

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் தேவேந்திரா சிங் (49 கிலோ எடைப் பிரிவு) அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ள அவர், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் தேவேந்திரா சிங் தனது காலிறுதியில் 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தோனேசியாவின் கார்னெலிஸ் குவாங் லாங்குவை தோற்கடித்தார்.
தேவேந்திரா சிங் தனது அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் உஸ்பெகிஸ்தானின் ஹசன்பாய் டஸ்மேட்டோவை சந்திக்கிறார்.
அக்டோபரில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை தேவேந்திரா சிங் பெற்றுள்ளார். அந்தப் போட்டிதான் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான முதல் தகுதிச்சுற்று போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.