

பென் ஸ்டோக்ஸின் சர்ச்சைக்குரிய அவுட் விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் தவறிழைத்து விட்டார் என்கிறார் பிரெண்டன் மெக்கல்லம்.
களத்தடுப்புக்கு இடையூறு செய்ததாக 2-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அவுட் கொடுக்கப்பட்டது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் மீது நியூஸிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
டெய்லி மெயிலில் மெக்கல்லம் இது பற்றி எழுதிய பத்தியில், “ஸ்மித் முறையீடு செய்ய வேண்டாம் என்ற முடிவை எடுத்திருக்கலாம், இதன் மூலம் அவரது தலைமையில் கிரிக்கெட் ஆட்டத்தை அதன் நல்லுணர்வுடன் ஆட வேண்டும் என்ற ஒரு விஷயத்தை அவர் அடிக்கோடிட்டு காட்டியிருக்கலாம், ஆனால் அவரோ மாற்று முடிவை எடுத்தது கடும் ஏமாற்றம் அளிக்கிறது.
என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்: வெற்றி என்பது முக்கியம்தான், ஆனால் நீண்ட நாட்கள் கிரிக்கெட் ஆடும் போது, சில விஷயங்களை, மதிப்பீடுகளை நாம் காக்கத் தவறியது தெரியவரும், முறையீட்டை வாபஸ் பெறாதது மூலம் ஸ்மித் தனது முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் ஒருநாள் வருந்தவே செய்வார்.
நாங்களாக இருந்தால் முறையீடு செய்திருக்க மாட்டோம். அந்தத் தருணத்தில் இடையூறு விவகாரம் எழுப்பப் பட்டிருக்கக் கூடாது. நான் அந்த அவுட்டைப் பார்த்த வரையில், பென் ஸ்டோக்ஸ் உடனடியான செயல் தற்காப்புக்காகவே என்று தெரிந்தது. இதில் ஸ்லோ-மோஷன் ரீப்ளே தேவையே இல்லை. ஏனெனில் இது அந்தக் கணத்தில் விநாடிக்கும் குறைவான காலநேரத்தில் எடுக்கக் கூடிய முடிவு.
அவரது கையில் பந்து தாக்கியது என்பது நல்ல அறிகுறியல்ல. நடுவர் தீர்ப்பெல்லாம் ஒரு விஷயம் அல்ல. எது முக்கியமெனில் கிரிக்கெட் ஆட்டத்தை நாம் ஆடும் விதம்தான். ஸ்மித் தவறிழைத்து விட்டதாகவே நான் கருதுகிறேன். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, என்றாவது ஒருநாள் இந்த நிகழ்வை அவர்கள் திரும்பிப் பார்க்கும் போது, அவர்கள் செய்தது அதன் விளைவுகளுக்கான மதிப்பை பெற்றுத் தரவில்லை என்பதை உணர்வார்கள், தவறுக்காக ஒருநாள் வருந்துவார்கள்.
ஒரு முறை போட்டி ஒன்றில் குமார் சங்கக்காரா சதம் எடுத்ததை கொண்டாடுவதற்காக அவரது கூட்டாளி முத்தையா முரளிதரன் கிரீஸை விட்டு நகந்த போது அவரை நாங்கள் ரன் அவுட் செய்தோம். அதன் பிறகு அதற்காக நாங்கள் வருந்தாத நாட்களே இல்லை. அதே போல் ஸ்மித்தும் இதற்காக ஒருநாள் வருந்தினால் நல்லதுதான்” இவ்வாறு கூறியுள்ளார் பிரெண்டன் மெக்கல்லம்.