Published : 13 Sep 2020 02:54 PM
Last Updated : 13 Sep 2020 02:54 PM

2008-ல் ஐபிஎல் தொடங்கும்போது சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக தோனியை முதலி்ல் தேர்வு செய்யவில்லை தெரியுமா? புதிர்போடும் பத்ரிநாத்

சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி : கோப்புப்படம்

சென்னை


2008-ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடர் தொடங்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக முதலில் தோனி தேர்வு செய்யப்படவில்லை என்று முன்னாள் சிஎஸ்கே வீரர் எஸ்.பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டு இதுவரை 12 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் வெற்றிகரமான கேப்டனாக சிஎஸ்கே அணிக்கு இருந்து வருபவர் எம்எஸ் தோனிதான். சிஎஸ்கே அணியை வழிநடத்தி இதுவரை 3 கோப்பைகளை பெற்றுக் கொடுத்துள்ளார் தோனி. இந்திய அணிக்கும் தோனியின் பங்களிப்பு அபாரமானது.

இந்திய அணியின் வரலாற்றிலேயே ஐசிசியின் 3 விதமான கோப்பைகளையும் அணிக்கு பெற்றுக்கொடுத்த ஒரே கேப்டன் எனும் பெருமையை தோனிக்கு உண்டு.

ஆனால் 2008ல் ஐபிஎல் தொடர் தொடங்கும்போது, சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக முதலில் அணி நிர்வாகம் தோனியைத் தேர்வு செய்யாமல் வேறு ஒருவீரரைத் தேர்வு செய்துள்ளது எனும் தகவல் வெளியாகியுள்ளது.

சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் எஸ். பத்ரிநாத் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டிஅளித்தார். அப்போது அவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக முதலில் தோனியைத் தேர்வு செய்ய நிர்வாகம் முன்னுரிமை அளிக்கவில்லை. அணி நிர்வாகம் வீரேந்திர சேவாக்கைத்தான் சிஎஸ்கே கேப்டனாக நியமிக்க விருப்பமாக இருந்தது.

ஆனால், உள்நாட்டுப் போட்டிகளில் சேவாக் டெல்லி சார்பில் விளையாடியதால், சேவாக் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடவே விருப்பமாக இருந்தார். இதனால் டெல்லி அணியிலேயே சேவாக் விளையாட சிஎஸ்கே நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

இதனால் அடுத்த வாய்ப்பை தேடலாம் என்று அணி நிர்வாகம் ஆலோசித்த நிலையில்தான் ஏலத்தில் தோனியை ரூ.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தனர். 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்திய அணி தோனி தலைமையில் வென்றதால், அவரை ஒப்பந்தம் செய்தனர்.

என்னைப் பொருத்தவரை சிஎஸ்கே அணிக்கு தோனி வந்தது என்பது ஒரே கல்லில் 3 பறவைகளை வீழ்த்தியதற்கு சமம்.

முதலில் தோனி உலகிலேயே சிறந்த கேப்டன். இவரின் தலைமையில் பெரும்பாலான கோப்பைகள் வெல்லப்பட்டுவிட்டன.

2-வது தோனி மிகச்சிறந்த ஃபினிஷர். உலகளவில் டி20 அணிக்கு சிறந்த ஃபினிஷர் என்பது மிகவும் முக்கியம். இன்றுள்ள அனைத்து சிறந்த அணிகளைப் பார்த்தால்கூட, மும்பை இந்தியன்ஸில் பொலார்ட், கொல்கத்தா நைட்ரைடர்ஸில் ஆன்ட்ரூ ரஸல், சிஎஸ்கேயில் தோனி என ஃபினிஷர்களைச் சொல்லலாம்.

மூன்றாவது உலகிலேயே மிகச்சிறந்த விக்கெட் கீப்பர். நான் பார்த்தவரையில் மிகச்சிறந்த, ரன்களை வி்ட்டுக்கொடுக்காத பாதுகாப்பான விக்கெட் கீப்பர் தோனி.

இவ்வாறு பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x