Published : 14 Sep 2020 07:58 am

Updated : 14 Sep 2020 07:58 am

 

Published : 14 Sep 2020 07:58 AM
Last Updated : 14 Sep 2020 07:58 AM

63  ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் சரிந்து ‘சோக்கர்ஸ்’ ஆன ஆஸ்திரேலியா: இங்கிலாந்தின் விடாமுயற்சி வெற்றி

australia-collapses-as-england-wins-2nd-odi-by-24-runs

மான்செஸ்டரில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் நிலையிலிருந்த ஆஸ்திரேலியா திடீரென மளமளவென அவசரகதியில் விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய இங்கிலாந்து நம்ப முடியாத வெற்றி பெற்றதில் தொடர் 1-1 என்று சமன் செய்யப்பட்டுள்ளது.

ஓல்ட் ட்ராபர்டில் டாஸ் வென்ற மோர்கன் முதலில் பேட் செய்ய நினைத்தது அவர்களுக்கே பிரச்சினையாக 231 ரன்களயே இங்கிலாந்து எடுத்தது. அதிலும் டாம் கரன் (37), ஆதில் ரஷீத் (35), இணைந்து 149/8 லிருந்து ஸ்கோரை 225 ரன்களுக்கு கொண்டு சென்றது இங்கிலாந்தின் வெற்றியை தீர்மானித்தது.

தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை இழந்து 144/2 என்ற நிலையில் சுமார் 20 ஓவர்கள் மீதமிருக்கையில் வெற்றியை நோக்கி அனாயசமாகச் சென்று கொண்டிருந்தது. ஆனால் திடீர் சரிவு கண்டு 147/6, பிறகு 166/8 என்று சரிந்து கடைசியில் 207 ரன்களுக்கு மண்ணைக் கவ்வியது. 48.4 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் கதையை முடித்தது இங்கிலாந்து.

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கரன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

முதல் ஒருநாள் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் அசத்திய ஆஸ்திரேலியா புகட்டிய பாடத்திலிருந்து கற்றுக் கொண்ட இங்கிலாந்து இந்தப் போட்டியில் சற்றும் மனம் தளராது ‘அட்டாக், அட்டாக்’ கொள்கையைக் கடைப்பிடித்ததால் பலன் கண்டது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணிக்கு பேர்ஸ்டோ சொதப்பல் தொடக்கத்தைக் கொடுத்தார், மிட்செல் ஸ்டார்க் பந்து ஒன்று உடலுக்கு குறுக்காகச் செல்ல எட்ஜ் ஆகி கேரியிடம் கேட்ச் ஆகி ரன் எடுக்காமல் வெளியேறினார். ஸ்டார்க் (2/38), ஹேசில்வுட் (1/27) மீண்டும் பிரமாதமாக வீசி இங்கிலாந்தை முடக்கினர். பீல்டிங் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பலன், பிஞ்ச் கேப்டன்சியும் பிடியை விட்டுக் கொடுக்காத வகையில் இறுக்கியது.

ஜேசன் ராய், ஹேசில்வுட்டை 3 பவுண்டரிகள் அடித்து மொத்தம் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் கவரில் தட்டி விட்டு ஒரு விரைவு சிங்கிள் எடுக்கும் முயற்சியில் ஸ்டாய்னிஸின் அபார பீல்டிங், நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஜோ ரூட் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 73 பந்துகளில் 39 என்று தடுமாறினார், ஆடம் ஸாம்ப்பா வந்த பிறகு அவர் பந்தில் எட்ஜ் ஆகி பிஞ்சிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவரும் மோர்கனும் 50 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.

ஜோஸ் பட்லர் (3) வந்தார், பேட் கமின்ஸிடம் எல்.பி.ஆகி வெளியேறினார். மோர்கன் 5 பவுண்டரிகளுடன் 52 பந்துகளில் 42 ரன்கள் என்று அணியை தூக்கி நிறுத்த போராடிய வேளையில் ஆடம் ஸாம்ப்பா பந்து ஒன்று லெக் ஸ்பின் ஆகாமல் நேராக வர கால்காப்பில் வாங்கினார் மோர்கன், அது பிளம்ப் எல்.பி. ஆனால் ரிவியூவில்தான் அவுட் என்று உறுதி செய்யப்பட்டது. பிறகு சாம்ப்பா, கடந்த போட்டியில் சதம் அடித்த சாம் பில்லிங்ஸை பவுல்டு செய்தார். ஸாம்ப்பா 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

கிறிஸ் வோக்ஸ் 39 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ஹேசில்வுட்டின் ஒரே விக்கெட்டாக முடிய, சாம் கரன், ஸ்டார்க்கிடம் 1 ரன்னில் வெளியேற இங்கிலாந்து 149/8 என்று முடிந்திருக்கும் சூழ்நிலையில்தான் ஆதில் ரஷீத், டாம் கரண் இணைந்து மேட்ச் வின்னிங் கூட்டணி அமைத்து 76 ரன்களை 9வது விக்கெட்டுக்காக சுமார் 9 ஓவர்களில் சேர்த்தார்கள். முதலில் சிங்கிள்களை எடுத்த இந்த ஜோடி பிறகு கடைசி 5 ஓவர்களில் லாங் ஹேண்டில் பயன்படுத்தினர். ஸ்டார்க், கமின்ஸை கரன் 2 பவுண்டரிகள் அடித்தார், ரஷீத் பின்னி எடுத்தார், உலகின் நமப்ர் 1 பவுலர் கமின்ஸை ஒரே ஓவரில் 18 ரன்கள் விளாசினார். அதிலும் ஸ்கொயர் லெக் மேல் அடித்த ஹூக் சிக்ஸ் அபாரம். 37 ரன்களில் டாம் கரன், மார்ஷ் வீசிய கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஆர்ச்சர் ஒரு பவுண்டரி அடித்தார். ரஷீத் 27 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழந்தார். ஆஸ்திரேலிய அணியில் ஸாம்ப்பா 3 விக்கெட்டுகளை வீழ்த்த, ஸ்டார்க் 2 விக்கெட்டுகள், இங்கிலாந்து 231/9.

பிஞ்ச், லபுஷேன் கூட்டணிக்குப் பிறகு திடீர் சரிவு:

ஆஸ்திரேலியா அணி இலக்கை விரட்ட இறங்கிய போது ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் ஒரு பியூட்டி மூலம் வார்னர் (6) விக்கெட்டைக் கைப்பற்றினார். ஸ்டாய்னிஸ் இறங்கி கிறிஸ் வோக்ஸை மிகப்பிரமாதமான ஸ்ட்ரெய்ட் சிக்ஸ் விளாசினார், ஆனால் ஆர்ச்சரின் அதிவேக எகிறு பந்தில் கேட்ச் ஆவதைத் தவிர வேறு எதுவும் அவரால் செய்ய முடியவில்லை 9 ரன்களில் ஸ்டாய்னிஸ் வெளியேறினார்.

அப்போதுதான் பிஞ்ச் (73), லபுஷேன் (48) ஆகியோர் அமைதியாக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இங்கிலாந்தின் சிறந்த பவுலர் ரஷீத்தை அடித்து நொறுக்கினர், ரஷீத்தின் முதல் 3 ஓவர்களில் 27 ரன்கள் அடிக்கப்பட்டது.

ஏரோன் பிஞ்ச் தனது 27வது ஒருநாள் அரைசத்தை எடுத்தார். இருவரும் சதக்கூட்டணி அமைத்தனர். அப்போதுதான் 31வது ஓவரில் லபுஷேன் 48 ரன்களில் வோக்ஸ் பந்தில் எல்.பி. ஆனார், ரிவியூவில்தான் அவுட் அளிக்கப்பட்டது. இதுதான் திருப்பு முனையானது.

அடுத்த ஓவரில் மிட்செல் மார்ஷ் (1) விக்கெட்டை தாழ்வான பந்தில் பவுல்டு செய்து ஆர்ச்சர் வீழ்த்தினார். 73 ரன்கள் எடுத்து ஆடிவந்த பிஞ்ச், வோக்ஸ் பந்தில் பவுல்டு ஆனார். இந்நிலையில் மோர்கன், மிகப்பிரமாதமாக ஆர்ச்சர், வோக்ஸ் ஜோடியை தொடர்ந்து வீசச் செய்து அவர்கள் ஓவரை முடிக்கும் வரைப் பயன்படுத்தினார். இதன் பயன் அபாய வீரர் மேக்ஸ்வெலும் 1 ரன்னில் வோக்ஸ் பந்தில் பவுல்டு ஆனார்.

கமின்ஸ் 11 ரன்களில் சாம் கரன் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்தில் பவுல்டு ஆனார். ஸ்டார்க் அடுத்த பந்திலேயே எட்ஜ் ஆனார். ஸாம்ப்பா 2 ரன்களில் கரனின் 3வது விக்கெட்டாக முடிந்தார். அலெக்ஸ் கேரி 2 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஒரே நம்பிக்கை வீரராக ஆஸி.தரப்பில் கிரீசில் இருந்தார். 12 பந்துகளில் 27 ரன்கள் தேவையாக இருந்தது. இந்நிலையில் ரஷீத் பந்தை மேலேறி வந்து ஆட முயல பந்து சிக்கவில்லை, பட்லர் ஸ்டம்ப்டு செய்ய ஆஸ்திரேலியா கதை 207 ரன்களில் 49வது ஓவரில் முடிந்தது.

ஆட்ட நாயகனாக ஜோப்ரா ஆர்ச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரின் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் கடைசி போட்டி இதே மைதானத்தில் வரும் புதன் கிழமை நடைபெறுகிறது.


தவறவிடாதீர்!

Australia collapses as England wins 2nd ODI by 24 runsஇங்கிலாந்து வெற்றிஆஸ்திரேலியா தோல்விகிரிக்கெட்ரஷீத்டாம் கரன்சாம் கரன்ஆர்ச்சர்வோக்ஸ்பிஞ்ச்லபுஷேன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author