Published : 14 Sep 2020 08:38 AM
Last Updated : 14 Sep 2020 08:38 AM

71 ஆண்டுகளின் சாதனை...டோமினிக் தியம் அபாரம்: ஸ்வெரேவை வீழ்த்தி யுஎஸ் ஓபன் சாம்பியன் பட்டம் வென்றார்

யுஎஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவை 2 செட்கள் பின்னிலையிலிருந்து வந்து 5 செட்கள் அபாரமாக ஆடி வீழ்த்தி ஆஸ்திரிய வீரர் டோமினிக் தியம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.

71 ஆண்டுகால யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில், இறுதிப் போட்டியில் 2 செட்கள் பின்னடைவு கண்டு பிறகு மீண்டெழுந்து சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் ஆனார் தியம்.

2ம் தரவரிசை வீரர் தியம், 5ம் தரவரிசை ஸ்வெரேவை 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 (8/6) என்று வீழ்த்தினார். முதன் முதலாக இறுதிப் போட்டி டை பிரேக் மூலம் முடிவு காணப்பட்டது. இதற்கு முன்னர் 3 முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிக்கு முன்னேறிய தியம் தோல்விதான் கண்டார். முதல் முறையாக இன்று யுஎஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

2014-ல் பிளஷிங்மெடோஸில் மாரின் சிலிச்சுக்குப் பிறகு வெற்றி கண்ட வீரர் ஆனார் தியம். நோவக் ஜோகோவிச், நடால், பெடரர் என்ற மும்மூர்த்திகள் அல்லாது சுவிஸ் வீரர் வாவ்ரிங்கா (2016) யுஎஸ் ஓபன் பட்டம் வென்ற பிறகு தியம் தற்போது வென்றுள்ளார்.

முதல் செட்டில் ஸ்வரேவ் 4 ஏஸ்கள் 16 வின்னர்களை அடித்தார். பிரமாதமான சர்வ் மற்றும் வாலி ஷாட்களில் முதல் செட்டை ஸ்வரேவ்30 நிமிடங்களில் கைப்பற்றினார்.

2வது செட்டில் 5-1 என்று சடுதியில் முன்னேரிய ஸ்வரேவ் 3 செட்பாயிண்டுகளை விரயம் செய்தார். கடைசியில் 5வது செட் பாயிண்டில் வென்று 2வது செட்டையும் கைப்பற்றினார்.

3வது செட்டில் திருப்பு முனை ஏற்பட்டது, ஸ்வரேவின் 2வது சர்வ்கள் மிகவும் மெதுவாக வரத் தொடங்கின. அவரது ஃபோர்ஹேண்ட் ஷாட்கள் பலவீனம் வெளிப்படையானது. இதனையடுத்து 3, 4ம் செட்களை தியம் கைப்பற்ற, 5வது செட்டில் ஸ்வரேவ் 5-3 என்று கோப்பையை கைப்பற்றும் நிலையில் இருந்தார். ஆனால் அவரது சர்வ் கைக்கொடுக்காததை தியம் பயன்படுத்திக் கொண்டு 6-5 என்று முன்னிலை பெற்றார். அப்போது போட்டியை முடிக்கும் வாய்ப்பை தவற விட்டார் தியம், ஆட்டம் டை பிரேக்கிற்குச் சென்றது.

டை பிரேக்கில் ஸ்வரேவ் சர்வ்கள் மீண்டும் அவரைப் பாடாய்படுத்த இரண்டு டபுள் பால்ட்களைச் செய்ய தியம் 5-3 என்று முன்னிலை பெற்றார். பிறகு 8/6 என்று வெற்றி பெற்று கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார் தியம்.

ஜோகோவிச் லைன் அம்பயர் மீது பந்தை அடித்ததால் தகுதியிழப்பு செய்யப்பட்டதையடுத்து தியம் கோப்பையை வெல்ல வாய்ப்பு கிட்டியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x