

வரும் டிசம்பரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த திட்டமிடப் பட்டுள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்திடம் இனி எதுவும் கேட்கமாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹாரி யார் கான் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லை யில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றம் காரணமாக இரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்துவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் சஹாரியார் கான் மேலும் கூறியிருப்பதாவது: இரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் தொடர் குறித்து போதுமான அளவுக்கு பேசிவிட்டோம் என நினைக்கிறேன். அது தொடர்பாக இனி எதுவும் கேட்கமாட்டோம். இனிமேல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான் முடிவு எடுக்க வேண்டும்.கிரிக்கெட் தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நாங்கள் எழுதிய கடிதம் இன்னும் அவர்களுடைய அரசுக்கு அனுப்பப்படவில்லை என்பது எங்களுக்கு தெரிய வந்த போது நாங்கள் மிகுந்த கவலை யடைந்தோம்.
இந்த தொடரைப் பொறுத்த வரையில் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. எனவே தேவைப்பட்டால் நாங்கள் ஐசிசி யின் உதவியை நாடுவோம். அரசியலையும், விளையாட்டையும் இணைத்துப் பார்க்கக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
கடந்த காலங்களி லும் இரு நாடுகள் இடையே பதற்ற மான சூழல் நிலவி வந்துள்ளது. ஆனால் அப்போதெல்லாம் கிரிக் கெட் போட்டிகள் நடைபெற்றன.
2007-ல் இருந்து இரு நாடுகள் இடையே டெஸ்ட் தொடர் நடை பெறவில்லை. இனிமேல் நாங்கள் அவர்கள் பின்னால் ஓட முடியாது. இனி அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
இரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் தொடர் மீண்டும் நடை பெற வேண்டியதன் முக்கியத் துவத்தை அவர்கள் உணர வேண்டும் என்றார்.