4 வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே அனுமதியுள்ளது. ஹர்ஸ் படேல், துஷார் தேஷ் பாண்டே ஆகியோர் ஐபிஎல் தொடருக்குப் புதிது என்பதால், டெத் ஓவரை வீசுவதற்கு ரபாடா, இசாந்த் சர்மா, வோக்ஸ் மூவரைத் தவிர வேறு பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது பெரும் குறையாகும்.

கவலையளிக்கும் விஷயம்

டெல்லி அணியில் கவலையளிக்கும் விஷயம் என்பது ரிஷப் பந்த் பேட்டிங் . கடந்த ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிங்களில் நெருக்கடியான சூழல்களில் நிதானமாக ஆடாமல் விக்கெட்டை இழப்பது வாடிக்கையாக இருந்தது. பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லை என்பது ரிஷப் பந்தின் மீதான முக்கியக் குற்றச்சாட்டாகும். இந்த முறை பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லாத நிலையில் அலெக்ஸ் கேரேவுக்கு வாய்ப்பு செல்லலாம்.

இசாந்த் சர்மா அடிக்கடி காயத்தால் அவதிப்படுவது அணிக்கு மற்றொரு பின்னடைவாகும். கடந்த ஐபிஎல் தொடரில் சிறந்த எக்கானமி ரேட்டை இசாந்த் வெளிப்படுத்தினாலும் காயத்தால் சில போட்டிகளில் விலகியது அணிக்குப் பின்னடைவாக இருந்தது.

இது தவிர அணியில் ஆல்ரவுண்டர்கள் ஸ்டானிஸ், வோக்ஸ், லலித் யாதவ் ஆகிய 3 பேர் மட்டுேம இருப்பது அணிக்குப் பெரும் பின்னடைவாகும். மற்ற அணிகளில் 5 ஆல்ரவுண்டர்கள் வரை குறைந்தபட்சம் வைத்திருக்கும்போது, இங்கு ஆல்ரவுண்டர்கள் 3 பேர் இதில் ஒருவருக்கு அனுபவமே இ்ல்லை என்பது கவலைக்குரியது. கண்டிப்பாக அனைத்துப் போட்டிகளிலும் ஸ்டானிஸ், வோக்ஸ் இருக்கும் நிலையில்தான் அணி இருக்கிறது.

அணியில் ரகானே, அஸ்வின் போன்ற முன்னாள் கேப்டன்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் என 3 கேப்டன்கள் இருப்பதால் அணியை ஈகோ இல்லாமல் கொண்டு செல்வதும், வாய்பபுகளைச் சமஅளவில் சீராக வழங்குவதும் அணியின் வெற்றியைப் பாதிக்காமல் செல்லும்.

மற்ற வகையில் டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த முறை ஐபிஎல் தொடரில் எந்த அணிக்கும் நெருக்கடி கொடுத்து ஆட்டத்தைத் தன்பக்கம் மாற்றும் வல்லமை கொண்ட அணியாகவே இருக்கிறது. வேகப்பந்துவீச்சில் மட்டும் கவனம் செலுத்தினால், சாம்பியன் பட்டத்தை வெல்லக்கூடிய அணியாக டெல்லி கேபிடல்ஸ் அணி மாறும் என்பதில் சந்தேகமில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x