

ஆஸ்திரேலியா வென்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் ஆடவில்லை, 2வது போட்டியிலும் அவர் ஆட மாட்டார், காரணம் வலைப்பயிற்சியில் பயிற்சி உதவியாளர் செய்த த்ரோ ஸ்மித் மண்டையைப் பதம் பார்த்தது.
இதனையடுத்து அவர் மூளையில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியும் கன்கஷன் டெஸ்ட் ஒன்று முடிந்துள்ளது, 2வது கன்கஷன் டெஸ்ட் எடுத்த பிறகே அவர் ஆடுவாரா இல்லை மாட்டாரா என்பது உறுதியாகும்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ஸ்மித் நிலையை மேலும் மதிப்பீடு செய்த பிறகே அவர் ஆட்டத்துக்குத் தயாரா என்பது தெரியவரும், என்றார்.
ஏற்கெனவே ஜோப்ரா ஆர்ச்சரின் அதிவேக எகிறு பந்தில் மண்டையில் அடி வாங்கி ஸ்மித், டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சையும் ஒரு டெஸ்ட் போட்டியையும் ஆட முடியாமல் இழந்தார்.
அதே போல் மிட்செல் ஸ்டார்க் களத்தில் வழுக்கி விழுந்ததில் காயமடைந்ததால் ஞாயிறன்று நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.
ஞாயிறு போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் 2015-க்குப் பிறகு இருதரப்பு தொடரை இங்கிலாந்துக்கு எதிராக வெல்லும். இயன் மோர்கனின் கேப்டன்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி 14 போட்டிகளில் 11-ல் இங்கிலாந்து வென்றுள்ளது.